பிரீமியம் ஸ்டோரி

‘கெம்பா' கார்த்திகேயன்
படம் என்.விவேக்
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்

பிறர் அபிப்பிராயங்களைக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள்; திசைக்காட்டிகள் இருப்பது உங்களுக்குள்தான்!" என்று கல்வி, வேலை யைத் தேர்ந்தெடுப்பது பற்றி சென்ற இதழில் பகிர்ந்திருந்ததைத் தொடர்ந்து நிறைய கேள்விகள்!

ஆட்கள் தேவை !

"அடுத்த 5 ஆண்டுகளில் எந்தெந்த துறைகள் சிறந்து விளங்கும்?"

"பெண்களுக்கு அதிகம் ஏற்ற துறைகள் என்னென்ன?"

"வெளிநாட்டு சம்பளம் இங்கு கிடைப்பது போல சில துறைகள் சொல்லுங்களேன்..?"

இவற்றுக்கெல்லாம் புள்ளி விவரங்க ளோடு பதில் சொல்லலாம் என்று சில ஆய்வுகளைப் படித்தேன். ஒரு உண்மை புரிந்தது. எல்லோரும் சொல்லும் பட்டியல் கிட்டத்தட்ட ஒன்றுதான். எந்தத் துறைக்கு எத்தனையாவது இடம் என்பதில்தான் வேறு பாடு. இதைவிட முக்கியமான ஒன்று... 80% துறை கள் பெண்களுக்கு ஏற்றதாகவும், பெண்களிட முள்ள தனித் திறன்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிந்தன!

சரி, பட்டியலைப் பார்ப்போம்

1. தகவல் தொழில்நுட்பம் (IT)

2. வங்கித் துறை (Banking)

3. காப்பீடு (Insurance)

4. சில்லறை வியாபாரம் (Retail)

5. கட்டுமானம் (Infrastructure)

6. கல்வி (Education)

7. மனித வளம் (Human Resources)

8. சரக்கு போக்குவரத்து (Logistics)

9. ஊடகம் (Media)

10. மக்கள் தொடர்பு (Public Relations)

இதைத் தவிர, விருந்தோம்பல் (Hospitality), சுகாதாரம் (Health Care), சுற்றுலா (Travel & Tourism) என சிலவற்றையும் சேர்க்கலாம். இதைத் தீர்மானமான பட்டியலாக எடுத்துக் கொள்ளாமல், நாளைய போக்குகள் (trends) பற்றிய ஆய்வு முடிவுகளாக மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றில் எவை/ஏன் பெண்களுக்குப் பொருந்தும் என்று பார்ப்பதற்கு முன், எல்லாத் துறைகளையும் ஒரு முறை அலசுவோம்...

தகவல் தொழில்நுட்பம் (IT & BPO)

தற்போதைய தேக்கத்தில்இருந்து தேறி, பழைய வேகத்தில் இவை முன்னேறத் துவங்கும். அதற்கான அமைப்பும், கல்வித் திட்டமும், வளர்ச்சியும் உள்ளதால் இப்போதே பெரிய நிறுவனங்கள் மீண்டும் ஆட்களை எடுக்க கேம்பஸ் தேடி வர ஆரம்பித்து விட்டன.

வங்கி மற்றும் காப்பீடு (Banking & Insurance)

தேக்க நிலையிலேயே வளர்ந்து வந்த துறைகள் என்றாலும், இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை கொண்ட நாட்டில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைக்கு பெரிய எதிர்காலம் உள்ளது.

சில்லறை வியாபாரம் (Retail)

பெரிய ஆரவாரத்துடன் வந்து சில ஆரம்பத் தோல்விகள் கண்ட துறை இது. ஆனாலும், நகர வளர்ச்சி, அந்நிய முதலீடு, நுகர்வோர் ரசனை மாற்றம் போன்ற காரணங்கள் இருப்பதாலும், அமைப்பு சார்ந்த சில்லறை வியாபாரத்துக்கு (Organised Retail) வாய்ப்புகள் 90% அளவுக்கும் மேல் உள்ளதாலும், இத்துறை அசுர வளர்ச்சி கொள்ளும்.

கட்டுமானம் (Infrastructure)

கட்டுமானம் செழிக்க அரசும், பெரும் தொழில் நிறுவனங்களும் அக்கறை காட்டுவதால், கண்ணை மூடிக்கொண்டு இத்துறைகளில் சேரலாம். சமீபகாலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொய்வு ஏற்பட்டபோது, சிவில் இன்ஜீனியரிங் (Civil Engineering) மீண்டும் பழைய மவுசுக்கு வந்தது. இது, மக்களின் மனோபாவ மாற்றத்தையும் காட்டுகிறது.

கல்வி (Education)

செருப்பு அணியாதவர்கள் வாழும் ஊரில், காலணி வியாபாரிக்கு எப்படி வாய்ப்பு இருக்குமோ... அந்த அளவுக்கு இந்தியாவில் கல்வித் துறைக்கு வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. அதிகரித்து வரும் மக்கள் தொகையும், படிப்பறிவும், வேலைத் திறனும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கல்வித்துறையில் பெரிய டிமாண்ட்டை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் பலரும் Ôகல்வித் தந்தை' ஆகும் காரணமும் இதுதான். தவிர, எந்தப் பொருளாதார தேக்க நிலையும் பாதிக்காத துறை கல்வித் துறை! இந்தியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு (தேர்ந்த திறமையான ஆசிரியர்களுக்கு) உலகமெங்கும் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது தெரியுமா?

மனித வளம் (Human Resources)

எல்லா அமைப்பு சார்ந்த தொழில்களிலும் 200 பணியாளர்களுக்கு ஒரு Ôஹெ.ஆர். அதிகாரி' என்ற விகிதத்தில் அசுரத்தனமாக வளர்ந்து வருகிறது மனித வளத் துறை. வேலைக்கு ஆளெடுப்பதும், சம்பளம் பட்டுவாடா செய்வது மட்டுமே என்று இருந்த நிலை மாறி, இன்று பணியாளர் பங்களிப்பு பற்றி யோசிக்கும் ஹெ.ஆர். ஆக மாறியுள்ளது இந்த துறை. மக்கள் நிர்வாகம் சிக்கலாக இருந்தாலும், இதைச் சவாலாக எடுத்துக் கொள்வதால் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஹெ.ஆர். துறையில் சேர்வதற்கான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

சரக்கு போக்குவரத்து (Logistics)

தொழில் வளர்ச்சியும் நுகர்வோரின் அவசரத் தேவையும் இன்று சரக்கு போக்குவரத்தை ஒரு அமைப்பு சார்ந்த தொழிலாக மாற்றியுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இது விஸ்வரூபமெடுத்து மிகப்பெரிய துறையாக மாறும். அப்போது இதற்கான படிப்புகளுக்கு அவசியம் வரும்.

ஊடகம் (Media)

கண் விழித்து கண் மூடும் வரை நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது ஊடகத் துறை. கண்களில் காணாவிட்டால், அந்த நாளே விடியாதது போல தோன்றச் செய்யும் பத்திரிகை; ஆணி அடித்தது போல உட்கார வைக்கும் தொலைக்காட்சி; ரேடியோவின் மறுபிறவியான எஃப்.எம்.; வளைத்துப் போடும் வலைதளம்; காதோடு இணைந்துவிட்ட கைபேசி; எங்கு திரும்பினாலும் நம்மை ஈர்க்கும் விளம்பரங்கள்; உலகையே ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்துக் கொள்ளும் சினிமா என இத்துறையில் வாய்ப்புகள் அகலமோ அகலம்! படைக்க, விநியோகிக்க, நிர்வகிக்க என ஊடகத் துறையில் நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதேபோலத்தான், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் (Corporate Communication) என வளர்ந்து வரும் மக்கள் தொடர்பு துறையும்.

விருந்தோம்பல், சுகாதாரம் (Hospitality, Health Care)

என்றும் நிரம்பி வழியும் எல்லா வகை ஹோட்டல்களும், கேளிக்கை கூடங்களும் விருந்தோம்பல் துறை இங்கு முதிர்ந்த துறையாக மாறி வருவதைத்தான் காட்டுகிறது. அதேபோல நம் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பாதுகாக்கும் துறையாக வளர்ந்துள்ளது சுகாதார துறை. எமர்ஜென்ஸி உதவி முதல் கவுன்சிலிங், யோகா, ஆயுர்வேதம் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்தத் துறையில், கோடிகோடியாக பணம் புழங்கும் தொழிலகங்கள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்!

சுற்றுலா (Travel & Tourism)

இந்தத் துறையின் வளர்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. மனிதனுக்கு தேடல் இருக்கும் வரை, இதற்கு வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். சின்னச் சின்ன நகரங்களில்கூட, சுற்றுலாவை அமைத்துத் தரும் நிறுவனங்கள் முளைவிட்டுக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி! இவை தவிர, இன்ட்டீரியர் டிசைன் (Interior design), ஃபேஷன் (Fashion), லெஷர் (Leisure), பியூட்டி கேர் (Beauty Care) போன்ற துறைகள் இப்போதெல்லாம் கொழுத்த பணக்காரர்களை மட்டும் இலக்காக்காமல், அனைத்து தர மக்களிடையேயும் பரவி வருகிறது. முடி வெட்ட பார்லர் சென்று, ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இன்ன பிற அழகு சிகிச்சைகள் மேற்கொள்வதும், தோல் நிற மாற்றம் விஞ்ஞான ரீதியாக சாத்தியமில்லை என்று தெரிந்தும் மாத மளிகை லிஸ்டில் சிகப்பழகு களிம்பு வாங்கும் ஆண்களும் (ஆம்... அதிகம் ஆண்கள்தானாம்!), பெண்களும் இந்தத் துறைகள் செழிக்க காரணமாகிறார்கள்.

சரி, மேலே பட்டியலிட்டதில் 80% துறைகளில் பெண்கள் பிரகாசிக்கலாம் என்றேனே... ஏன்? பெண்களுக்கான தனித்திறமைகள் அங்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றேனே... எப்படி?

இதுதான் இந்த இதழுக்கான ஹோம்வொர்க். செய்து வையுங்கள்; அட்லீஸ்ட் ‘கெஸ்’ செய்து வையுங்கள். தொடர்ந்து பேசுவோம்!

தேடுவோம்...

ஆட்கள் தேவை !
 
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு