பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அவள்.blogspot.com
அவள்.blogspot.com
அவள் blogspot.com

அவள்.blogspot.com

பால்யம் இல்லாத பால்யம்!

அவள்.blogspot.com

ஏதோ ஒரு புத்தகத்தில், யாரோ எழுதிய குயவனின் கதையைப் படித்ததும் சிறுவயதில் நானும் என் தோழிகளும் களிமண்ணில் சட்டி பானை செய்து, 'சோறாக்கி' விளையாடிய நினைவுகள் எழுந்தன எனக்குள்.

அது தந்த மகிழ்ச்சி முகத்திலும் பரவ, என்னையும் அறியாமல் ஒரு மென் புன்னகை பூத்துவிட்டது. கம்ப்யூட்டரின் முன்பு அமர்ந்து 'கேம்ஸ்' விளையாடிக்கொண்டிருந்த என் எட்டு வயது மகள் அதைக் கவனித்து, "என்னம்மா... ஏதாச்சும் ஜோக்ஸா..?' என்றாள் பார்வையை கணினி திரையில் பதித்து, குரலை மட்டும் என்னிடம் அனுப்பி.

கிட்டத்தட்ட அவள் வயதில் நான் அனுபவித்த அந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை அவளிடம் பகிர்ந்துகொள்ள துள்ளியது என் மனம். காகிதக் கப்பல் விடும் குழந்தையின் குதூகலத்துடன் அவளிடம் சொல்ல ஆரம்பித்தேன் என் பால்ய தோழிகள், எங்களின் விளையாட்டுகள், அதன் ஆனந்தங்களை!

"என்ன... நீங்களும் உங்க ஃப்ரெண்ட்ஸ§ம் களிமண்ணைக் கையால தொட்டு சட்டி, பானை செஞ்சு விளையாடுவீங்களா..? ச்சீ ச்சீ... டர்ட்டி. ஸ்டாப் யுவர் ஸ்டோரிஸ். போர்..." என்று கம்ப்யூட்டரை 'ஆஃப்' செய்துவிட்டு எழுந்து ஓடியவள், டி.வி-யை ஆன் செய்தாள். 'அனிமல் ப்ளானெட்'டில் 'த ஹன்ட்' நிகழ்ச்சியில், அந்தப் பெண் சிங்கம் ஒரு மானை துரத்திப் பிடித்து, துள்ள துள்ள இரையாக்கிக் கொண்டிருந்ததைச் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்... ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடியே!

என் உற்சாகம் எல்லாம் உருகி ஓடிவிட, ஒரு கேள்வி மட்டும் மிஞ்சியது-

"இவள் ஆசையுடன் அசைபோடவும், தன் பிள்ளையிடம் பகிர்ந்துகொள்ளவும் பால்ய நண்பர்களாய், நினைவுகளாய் என்ன இருக்கும் இவளிடம்... இந்தக் கணினியும், தொலைக்காட்சிப் பெட்டியுமா?!"

நெஞ்சு கனத்தது!

- நித்யா பாலாஜி, நியூ ஜெர்ஸி

ஏப்ரல், மேயிலும் பசுமைதான்!

அவள்.blogspot.com

தினமும் பேப்பரைத் திறந்தால், சம்மர் சேல், சலுகை விலை என சகட்டுமேனிக்கு குவிகின்றன அறிவிப்புகள். காட்டன் உடைகள் சில வாங்கலாமென தி.நகருக்கு ஷாப்பிங் கிளம்பினேன். 'போத்தீஸ்' கடையின் வாசலில் கொளுத்தும் வெயிலிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுஞ்சோலைப் போல் பந்தல் அமைத்திருந்ததைப் பார்த்ததும், உள்ளே நுழைவதற்கான ஆவல் ஏற்பட்டது. நுழைந்தபின் அவர்களின் நூதன விளம்பரம், ரசிக்க வைத்தது.

ரெண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு செடிகளும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மாமரம், சப்போட்டா, கொய்யா, தென்னை போன்ற மரக் கன்றுகளும், ரோஜா, செம்பருத்தி, நந்தியாவட்டை, மல்லிகை போன்ற பூச்செடிகளும், ஐந்நூறு ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு வேம்பு, புங்கன், அசோகா போன்ற மரக் கன்றுகளுள் ஏதேனும் ஒன்றையும் இலவசமாக தருகின்றனர். அதையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். மண்புழு உரமும் இலவசம். இது தவிர, காய்கறி விதைகளும் உண்டாம்!

வாடிக்கையாளர்களைக் கவரும் வியாபார யுக்திதான் இது என்றாலும், நம் பூமியின் ஆயுளை 'வெப்பமயமாதல்' பிரச்னைகள் குறுக்கிக் கொண்டிருக்கும் இந்த அபாய நேரத்தில், 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்று தன் வாடிக்கையாளர்களின் கைகளில் இப்படி பசுஞ்சிரிப்பை கொடுக்கும் போத்தீஸின் இந்த முயற்சிக்கு வரவேற்புகள், பாராட்டுகள்!

- பிரேமா மகள், சென்னை

வெள்ளைச் சிரிப்புகள்!

அவள்.blogspot.com

போனால் வராது பள்ளிப்பருவம். பாவாடை, தாவணியில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து மகிழ்ந்த காலம் அது. முந்தானை காற்றில் சிலுசிலுத்துப் பறக்க, ரெட்டை ஜடையில் உதிரும் மல்லிப் பூக்களும், மார்போடு அனைத்த புத்தகங்களும், அரட்டைகளும், கேலிகளும், சிரிப்புகளுமாக பள்ளி செல்வோம். இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே போய் சேரும்வரைகூட தீராது எங்களின் பேச்சு.

திருமணமாகி பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் என் கணவரின் அலுவலக நிர்வாகம் நடத்தும் ஒரு பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. அதுவரை கூட்டுக்குள்ளேயே கிடந்த எனக்கு, விட்டு வெளியேறிச் செல்ல அது ஒரு வாய்ப்பாக அமைந்ததால், நாற்பது வயதிலும் உற்சாகமாக தயாரானேன். அரக்கபரக்க சமையலை முடித்து, கணவரையும், குழந்தைகளையும் அனுப்பிவிட்டு ஓடினேன் பள்ளிக்கு.

இந்த பத்து ஆண்டுகளாக பக்கத்து வீடு தவிர, பெரிதாக நட்பு பாராட்ட வாய்ப்பில்லாமல் போன எனக்கு, பள்ளித் தோழிகள் போல மீண்டும் ஒரு பெரிய நட்பு வட்டம் கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்துச் சென்றேன். ஆனால், அந்த சூழல் அங்கு இல்லை. சக டீச்சர்களுடன் வீட்டு விஷயங்கள், பத்திரிகை செய்திகள் என்று எதை பகிர்ந்து கொண்டாலும், எல்லாமே சீரியஸான விவாதத்திலேயே முடிந்தன.

ஒன்று புரிந்தது... பள்ளிப் பருவம் போல வெள்ளை சிரிப்புகள் சிந்த, அந்த வெள்ளை மனது இப்போது எங்களிடம் இல்லை. பல ஒப்பீடுகள், ஈகோக்கள், விருப்பங்கள், வெறுப்புகள் என்று ஏறி, மாறிப்போயிருக்கிறது எங்கள் மனது என்ற நிதர்சனம் புரிய, வேலைக்கு 'குட்பை' சொல்லிவிட்டேன்.

இப்போதெல்லாம் பள்ளி நேரத்தில் எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு வாசலுக்கு வந்துவிடுகிறேன். சீருடையில் தங்கள் தோழிகளுடன் பேச்சும் சிரிப்புமாக நகரும் அந்தப் பிள்ளைகளின் உலகத்தை ரசிக்கிறேன். என்னையும், என் தோழிகளையும் அவர்களிடம் பார்க்கிறேன்.

கடந்த காலம் கடந்ததுதான். ஆனாலும், எண்ணம் என்னும் ஆசைப் படகு ஓடிக் கொண்டேயிருக்கிறது என் நினைவுக் கடலில்!

- எஸ்.மங்கை, குளித்தலை

கற்றுக்கொடுப்பது தமிழினம்... இப்படியெல்லாமா?!

அவள்.blogspot.com

மலேசியாவில் வாழும் இந்திய பிரஜையான என் மாமனார், மாமியார், மைத்துனர் என குடும்பத்தோடு அனைவரும் சமீபத்தில் இந்தியா சென்றனர். என் புகுந்த வீட்டினர் வந்து புகழ்வார்கள் என் தாய் தமிழகத்தை என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், என் காது தகிக்க திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

"மரியாதையுடன் பேசத் தெரியாத மனிதர்கள். பெண்கள் நடக்கிறார்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் வெட்கமே இல்லாமல், ஆங்காங்கே சிறுநீர், மலம் கழிப்பதும் கேவலம். சுத்தம், சுகாதாரமே இல்லாத ஊர்" என்றனர்.

தமிழகத்தின் மீது பெருமரியாதை கொண்ட நான், 'கற்றுக் கொடுப்பது தமிழினம்' என்பதில் பெருமை கொள்பவள். ஆனால், நிஜம் அவர்கள் சொல்வது போலல்லவா இருக்கிறது?!

பன்மைக்கும் மரியாதை தந்து பேசும் ஒரே மொழி நம் தமிழ்மொழி அல்லவா? அந்த மைந்தர்கள்தான் இன்று 'நீ, வா, போ' என்று முன்னறிமுகம் இல்லாதவர்களிடம் பேசப் பழகிவிட்டார்களா?

தெருவுக்குத் தெரு ரசிகர் மன்றம் வைத்து, நடிகர் படத்துக்கு பால் ஊற்றும் இளைஞனுக்கு, தன் தெரு சுத்தமாக இருக்க ஒரு குடம் நீர் ஊற்ற நேரமில்லை. அரசியல் தவறா... அரசாங்கம் தவறா... சட்டதிட்டம் தவறா? புரியவில்லை எனக்கு. கழிப்பறைகளைக்கூட கட்டிக்கொடுத்து பராமரிக்க முடியாத அளவுக்கு சுற்றுலா மற்றும் சுகாதார துறைகள் இருந்தால்... நாடு எப்படி முன்னேறும்?

கடுப்பினால் அல்ல, சொந்தமண் மீது கொண்ட காதலினால் கேட்கும் கேள்வி இது!

உரிமையுடன்,
ஒரு தோழி

உங்களின் ஆச்சர்யங்கள், ஆயாசங்கள், ரசனைகள், கவிதைகள், வெற்றிகள், வெதும்பல்கள், கொதிப்புகள், கொண்டாட்டங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் அந்த உணர்ச்சி 1% கூட குறையாமல் நீங்கள் பதிவு செய்யத்தான்... 'அவள். blogspot.com. ஒரே ஒரு கண்டிஷன்... அத்தனையும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாடமாகவோ, படிப்பினையாகவோ, பயனுள்ளதாகவோ, ரசிக்கும்படியோ இருக்க வேண்டும் - அவ்வளவுதான்! அத்தனையையும் கடிதம் (அவள்.blogspot.com அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2), ஃபேக்ஸ் (044-28512929), இ-மெயில் (aval@vikatan.com) மற்றும் உங்கள் குரலிலேயே பதிவுசெய்தல் (044--42890002) என எந்த வழியில் வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள். இதழில் பதிவாகும் ஒவ்வொன்றுக்கும் பரிசு (ரூ.150) காத்திருக்கிறது!

அவள்.blogspot.com
அவள்.blogspot.com
 
அவள்.blogspot.com
அவள்.blogspot.com
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு