Published:Updated:

நீ நதி போல ஓடிக் கொண்டிரு !

நீ நதி போல ஓடிக் கொண்டிரு !

பிரீமியம் ஸ்டோரி

ஓவியம் ஷிவராம்
பாரதி பாஸ்கர்
நீ நதி போல ஓடிக் கொண்டிரு !
நீ நதி போல ஓடிக் கொண்டிரு !
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

நீ நதி போல ஓடிக் கொண்டிரு !

நீ நதி போல ஓடிக் கொண்டிரு !

எங்கள் காலனியில் பக்கத்து வீட்டுப் பெண் உஷா. ப்ளஸ் ஒன் மாணவி. என் மகள் அவளைவிட ஆறு வயது சிறியவள். ஆனால், இந்த இரண்டும்தான் ஜோடி கட்டி ஆடும்... ஓயாத விளையாட்டு, ஒன்றாக கதை புத்தகம், இடையிடையே அடிதடி என்று!

ஒருநாள் உஷாவிடமிருந்து எனக்கு போன். "ஆன்ட்டி... உங்ககூட பேசணும். இப்போ வரவா?" என்றாள்.

'இரண்டு பேருக்கும் ஏதாவது சண்டையாக இருக்குமா... சமாதானம் செய்யும் நடுவர் வேலையோ..?' என்றெல்லாம் கணக்குப் போட்டபடி வரச் சொன்னேன்.

என் பெண்ணைக் கேட்கிறேன் - "என்னம்மா விஷயம்? எதுக்கு என்னைப் பார்க்க வர்றா?"

"அவளே சொல்லுவாம்மா" - சஸ்பென்ஸ் வைக்கிறாள் இவள்.

"டென்த்ல நல்ல மார்க் வாங்கினதுனால சிங்கப்பூர் யுனிவர்சிட்டியில எனக்கு இடம் கிடைச்சிருக்கு ஆன்ட்டி... ஸ்காலர்ஷிப்போட மூணு வருஷ டிப்ளமோ. முடிச்சா அங்கேயே வேலை. நாளைக்குக் கிளம்பணும்" என்கிறாள் உஷா.

எனக்குக் கண்ணில் நீர் முட்டுகிறது. 'இந்தக் குழந்தையா... அவ்வளவு தூரமா?'

"ஏம்மா... அம்மா, அப்பா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விட்டுட்டா?"

"என்ன ஆன்ட்டி செய்றது? என்னோட ஃபியூச்சருக்கு அதுதானே நல்லது!" என்ற உஷா, 'பை' சொல்லிப் போகிறாள்.

"படிக்கறதுக்காக உஷா சிங்கப்பூர் போறாம்மா... ஜாலியோ ஜாலி!" என்கிறாள் என் பெண்.

இரண்டும் அழுதிருந்தால்கூட கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் போல என்று எனக்குத் தோன்றிய நிமிடத்தில்... பிரபல எழுத்தாளர் அமரர் தி.ஜானகிராமனின் 'தீர்மானம்' கதை நினைவுக்கு வந்தது. பல காலம் முன்பு எழுதப்பட்ட கதை. குழந்தைத் திருமணம் செய்துவிக்கப்பட்ட பத்து வயதுச் சிறுமி ராதை. கணவன் வீட்டுக்குப் போகாமல் அப்பா வீட்டிலேயே ஜாலியாக தோழியோடு விளையாடிக் கொண்டு இருக்கிறாள். காரணம், அப்பாவுக்கும் கணவன் வீட்டு மனிதர்களுக்கும் சண்டை.

ஒரு நாள் அப்பா வெளியே போயிருக்கும்போது, அவளை அழைத்துப் போக கணவன் வீட்டு உறவினர்கள் வந்து விடுகிறார்கள். ''உடனே வராவிட்டால் பிறகு சேர்க்க மாட்டோம்'' என்கிறார்கள்.

"அவள் எவ்வளவு சின்னப் பெண்... அவளுக்கு என்ன தெரியும்..? அவள் அப்பா வந்த பிறகு பார்க்கலாம்..." என்று ராதையின் அத்தை சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, தன் சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டு அவர்களோடு கிளம்பி விடுகிறாள் ராதை. "இந்த வயசிலே என்ன தீர்மானம்! இனிமே தனக்கு அந்த வீடுதான்னு தோழி யைக் கூட விட்டுட்டு போயி டுத்தே" என்று அத்தை அதிசயிக் கிறாள்.

சிங்கப்பூர் போகும் உஷாவும், புருஷன் வீடு போன ராதையும் இரண்டு வேறு யுகங்களின் பிரதிநிதிகள் மாதிரித் தோன்றும். ஆனால், இருவரும் ஒன்றுதான்! எதையும் உதறிவிட்டு, எது எதிர்கால பத்திரமோ, அதை நோக்கி தீர்மானத்தோடு பயணிப்பதுதான் இரண்டு பேரின் இயல்பு. சொல்லப் போனால் பெண்மையின் இயல்பு. இங்கே மாறிப்போனது - 'புருஷன் வீடுதான் எதிர்காலம்' என்கிற நம்பிக்கை. இனிமேல் 'நல்ல வேலைதான் எதிர்காலம்' என்று இந்தத் தலைமுறைப் பெண்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

போன தலைமுறையின் பத்தொன்பது, இருபது வயதில் என்ன கனவு இருந்திருக்கும்? கம்பீரமான கணவன், அவன் தோளில் தலை சாய்க்கும் இனிமைகள், ஆபீஸ் விட்டு வருகையில் அவன் வாங்கி வரும் மல்லிகையின் வாசம், இனிமையான இரண்டு குழந்தைகள். இன்றைய பெண்ணுக்குக் கனவு இதுவல்ல. சரியான வேலை, சௌகரியமான சம்பளம். அதுவரை ஆண் ஒரு வீண் தொல்லை. காதலிக்க சந்தர்ப்பம் இருந்தால், பார்க்கலாம்... பழகலாம். முடியாவிட்டால் பரவாயில்லை, பிரிந்தாலும் பிரச்னையில்லை. 'காதல், பெரிசு; சுதந்திரம், அதைவிடப் பெரிசு; வேலை, இவை அனைத்தையும் விடப் பெரிசு.'

இதுதான் அவர்களின் நிலைப்பாடு என்றால், இன்னொருபுறம், இவர்களின் அம்மாவாக இருப்பது சவால்களில் எல்லாம் பெரிய சவால்.

"ஏய், என்னம்மா... துப்பட்டா எங்கே?"

"ஐயோ அம்மா... இது குர்த்தி. இதுக்கு மேலே துப்பட்டா போட்டா, தெரு நாய்கூட என்னைப் பார்த்துத் திருப்பிக்கிட்டு போகும்."

தெரு நாய்களுக்கெல்லாம் தெரிந்தது நமக்குத் தெரியாமல் போனதே என்று வருத்தப்படுவதா, இல்லை... 'போய் மாத்திட்டு வா' என்று நேற்று நம் அம்மாக்கள் கர்ஜித்தது போல சத்தம் போடுவதா... என்ன செய்வது?

"அம்மாவுக்கு முடியலம்மா. இன்னிக்கு ஒரு நாள் பாத்திரம் விளக்கித் தர்றியா?"

"நான் பல்லு விளக்கறதே ஜாஸ்தி. பாத்திரமெல்லாம் விளக்க முடியாது. சாரி!"

பேச்சில் கொப்பளிக்கும் குறும்பை ரசிப்பதா... இல்லை, பொறுப்பைத் தூக்கி எறியும்தனத்தை இடிப்பதா... என்ன செய்வது?

"ஏம்மா... இந்த சப்பாத்தி, பனீர் மசாலா இப்படிஎல்லாம் உலகத்திலே பேசிக்கறாங்களே.. அப்படீனா என்னம்மா? (இதை, சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனின் 'என்னம்மா' பாணியில் படிக்கவும்) உப்புமாவும் இட்லியும் தவிர வேறு ஏதாவது வைன்னு, நான் சொல்லலம்மா. என் டிபன் பாக்ஸ் அழுவுது..."

ஐந்து மணிக்கு எழுந்து மாங்கு மாங்கென்று ஒருத்தி சமைத்தால், அவள் மீது வீசப்படும் கேலியை மென்று தின்பதா... பளாரென்று கன்னத்தில் வைப்பதா... என்ன செய்வது?

மேலே மேலே போ என்று இவர்களைப் பறக்க அனுமதிப்பதா... அல்லது பார்த்துப் போ என்று வேகத்தடை போடுவதா? என்ன செய்வது?

ஏதோ ஒரு சாதனை இலக்கைத் தொடப் போகிறார்களே... அதற்காக எது எதையோ இழக்கிறார்களே, இலக்கை அடைந்த பிறகு, அடைந்தது சிறுசாயும், வழியில் இழந்தது பெரிசாயும் இவர்களுக்கு ஒருவேளை தெரிந்தால்... என்ன செய்வது?

இப்படி அடுக்கடுக்கான 'என்ன செய்வது?'கள்தான் இன்றைய அம்மாக்களின் கவலைகள். இதற்கு நடுவில் இலவசமாகக் கிடைக்கிற அறிவுரைகள் வேறு... 'கண்டிப்பும் கனிவும் சேர்த்துதான் பெண் குழந்தைகளை வளர்க்கணும்' இத்யாதிகள்.

ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு நடுவே, இடுப்பின் கீழ்ப்புறம் டாட்டூ போட்டுக் கொண்டு, அதை அம்மாவிடம் காட்டும் பெண் பற்றிய ஒரு விளம்பரம் வருமே... 'அந்த இடத்தில் போய் இத்தனை பெரிய டாட்டூவைப் போட்டுக் கொண்டாளே...' என்ற அருவருப்பும், அதிர்ச்சியும், கோபமும் பரவினாலும், உடனே அதை மாற்றிக் கொண்டு, 'வெரி நைஸ்' என்று சொல்கிறாள் அந்த அம்மா. 'நீங்கள் விரும்புவதையே கேளுங்கள்' என்று மகள்களிடம் சொல்கிறது அந்த விளம்பரம். நான் அம்மாவைப் பார்க்கிறேன். 'அட அசடே! அவள் கேட்க விரும்புவதையெல்லாம் நீ ஆமோதித்துக்கொண்டே இருந்தால், நீ நினைத்ததை எப்போது அவளிடம் பேசப் போகிறாய்?'

இதே அம்மா புத்திசாலியென்றால், அப்போது 'வெரி நைஸ்' என்றாலும், இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்த பிறகு, பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து, அவள் தலையை மடியில் சாய்த்து, "இந்த டாட்டூ சூப்பர்டா. ஆனா, இதைப் போடறது ஸ்கின்னுக்கு நல்லதில்ல. தேவையில்லாத இன்ஃபெக்ஷன் வரும். அதுவும் தவிர, இந்த இடத்திலே டாட்டூ போட்டு, டாட்டூ தெரிய ஜீன்ஸை இறக்கிப் போட்டு... எதுக்குடா? உன்னைப் பாக்கறவங்க, 'காலேஜ் செமஸ்டர்ல நிறைய மார்க் வாங்கின பொண்ணு'னு அடையாளம் சொல்லணும். 'பின்னால டாட்டூ போட்ட பொண்ணு'னு சொன்னா... அவ்வளவு நல்லாயில்ல பாரு... இனிமே வேணாம். ஓகேயா..." என்று பேசியிருப்பாள்.

இதுதான் உத்தி! பிடிக்காததை பெண் செய்யும்போது உடனே கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, 'என் பேச்சை இந்த வீட்ல யாரு கேக்கறாங்க'வில் முழங்கும் அம்மாக்கள் இங்கு ஜெயிக்கவே முடியாது. ஆறப்போட்டு, தனியாகப் பேசி, 'நீ சாதிக்கப் பிறந்தவள்' என்று நினைவூட்டினால் மட்டுமே இந்தத் தலைமுறைப் பெண் குழந்தைகளை வழி நடத்துதல் சாத்தியம்.

நம் பாட்டிகளும், நம் அம்மாக்களும், நாமும் - நடந்தோம், கொஞ்சம் ஓடினோம், தாவ முயற்சித்தோம். அதோடு நின்று விட் டோம். நம் பெண்கள் பறக்க வேண்டி இருக் கிறது. அவர்கள் முன் வாய்ப்புகள் எனும் வானம் விரிந்திருக்கிறது. அவர்கள் பறக்கட்டும்.

மலையில் பிறக்கும் எந்த நதியும் மலையின் பத்திரமான மடியைத் துறந்து, குதித்து ஓடுவதுதான் இயற்கையின் சட்டம். அப்படி ஓடும் நதிகளின் பாதையில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் இருக்க, கம்பீரமா கவும், மௌனமாகவும் வாழ்த்திக் கொண்டு இருக்கும் மலைகள்தான் அம்மாக்கள், இல்லையா?

- நதி ஓடும்...

நீ நதி போல ஓடிக் கொண்டிரு !
 
நீ நதி போல ஓடிக் கொண்டிரு !
நீ நதி போல ஓடிக் கொண்டிரு !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு