Published:Updated:

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?

பிரீமியம் ஸ்டோரி

 
நாச்சியாள்
சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
சத்தமில்லாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா...?

ஷாப்பிங்... பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் இந்த வார்த்தை, பெரும் பணம் படைத்த வர்களுக்கு அந்நியோன்யமாகவும், மத்தியத்தர குடும்பங்களுக்கு அந்நியச் சொல் லாகவும் இருந்தது. ஆனால், இன்று?!

ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள், முகூர்த்த நாட்கள், ஊர்த்திருவிழா என விசேஷ காலங்களில் மட்டும்தான் கடைகள் மூச்சுத் திணறும். இப்போது வாரத்தின் ஏழு நாட்களும் கடை வீதியின் பெரிய தெருக்களும், ஒவ்வொரு சிறிய கடைகளும்கூட படு சுறுசுறுப்பாகவே இருக்கின்றன. எதனால் இந்த மாற்றம், இது வரவேற்கத்தக்கதுதானா, தனி நபர் வருமான உயர்வு, பணப்புழக்கம், நுகர்வோர் சந்தை என்று இதற்குள் இயங்கும் காரணிகள் என்னென்ன... பேசினோம் சிலரிடம்... விடைபெற!

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?

ஷாப்பிங் செய்வதை ஒரு ஹாபி போல் ஹாயாக செய்துகொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த ஷர்மி, "எனக்கு ஷாப்பிங் பண்றதுனா ரொம்ப இஷ்டம். இன்னிக்கு ஈவ்னிங், இந்த வீக் எண்ட்னு எப்பவெல்லாம் தோணுதோ... அப்பவெல்லாம் ஷாப்பிங் கிளம்பிடுவேன். டிசைன் டிசைனா டிரெஸ், ஜீன்ஸ் சப்பல்ஸ், சேண்டல்ஸ், இயர் ரிங்ஸ்னு நிறைய வாங்குவேன். வெரைட்டியா டிரெஸ் பண்றது, அதுக்கு மேட்சா கம்மல், பேங்கிள்ஸுனு டிசைனிங் அக்ஸசரிஸ் போட்டுக்கறதுக்காகதான் இப்படி கடை கடையா ஏறி, இறங்குறேன். ஜஸ்ட், ஐ லவ் ஷாப்பிங்!" என்றவர்,

"மாசத்துக்கு இதுக்காக சில ஆயிரங்கள் செலவாகுது. இருந்தாலும் இட்ஸ் ஓகே!" என்றார் அலட்டிக் கொள்ளாமல்.

யங்ஸ்டர்கள்தான் இப்படி... இளம் அம்மாக்கள் எப்படி? அதைத் தெரிந்துகொள்ள பெங்க ளூருவை சேர்ந்த வசுமதியுடம் பேசியபோது... "என்னோட காலேஜ் நாட்கள்ல விதம்விதமா கம்மல், வளையல், கழுத்துக்கு மாலை, பொட்டுனு வாங்கிக் குவிப்பேன். அப்புறம் டிகிரி முடிச்சு வேலைக் குப் போக ஆரம்பிச்சதும், வெரைட் டியா ஹேண்ட் பேக்ஸ், சப்பல்ஸ் மேல பயங்கற கிரேஸ்; வாங்கிக் குவிச்சு வச்சேன். கல்யாணம் ஆன தும், அந்த டேஸ்ட் மாறிடுச்சு. இப்ப எல்லாம் வீட்டை அழகா காட்டுற டெகரேட்டிவ் வால் பெயின்ட்டிங்ஸ், டிஸைனிங் வால் ஹேங்கிங்ஸ்னு நிறைய வாங்குறேன்.

எனக்கு 4 வயசுல ஒரு பொண்ணு, ஆறு மாச வயசுல ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. இப்ப ஷாப்பிங்னாலே அவங்களுக்குத்தான்னு ஆயிடுச்சு. என் பொண்ணுக்கு கலர்ஃபுல்லா கம்மல், வளையல் வாங்க ஆரம்பிச்சுட்டேன் (உலகம் உருண்டைதான்!). அவளுக்கு டிராயிங்ல ஆர்வம் அதிகம்ங்கிறதுனால கிடைக்கிற கலரிங் புக்ஸ், பென்சில்ஸ், கலர் பெயின்ட்ஸ் அதிகமா வாங்குறேன்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?

Ôஷாப்பிங்குக்காக பெண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்Õ என்பது காலகாலமாக சொல்லப்படும் விஷயம்தான். அண்மையில் வெளியாகியிருக்கும் ஒரு சர்வேகூட அதைத்தான் சொல்கிறது. அது பொய்யில்லை என்பதைதான் உறுதிபடுத்துகிறது இவர்களின் உற்சாகப் பேச்சும்!

" 'இது வேணும்... கடையில போய் வாங்கணும்' என்று அத்தியாவசிய தேவைக்காக கடைக்குச் சென்ற நிலை மாறி, இன்று 'ஷாப்பிங்' என்பது பொழுதுபோக்காகவும், பணப்புழக்கத்தை குறிக்கும் சங்கேத பாஷையாகவும் மாறித்தான் போய்விட்டது..." என்று ஆரம்பித்த பெங்களுரூ, 'இந்தியா பிளாசா'வின் ஃபௌண்டர் - சி.இ.ஓ-வான வைத்தீஸ்வரன், "இந்த மாற்றத்துக்கு மூன்று முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தலாம்..." என்று ஆரம்பித்தார்...

"முதல் காரணம் பொருளாதார மாற்றம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரம், நிதி நிலைமை உயர்ந்து இருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது. அதேபோல், பன்னாட்டுத் தனியார் கம்பெனி களின் வருகையும், அவர்கள் தரும் சம்பளமும் தனிநபர் வருமானத்தையும் குடும்ப வருமானத் தையும் உயர்த்தி இருக்கிறது. அதனால், பணப் புழக்கம் அதிகமாகியுள்ளது. கையில் காசு இருந் தால் இதை வாங்கலாமா... அதை வாங்கலாமா என்று யோசிப்பது இயல்புதானே?!

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
 

இரண்டாவது காரணம், 20 வருடங்களுக்கு முன்பு பெண்கள் அதிகபட்சம் அரசு ஊழியர்களாகவோ, வங்கி, ரயில்வே துறை பணியாளர்களாகவோதான் வேலை பார்த்தார்கள். இன்று பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கால் சென்டர்கள், பன்னாட்டு வங்கிகள், கார் கம்பெனிகள் என வேலை வாய்ப்புகள் விரிவடைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பெண்களின் கூட்டமும் ஆளுமையும் அதிகரித்திருக்கிறது; அதனால் அவர்களின் கையில் பணம் அதிகமாகப் புழங்குகிறது. அதை அவர்களின் 'ஃபேவரைட்' விருப்பமான 'ஷாப்பிங்'ல் செலவழிக்கிறார்கள்

மூன்றாவது, சமூக மாற்றம். பன்னாட்டு கம்பெனிகளின் வரவால், பன்னாட்டுக் கலாசாரத்தைக் கற்றுக் கொண்டோம். அவர்களைப் போலவே பீட்ஸா, பர்கர், கோக் என சாப்பிடவும், அவர்களைப் போலவே ஆடை உடுத்தவும் கற்றுக் கொண்டோம். அதனால்தான், இன்று உலகின் மிகப்பெரிய பிராண்டட் கம்பெனிகள் எல்லாம் இந்தியாவில் கடை விரித்திருக்கின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உலகப் பொருளாதார மந்த நிலையின்போதுகூட இந்தியாவில் இந்த கம்பெனிகளின் வியாபாரம் குறையவில்லை" என ஆச்சர்ய தகவல்களோடு காரணங்களை முடித்தார் வைத்தீஸ்வரன்.

"ஷாப்பிங்கில் பெண்கள் அதிக பணத்தை, நேரத்தை செலவிடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், நுகர்வு கலாசாரத்தை நிமிடத்துக்கு நிமிடம் வளர்க்கும் மீடியாக்கள்தான்" என்று சரவெடியாகவே ஆரம்பித்தார் கவிஞர் அ.வெண்ணிலா.

"10, 15 வருடங்களுக்கு முன் அதிகபட்சம் ஐந்தாறு டி.வி. சேனல்கள்தான் இருந்தன. இன்று நூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் வந்து விட்டன. நிமிடத்துக்கு பத்து விளம்பரங்கள். முகப்பூச்சு கிரீம்களுக்கு மட்டும் 100 விளம்பரங்கள். சோப், பவுடர், டிரெஸ், நகை, மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் என்று மட்டுமில்லை... சாப்பாட்டில் உப்பிலிருந்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள்... விளம்பரங்கள்.

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?

இந்தத் தலைமுறையினர் விளம்பரங்களோடு சேர்ந்து வளர்கிறார்கள். 'இது நம்மகிட்ட இருக்கு, இது இல்ல; வாங்கணும்...' என்று விளம்பரப் பொருட்களில்தான் தங்களின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கிறார்கள். இதன் அசுரத்தனமான ஆளுமை, விளம்பரங்களில் மின்னும் பிராண்டட் பொருட்களின் பின்னால் நம்மை ஓடவைக்கிறது. அந்தப் பொருள் தேவைப்படுகிறதோ இல்லையோ... வாங்கி வைத்துக் கொள்கிறோம் நாம். நம் வீட்டில், சமையல் அறையில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் எத்தனைப் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துகிறோம் நாம்...?" என்று கேள்வி வைத்தவர்,

"அடுத்து, இன்று தனக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்கள், செலிப்ரிட்டிகளின் உடைகளைப் போல தாங்களும் 'சீஸனல்' உடைகள் வாங்கி குவிக்கும் மனோபாவத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகம். 'என்னிடம் இத்தனை புடவை, சுடிதார் இருக்கிறது' என்று பெருமையாக சொல்லும் பெண்களையும் நாம் பார்க்கிறோம். இப்படி ஆசைக்காக, ஆர்வக் கோளாறுக்காக 'ஷாப்பிங்' அடிக்ஷனில் காசைக் கரியாக்குவதற்குப் பதில், அதை ஒரு சேமிப்பாக, முதலீடாக ஆக்கலாம்தானே?" என்று சொல்லி யோசிக்க வைத்தவர்,

"முந்தைய தலைமுறை, எது தனக்கு மிகத் தேவையோ, அதை மட்டும் வாங்கினார்கள். நாம்தான் பயன் இருக்கிறதோ இல்லையோ... எல்லாவற்றையும் வாங்குகிறோம். இந்த வேறுபாடுதான் ஷாப்பிங் கலாசாரத்தை பம்பரமாக சுழல வைத்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், இந்தியாவில் கல்யாண ஷாப்பிங்கில் மட்டும் 2,000 கோடி ரூபாயைக் கரைக்கிறோம்!

அவசியத்துக்குப் பொருளா, ஆடம்பரத்துக்குப் பொருளா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!" என்றார் முத்தாய்ப்பாக.

மிகச் சரிதானே?!

- நாச்சியாள்

சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
 
சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
சத்தமிலாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா..?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு