பிரீமியம் ஸ்டோரி

நமக்குள்ளே...
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

என்ன தோழிகளே.... 'விட்டாச்சு லீவு' என்றபடி வாண்டுகள் அடிக்கும் லூட்டிகளில் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருக்கிறீர்களா..?

'இதுங்கள வெச்சுக்கிட்டு சமாளிக்கவே முடியல. ஏதாச்சும் டியூஷன், கிரிக்கெட், யோகானு சேர்த்துவிட்டாதான் நிம்மதியா நம்ம வேலைகளை பார்க்க முடியும்' என்றபடி கோத்து விட்டீர்கள்தானே?!

சரி, விஷயத்துக்கு வருகிறேன்... உங்களுடைய குழந்தைப் பருவத்தை நன்றாக நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்குள் பதியம் போடப்பட்டதில், ஒரு சதவிகிதமாவது உங்களின் குழந்தையிடம் போடப்பட்டிருக்கிறதா?

தொலைக்காட்சி, செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட், தீம் பார்க் என்று எதுவுமே இல்லாதபோதும்... நூறு சதவிகித மகிழ்ச்சியோடு மணலைக் குவித்து வைத்து மலைக் கோயில் கட்டியது; ஆத்தா வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை அன்போடு மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியது; ஆளாளுக்கு ஒரு பொருளைக் கொண்டுவந்து கூட்டாஞ்சோறு சமைத்துச் சாப்பிட்டது... என்று இதில் ஏதாவது ஒன்று உங்கள் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறதா?

உடனே... 'ச்சே... ச்சே... மண்ணில் விளையாடுவதா?' என்று வெறுத்துக் கொள்ளாதீர்கள். 'மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்' என்று நாமெல்லாம் கொண்டாடும் அறிவியலே சமீபத்தில் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறது.

அவையெல்லாம் மண் விளையாட்டுகள் மட்டுமல்ல... இந்த மண்ணில் வாழப்போகும் வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஆம், மண்ணை நேசிப்பது... அங்கே வாழும் உயிர்களை நேசிப்பது... கூடியிருக்கும் உறவுகளை நேசிப்பது என்று ஒவ்வொன்றும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துவிட முடியாத வாழ்க்கைப் பாடங்கள்!

ஆண்டு முழுவதும் பாடப்புத்தகங்களுக்குள் மட்டுமே வாழ்க்கையைப் புதைத்துக் கொண்டுவிட்ட இன்றைய குழந்தைகளுக்கு, அத்தகைய பாடங்கள் கிடைப்பதே... விடுமுறைகளில்தான். ஆனால், 'சம்மர் கிளாஸ்' என்ற பெயரில் மறுபடியும் ஒரு கட்டத்துக்குள் மட்டுமே கட்டிப்போட நினைப்பது சரியா?

ஆண்டு முழுக்க பயிர் செய்தாலும், கோடையில் இரண்டு மாதங்களுக்கு நிலத்தை சும்மா போட்டு வைப்பது விவசாயிகளின் வழக்கம். 'இப்படி ஆறப்போட்டாத்தான் அடுத்த போகத்துக்கு பலன் அமோகமா இருக்கும்' என்பது அவர்களின் நம்பிக்கை. அதுதான் உண்மையும்கூட!

நிலத்துக்கே இப்படி ஓய்வு தேவைப்படும்போது... கை, கால் முளைத்த பூஞ்செடிகளாக ஓடோடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு?

இத்தனை நாட்களாக பொழுதுகள்தான் அவர்களை தீர்மானித்தது... விடுமுறையிலாவது, பொழுதுகளை அவர்கள் தீர்மானிக்கட்டும்!

'கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு' என்று இந்த விடுமுறையைக் கொண்டாடட்டுமே!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....

ஆசிரியர்

நமக்குள்ளே ....
 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு