Published:Updated:

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பிரீமியம் ஸ்டோரி

பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
சுவாமி சுகபோதானந்தா

செக்கு மீது ஏறி நின்றால், சிங்கப்பூர் போகுமா ?

பலர் குடிசைகளில் வசிப்பதற்கும், சிலர் இண்டு இடுக்கான பகுதிகளில் ஒண்டுக் குடித்தனம் நடத்துவதற்கும், மிகச் சிலர் மட்டுமே பங்களாக்களிலும் விசாலமான அபார்ட்மென்ட்களிலும் வசிப்பதற்கும் என்ன காரணம்?'

'பலர் சைக்கிளில் போவதற்கும், சிலர் மோட்டர் சைக்கிளில் போவதற்கும், மிகச் சிலர் மட்டுமே கார்களில் போவதற்கும் என்ன காரணம்?'

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

- பங்களாக்களை கடந்து செல்லும்போது இப்படி நீங்கள் யோசித்தது உண்டா?

கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் போன்ற பொருளாதார வல்லுநர்களின் பக்கம் போகாமல், சாதாரணமாக யோசித்துப் பார்த்தால்... இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம்... படிப்போ, பதவியோ மட்டும்இல்லை என்பது புரியும்.

பின்? கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் வாழ்கையில் உயர்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் தேங்கி நின்று விடுகிறார்கள். கண் முன்னே வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணரக்கூட முடியாதவர்கள், தேய்ந்து போகிறார்கள். ஏசுபிரான் சொன்னது போல, 'நம்மில் பலர் கண் இருந்தும் பார்வையற்றவர்களாக, காதுஇருந்தும் கேட்கும் திறனற்றவர்களாக இருக்கிறோம்.'

ஒரு நகைக் கடைக்கோ, அல்லது துணிக் கடைக்கோ போனால், அதில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை எப்படி சந்தோஷமாக ரசிப்பீர்களோ, அதில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை எப்படி ஆச்சர்யத்தோடு பார்ப்பீர்களோ... அப்படி நம்மை கடந்து போகும் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கக் கற்றுக் கொண்டால், வாய்ப்புகளை நிச்சயம் நழுவவிட மாட்டோம்.

புதுப் பட்டுப் புடவையையோ அல்லது தங்க நகையையோ பார்க்கும் அதே ரசனையோடும் உற்சாகத்தோடும் உலகத்தை நாம் பார்க்க முடியாமல் தடுக்கும் தடை எது? ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... அதனை 'மெனாட்டனி' (Monotony) என்பார்கள். அதாவது, செக்குமாட்டுத்தனம்!

"வருஷம் 365 நாளும் வாசல் பெருக்கறது, கோலம் போடறது, பாத்திரம் கழுவறது, சமைக்கறது, துணி துவைக்கறதுனு அஞ்சாறு வேலைகளைச் சுத்தியே வாழ்க்கை கழியுது. வீட்டைவிட்டு வெளியே போற அவசியத்தையும் ஏற்படுத்திக்காம, வீட்டுக்குள்ளயே கிணத்துத் தவளையா இருந்துட்டேன்! அதுலயும் கண்ணுல புரை விழுந்த கிணத்துத் தவளையா இருந்துட்டேன்!" என்று சில பெண்கள் மனம் திறந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கக்கூடும்.

சரி, இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? கண் முன் தெரியும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்து பயன்படுத்திக் கொள்ள கண்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது... இந்தப் பயிற்சியை எங்கிருந்து ஆரம்பிப்பது... எப்போது ஆரம்பிப்பது?

உங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் ஒரு நர்ஸரி ரைம் இந்த கேள்விக்கு விடை சொல்லக்கூடும்.

'உலகத்தின் மிகச் சிறந்த நாள் எது?

அது, இந்த நாள்தான்!

உலகின் மிகச் சிறந்த நிமிடம் எது?

இதோ... இந்த நிமிடம்தான்!'

அதனால், இதோ இந்த நிமிடத்தில் இருந்தே இந்தப் பயிற்சியைத் துவங்குங்கள். ஆம். இந்த கோடை விடுமுறைக்கு நீங்கள் இதுவரை போகாத ஒரு குளுகுளு பிரதேசத்துக்கு சுற்றுலா சென்று வாருங்கள்.

"உலகம் எவ்ளோ பெருசா, அழகா இருக்கு. இது தெரியாம இத்தனை நாளையும் வீணடிச்சுட்டேனே..." என்று பெண்கள் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக, கோடை விடுமுறையில் வெளியூர் சென்று வீடு திரும்பும்போது பெண்களுக்கு இதுபோன்ற எண்ணம் அதிகமாக ஏற்படுவதையும் கவனித்திருக்கிறேன்.

"நெல்லைக்கு டூர் போயிருந்தப்போ, அந்த ஊர்ல எல்லா பெண்களும் தைரியமா, தன்னம்பிக்கையோட, சாமர்த்தியமா மளிகை கடை, காய்கறி கடைனு வியாபாரம் செய்றதைப் பார்த்தேன். துணைக்கு யாரையும் எதிர்பார்க்காம பஸ் ஏறி ஒரு ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்குப் போறதையும் பார்த்தேன். வழியில அறிமுகமில்லாத ஆண்கள்... கிண்டலோ கேலியோ செஞ்சா, அதை பார்வையாலேயே எப்படி சமாளிக்கிறாங்கங்கிறதை பார்த்தப்போ, அவங்கள பத்தி பெருமை ஏற்பட்டுச்சு.

ஆனா, அவங்க இருக்கற ஊரைவிட அதிக வாய்ப்புகள் இருக்கற ஒரு பெருநகரத்துல வசிக்கற வாய்ப்பு எனக்கு கிடைச்சும்கூட, வீட்டைத் தவிர வேற எதையும் தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேனு ஏக்கமா இருக்கு. சின்னதாவோ, பெருசாவோ நாமும் உருப்படியா எதையாவது செய்யணும்னு மனசு பரபரக்குது. ஏதாவது கடை வைக்கலாமா... இல்ல ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமானு எல்லாம் மனசுல எண்ணங்கள் அலை அடிக்குது"

- இந்த ரீதியில் பல பெண்கள், மற்ற பெண்களை பார்த்து உந்தப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

அப்படி நீங்களும் 'இன்ஸ்பயர்' ஆக, கோடை விடுமுறைக்கு வெளி ஊருக்குச் செல்லும்போது, அங்கேயுள்ள கட்டடங்களையும் அருவிகளையும் மலைகளையும் பார்த்து ரசிக்கும் அதேவேளையில், அங்கே இருக்கும் சாதாரண மனிதர்களையும், பெண்களையும் படியுங்கள். ரசியுங்கள்! இந்த பயணத்தில் நீங்கள் சந்திக்கும் இளநீர் விற்கும் பெண், பூ விற்கும் பெண், படகுத்துறையை சுத்தம் செய்யும் பெண், உங்கள் பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு போகும் ஸ்கூட்டி ஓட்டும் பெண்... என்று கூடுமானவரை பலரை பாருங்கள். பழகுங்கள்.

இப்படி நிறைந்த அனுபவங்களோடு ஊர் திரும்பும்போது, உங்கள் முன்னால் இருக்கும் உலகத்தை உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்லாமல், நீங்கள் சந்தித்த பல பெண்களின் கோணத்திலிருந்தும், இன்னும் குறிப்பாக சொன்னால், அவர்களின் கண்கள் மூலமாகவும் பார்க்க பழகியிருப்பீர்கள். இப்படி ஒரு புதிய பார்வை கிடைக்கும் போது, உங்கள் கணவர், குழந்தைகள் எல்லாம்கூட இப்போது உங்களுக்கு மேலும் புதிதாகவும் அழகாகவும் தெரிவார்கள். வாழ்கையில் புத்துணர்ச்சியை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை... இங்கே உங்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை எல்லாம் என் வாழ்வியல் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் பகிர்ந்து கொண்டேன். சமீபத்தில் அந்தப் பெண்மணி மீண்டும் என்னை வந்து சந்தித்தார். "சுவாமி... நீங்கள் சொன்னீங்களேனு என் கணவர்கிட்ட வம்படிச்சு குற்றாலத்துக்கு டூர் போனோம். 'பைகள வெச்சுட்டு குளிக்கப் போனா, எந்தப் பைய, குரங்கு தூக்கிட்டு போகுமோ... எந்த பைய, திருடன் தூக்கிட்டு போவானோ... பாசியில கால் வச்சு யார் வழுக்கி விழுவாங்களோÕனு 'திக் திக்'குனே இருந்துச்சு. போதாக்குறைக்கு பைத்தியமே பிடிக்கற அளவுக்கு வெயில் வறுத்தெடுத்துடுச்சு. பசி வயித்தைக் கிள்ளுதேனு ஒரு ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதுல, வயித்து வலி வந்ததுதான் மிச்சம். போதும்டா சாமீ... எப்ப வீடு வந்து சேருவோம்னு ஆயிடுச்சு!" என்று புலம்பினார்.

நீங்கள் எந்த ஊருக்குப் போனாலும் சரி, உங்களுக்குத் தேவையான பல விஷயங்கள் அங்கே கிடைக்கும். அல்லது கிடைக்காமலும் இருக்கும். ஆனால், ஊருக்கு கிளம்பும்போது நீங்கள் அவசியம் எடுத்துக் கொண்டு போக வேண்டிய விஷயங்கள்... நிம்மதியும் சந்தோஷமும்! ஊட்டி, கொடைக்கானல், குளுமணாலி, டார்ஜிலிங்... என்று எங்கேயும் இது கிடைக்காது. நீங்கள் எடுத்துக் கொண்டு போனால்தான் உண்டு!

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே!

கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல முடியாதவர்கள், குறைந்தபட்சம் சொந்த ஊருக்காகவது செல்ல வேண்டும்.

வெளியூரில் இருக்கும் சொந்த பந்தங்களை பற்றி மட்டுமல்ல, சொந்த மகன், மகளைப் பற்றிய புரிதல்கூட இந்தக் கோடை விடுமுறையில் அதிகமாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? எப்போதும் பள்ளிக்கூடம், டியூஷன், டான்ஸ் கிளாஸ் என்று ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகள், உங்கள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு, தங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது போன்ற விஷயங்களை எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைப்பது இந்த கோடை விடுமுறையில்தான்!

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு