Published:Updated:

என் டைரி 224 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 224 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

பிரீமியம் ஸ்டோரி

என் டைரி-224
[வாசகிகள் பக்கம்]
என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
அந்நியமாகிப் போன அம்மா !
என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா...'

- என் உயிர் தோழி சசி, முதல் முதலாக தான் செல்போன் வாங்கியபோது, ஆசையாக வைத்த 'காலர் ட்யூன்' இது. அந்தளவுக்கு அவளுக்கு அம்மா பாசம். அம்மாவுக்கும் சசிதான் உலகமே. ஆனால், சில மாதங்களாக 'அம்மா' என்றாலே சசிக்கு அலர்ஜியாகிப் போயுள்ளதுதான் வேதனை.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் நானும் சசியும் ஆறாம் வகுப்பிலிருந்தே தோழிகள். அவள் அப்பா வெளிநாட்டில்தான் நீண்டகாலமாக வேலை பார்க்கிறார். எனவே, சசிக்கு எல்லாமே அம்மாதான். ''எங்களுக்காக எல்லா வசதிகளையும் அப்பா செஞ்சு கொடுப்பார். ஆனா, அம்மாகிட்ட அன்பா, அந்நியோன்யமா இருந்து பார்த்ததே இல்லடி...'' என்று அடிக்கடி வருந்தியிருக்கிறாள் சசி.

''அப்பா ஊர்லேர்ந்து வந்திருக்காரு. அம்மா, அப்பாவுக்கு பிடிச்சதைஎல்லாம் சமைச்சும், 'நல்லாஇருக்கு'னுகூட ஒரு வார்த்தை சொல்லாம, எங்ககூட இருக்காம, அவரோட ஃப்ரெண்ட்ஸ்கூட டூருக்கு கிளம்பிட்டாரு..."

- நான்கு மாதங்களுக்கு முன் தன் தந்தை இந்தியா வந்து திரும்பியபோது சசி இப்படி வருந்தினாள் என்னிடம்.

இந்நிலையில், சென்ற மாதம் சசி வீட்டுக்கு நான் போனபோது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எப்போதும் காட்டன் புடவை, பெரிய பொட்டு, தலை நிறைய பூ என்று 'ஹோம்லி லுக்'கிலேயே பார்த்துப் பழகிய அவளுடைய அம்மா, அன்று அடர் நிற லிப்ஸ்டிக், ஸ்லீவ்லெஸ் சுடி, விரித்துவிட்ட 'ஹென்னா' ஹேர் சகிதம் ஆண், பெண் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். எப்போது சென்றாலும் எங்களிடம் கலகலவென பல கதைகள் பேசி, தன் கையாலேயே பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுபவர், அன்றைய தினம்... ''ஃப்ரிட்ஜ்ல மாவு இருக்கு. டிபன் செஞ்சுக்கோங்க. பை... பை...'' என்றபடியே அந்த குரூப்புடன் வெளியே கிளம்பிவிட்டார். இன்னொரு நாள் அவள் வீட்டுக்கு சென்றிருந்தபோது, ஒரு 'ஹாய்'கூட சொல்லாமல் செல்போனிலேயே அவர் மூழ்கிக் கிடந்ததையும் பார்த்தேன்.

ஒரு தனிமைப் பொழுதில் சசியிடம் பேசியபோதுதான் தெரிந்தது... அவளிடம் முன்பு காட்டிய அந்நியோன்யத்தில் 10% கூட இப்போது அம்மா காட்டுவது இல்லை என்பது. தாயின் மாறிப்போன இந்த நடவடிக்கைகளை என்னிடம் கூறி அழுதாள் சசி.

கணவனின் நிராகரிப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு மருந்துபோடும் வகையில் அவர் இப்படி மாறியிருக்கலாம்; தன்னை இளமையாக மாற்றிக்கொள்ள நினைத்துகூட இப்படி இறங்கியிருக்கலாம்; தன் நட்பு வட்டாரத்தை விரிவுப் படுத்துவதற்காகக் கூட இதையெல்லாம் ஆரம்பித்திருக்கலாம்... ஆனால், தாய்ப் பாசம் ஏன் வறண்டு போனது?

டீன்-ஏஜில்தான் அம்மாவின் அக்கறையும், அரவணைப்பும் அதிகமாக தேவை ஒரு பெண்ணுக்கு. ஆனால், திடீரென அதிலிருந்து விலக்கி நிறுத்தப்பட்டுள்ளாள் சசி.

என் தோழியையும், அவள் அம்மாவையும் இதிலிருந்து எப்படி மீட்டெடுப்பது..?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் பக்கம்

என் டைரி 223-ன் சுருக்கம்...

"கல்லூரி காலத்தில் வேற்று சாதிக்காரரை காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்தவள் நான். இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், கணவருக்கு ஏற்ற மனைவியாகவும், இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகவும் இனிமையாகப் போய் கொண்டிருந்தது இருபது வருட இல்லற வாழ்க்கை. எனக்கு பிடிக் காது என்பதற்காக அசைவ உணவுகளை சமைக்கக்கூட அனுமதிக்காதவர். ஆனால், சமீபகாலமாக எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கும் அவருடைய கோப குணம் கதிகலக்குகிறது. கெட்ட வார்த்தைகளாலும், சாதி ரீதியாகவும் கேவலப்படுத்துகிறார். ஈட்டியாக பாயும் வார்த்தைகளால் பொசுங்கும் நான், பூகம்பமாக வெடித்துச் சிதறிவிடுவேனோ என்று பயப்படுகிறேன். இதற்கு என்னதான் தீர்வு?"

கோபம் எனும் நெருப்பு, கொண்டவரை மட்டுமல்ல... கூடியிருப்பவரையும் சேர்த்து அழிக்கும். கோபம் எமனின் தூண்டில். அதில் சிக்கித் தவிக்கும் உன் கணவரை மீட்க முதலில் வழி தேடு. மாமனார், மைத்துனர்களை, மருமகன் மென்று துப்புவது எல்லா வீடுகளிலும் நடப்பதுத£ன்.

அதையெல்லாம் தாண்டி முன்னேறுவதில்தான் இருக்கிறது இல்லற இன்பத்தின் சூட்சமம். நெருப்பு எவ்வளவு நேரம் நின்று எரியப் போகிறது? உள்வாங்கிக் கொள்ள எதுவும் இல்லையென்றால் அது தானாகவே அணைந்துவிடும். அப்படித்தான் வாழ்க்கையும்.

நெருப்பு-நீர், வெம்மை-குளுமை, இன்பம்-துன்பம் என்ற முரண்களோடுதான் இறைவன் இயற்கையைப் படைத்துள்ளான். தீர்வு இல்லாமல் எந்தப் பிரச்சனையும் உருவாக்கப்படுவது இல்லை. அவர் நெருப்பாக இருக்கையில் நீ நீராக மாறிவிடு.

காதலில் கட்டுண்ட நாட்களின் நினைவுகளை நினைத்துப் பார். கடிதங்கள், பரிசுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது எடுத்துப் பார்க்கும்போது, மனம் இறக்கைக் கட்டி வானில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். பூகம்பமாக வெடிக்க காத்திருக்கும் உன் மனமும் பூந்தோட்டமாக மாறிவிடும்!

- எஸ்.மோகனா செல்வ கணேசன், சென்னை-119

'கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்' அந்தக் கோபத்துக்கு வேறு ஏதும் உள்காரணங்கள் இருப்பதாகவும் உன்னுடைய கடிதம் கூறவில்லை. எனவே, ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று முடிவெடுக்காமல், நன்றாக யோசித்து செயல்படு.

அவர், கோபம் தனிந்திருக்கும் வேளையில் சாந்தமாக பேசுவதுதான் புத்திசாலித்தனம். கோபத்தினால் அவரது உடல்நிலை பாதிக்கப் படுவதையும், மன அமைதி குலைவதையும், வீட்டுச் சாமான்களுக்கு நேர்ந்துள்ள கதியினையும் இதமாக எடுத்து சொல். அது எளிதான காரியமல்ல. நிறைய பொறுமை தேவை.

அழும் குழந்தைகூட அம்மா கவனிக்கவில்லையென்றால், தானே அழுகையை நிறுத்திவிடுவ தில்லையா. அதுபோல்தான். அவர் கத்தும்போது, பதிலுக்கு கத்தாமல் ‘இதுவும் கடந்து போகும்’ என்று மனதில் சொல்லிக் கொண்டு, மௌனமாக இருந்துவிடு.

அதேசமயம், ஊமையாக இருந்துவிடாதே... அதுவும்கூட பல சந்தர்ப்பங்களில் கோபத்துக்கு தூபம் போடும்!

உரிய நேரத்தில் வாய் திறந்து சொல்ல வேண்டியவற்றை, சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லவும் தவறாதே - ஓர் எல்லைக்குள் நின்று!

இத்தகைய உன் நடவடிக்கைகளே, அவரின் கோபத்தைக் குறைத்துவிடும். உன் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள்!

- சுகந்தா ராம், சென்னை-59

 

என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
 
என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 224 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு