Published:Updated:

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

பிரீமியம் ஸ்டோரி

விட்டாச்சு லீவு...விடாது ஸ்கூலு...
விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...
விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...
வருஷம் முழுக்க டென்ஷனைக் குறைக்க
விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

பள்ளிக் குழந்தைகளுக்கு ஏப்ரல், மே என்று இந்த இரண்டு மாதங்களுமே... டெடிகேட்டட் டு கொண்டாட்டம் ஸ்பெஷல்! மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று முத்தரப்புக்குமே தினசரி பள்ளி டென்ஷன்களில் இருந்து விடுதலை தரும் விருப்பமான பிரேக் இது! முழுமையான இந்த விடுமுறையை அவர்கள் பயனுள்ளதாக கழிக்க, கொண்டாட டிப்ஸ்களை வழங்குகிறது இந்தக் கையேடு!

பள்ளி திறப்புக்கு முன் அவர்கள் 'பேட்டரி ஃபுல்' ஆக வாழ்த்துகள்!

'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!'

லீவில் இருக்கும் குழந்தைகள் கார்ட்டூன் சேனல், கிரிக்கெட் மேட்ச், லூடோ, பிஸினஸ் கார்டு என்று அவரவர் சாய்ஸில் ஏக பிஸியாக, குஷியாக இருப்பார்கள். அவர்களை ஊருக்கு, டூருக்கு கூட்டிச் செல்வது, அந்த குட்டி மனிதர்களின் சந்தோஷத்தை இன்னும் கூட்டிப் போடும். கூடவே, சில நல்ல பழக்கங்களையும் இந்த லீவில் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டால், பள்ளி திறப்பின்போது அவர்கள் 'பெர்ஃபெக்ட் பட்டீஸ்'தான்!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

1. டி.வி-யே கதியென்று கிடக்கும் குழந்தைகளை, ஒருமுறை அருகில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். பின் அவர்களாகவே தினமும் நூலகம் செல்வதற்கு பழக்கப்படுத்துங்கள். புத்தகங்கள் நல்ல ஆசிரியர்கள்.

2. லீவிலும் ''அடுத்த வருஷ புக்ஸை வாங்கிப் படி..." என்றெல்லாம் அவர்களை நச்சரிக்காமல், அவர்கள் விருப்பம்போல் விளையாட விடுங்கள். நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் இருக்காது. அதேபோல் தான் குழந்தைகளின் மனதும். எனவே, சம்மர் கோர்ஸ் சேர்த்தாலும் அது பாடமாக இல்லாமல், வாழ்வியல் கல்வியைக் கற்றுக் கொள்ளும் ஒரு கோர்ஸாக இருக்குமாறு, குழந்தையின் விருப்பத் துடன் தேர்ந்தெடுங்கள்.

3. பல புதிய ஆங்கில வார்த்தைகளைக் குழந்தைகள் கற்பதற்கு இந்த விடுமுறை சிறந்த நேரம். எனவே, பெற்றோர் மூலமாகவோ, டிக்ஷ்னரி உதவியுடனோ தினமும் இரண்டு புதிய ஆங்கில வார்த்தைகளை அர்த்தத்துடன் அவர்கள் கற்றுக் கொண்டால், பள்ளிக்குச் செல்லும்போது பல அழகான வார்த்தைகளின் அதிபதி உங்கள் செல்லம்.

4. சின்னக் குழந்தைகளுக்கு 247 தமிழ் எழுத்துக்களையும் அடையாளம் காணப் பழக்குவது, வாய்ப்பாடுகளை மனனம் செய்ய வைப்பது என சில முயற்சிகளை நீங்கள் எடுத்தால், அது காலத்துக்கும் அவர்களுக்கு உதவும். இவற்றை வலுக்கட்டாயமாக செய்யாமல், ''நாளைக்கு சிக்ஸ்டீன்த் டேபிள்ஸ் வரை டெஸ்ட். நீ சென்டம் வாங்கிட்டா நீதான் டாப்பர்" என்று ஒரு 'கேம்'போல அவர்களை இதில் ஈடுபடுத்துங்கள்.

5. வீட்டில் பலவித கைவேலைகள் தெரிந்தவர்கள் இருந்தால்... அதனை குழந்தைகளுக்குக் கற்றுத் தரலாம். டெய்லரிங், எம்ப்ராய்டரி, கூடை பின்னுதல், பூக்கட்டுதல் என ஒரு புது வேலையைக் கற்றுக் கொள்ளும் குதூகலத்தை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

6. லஞ்ச் பாக்ஸில் வைத்துவிடும் காய்கறிகளை சாப்பிடாமல் கொண்டு வரும் 'காய்கறி அலர்ஜி குட்டீஸ்' களை, இந்த லீவில் காய்கறிகளை சாப்பிடப் பழக்கலாம். 'அவியல் பிடிக்கலைனா பொரியல் செய்யட்டுமா..? ஃப்ரை செய்யட்டுமா...?' என்று அவர்களுக்கு விருப்பம் ஏற்படுமாறு அவற்றை சமைத்து, உங்கள் கண்பார்வையின் கீழ் சாப்பிட வைத்துப் பழக்குங்கள்.

7. தினமும் மாலையில் 'ஸ்நாக்ஸ் டைம்' என்று ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு, ஒரு பாக்கெட் சிப்ஸ், லேஸ், குர்குர்ரே அயிட்டங்களை ஒரே மூச்சில் விழுங்கும் குட்டீஸ்களுக்கு அதனை ஊக்குவிக்காமல், அந்த நேரத்தில், 'விடாம 100 ஸ்கிப்பிங் போடு பார்க்கலாம்...', 'ஐம்பது சிட் அப்ஸ் எடு...' என்று இதுபோன்ற உடற்பயிற்சிகளில் விளையாட்டாக அவர்களை ஈடுபடுத்தலாம். வீட்டுக்குப் பக்கத்தில் குளம், ஆறு இருந்தால் பெரியவர்களின் உதவியுடன் நீச்சல் கற்றுக்கொள்ளச் செய்யலாம். உடலும், மனமும் புத்துணர்வாகும்.

8. பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ... ஸ்டடி, சிஸ்டம் டேபிள்களை ஒழுங்குபடுத்தி வைப்பது, அவர்களின் ஷ¨வை அவர்களே துவைத்து, பாலிஷ் போட்டு வைத்துக் கொள்வது என சின்னச் சின்ன வேலைகளை கற்றுக் கொள்ளச் செய்யலாம். பள்ளி செல்லும்போது, 'அம்மா... என் ரிப்பனைக் காணோம்...' என்று காலை வேளையில் அலறாமல், ஸ்கூல் பேக், லஞ்ச், ஸ்பூன், வாட்டர் பாட்டிலில் தண்ணீர், டவல் என்று உங்கள் பிள்ளை தானாகவே ஸ்கூலுக்கு ரெடியாகும் சமர்த்தானால் சந்தோஷம்தானே?!

9. ''லீவுதானே... குழந்தை எட்டு மணி வரைக்கும் தூங்கட்டும். மதிய நேரத்துல கொஞ்சம் தூங்குடா கண்ணா..." என கொஞ்ச நாள் நீங்கள் செல்லம் கொடுக்க, பின் அதுவே பழக்கமாகி, ஜூன் முதல் வாரத்தில் ''அய்யோ லேட்டாச்சு... எழுந்திரி" என்று பல்லவி பாட வேண்டியதாகிவிடும். உணவு வேளைக்குப் பிந்தைய கிளாஸ்களிலும் லீவின் மதிய தூக்க எªஃபக்ட் பிடித்துக் கொள்ளும். எனவே, பள்ளி திறப்பதற்கு பத்து நாளைக்கு முன்பாகவே அவர்களை மீண்டும் 'ஸ்கூல் டைமிங்'குக்கு ட்யூன் பண்ணுவது நலம்.

பெற்றோர்களுக்கான லீவ் டியூட்டி!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

ஸ்கூல் ரீ-ஓபனிங் சமயத்தில் ஃபீஸ், புக்ஸ் என்று எந்தப் பதற்றமும் பரவாமல் இருக்க, பெற்றோர் தங்களின் இந்தக் கடமைகளை முன்னதாகவே முடித்து வைத்துவிடலாம்...

10. பள்ளிக் கட்டணத்துக்கான தொகையை முன்கூட்டியே ஒதுக்கி, தயாராக வைத்துவிடுங்கள். டூர், விருந்தினர் என்று எக்காரணம் கொண்டும் அதில் கை வைக்காதீர்கள். ஒருவேளை அந்த தொகையை 'கடனாக' ஏற்பாடு செய்யும்பட்சத்தில், ஒருவரை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஃபீஸ் கட்டவில்லையெனில், குழந்தையும் நீங்களும் எதிர்கொள்ள நேரும் சிரமங்கள் ஏராளம்.

11. மூன்று அல்லது நான்கு மாதங்களில் வீடு மாறும் கட்டாயத்தில் இருப்பவர்கள், குழந்தை இப்போது படிக்கும் பள்ளி தொலைதூரமாக இருக்கும்பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகள், மாற்று ஏற்பாடுகளைத் திட்டமிடுங்கள். குழந்தை யைப் பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ, வேன் போன்ற வாகன மாற்றங்களையும் இப்போதே முடிவெடுத்து விடுங்கள்.

12. குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடைகளை ஒரு மாதம் முன்பாகவே தைக்க கொடுத்து, வாங்கி வைத்து விடுங்கள். குறைகள் இருந்தால் சரி செய்யவும் நேரமிருக்கும். இல்லையென்றால், ஸ்கூல் ஆரம்பித்த முதல் வாரத்தில் டெய்லர் கடைகளில் மொய்க்கும் கூட்டத்துடன் கூட்டமாக காத்துக் கிடக்க வேண்டி வரும்.

13. நாளை பள்ளி திறக்கயிருக்க, இன்று கடைக்குப் போய் ஸ்கூல் பேக், ஷ¨, வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் என்று வாங்கினால் அவசரத்தில் அரைகுறையாகலாம். குறைந்தது பதினைந்து நாட்கள் முன்பாகவே இதையெல்லாம் வாங்கிவிட்டால், சரியில்லாமல் போனாலும் மாற்றுவதற்கும் அவகாசம் இருக்கும். பிள்ளைகளையும் கடைக்கு அழைத்துச் சென்று அவர்களின் விருப்பப்படி இந்த பொருட்களை வாங்கிவிட்டால், 'இது வேணாம்... அது மாதிரி வேணும்' என்று அவர்கள் அடம்பிடிப்பதையும், அதனால் ஏற்படும் இரட்டைச் செலவையும் தவிர்க்கலாம்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

14. மலிவான அல்லது ஏதாவது பொருளுக்கு இலவசமாகத் தரப்படும் பென்சில், பேனா, ஷார்ப்னர் வகைகளை வாங்காதீர்கள். வெள்ளைத் தாள் ஒரு பண்டல், இங்க் பாட்டில் இரண்டு, நோட்டுகள் ஒரு டஸன் என்று நல்ல, தரமான ஸ்டேஷனரி அயிட்டங்களை ஆண்டு முழுமைக்கும் பயன்படும் வகையில் வாங்கி வைத்துக் கொள்வது நலம்.

15. தரமான, அனுபவமான இடங்களில் புத்தகங்களை 'பைண்ட்' செய்து, முன்னதாகவே வாங்கி வைத்துவிடுங்கள். 'பிரவுன் ஷீட் அட்டை' போடும் புராசஸையும் முந்தைய நாள் இரவு அவசர அவசரமாகச் செய்யாமல், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக போட்டு வைத்துவிடுங்கள்.

16. குழந்தைக்கு ஏதாவது மருத்துவ 'செக்கப்'புகள் செய்ய வேண்டியிருந்தால், விடுமுறையிலேயே முடித்து விடுங்கள். குலதெய்வ வேண்டுதல், மொட்டை போடுதல் போன்ற சமாசாரங்களுக் கும் லீவுதான் வசதியானது. இந்தக் காரணங்களுக்காக பள்ளி திறந்த பின் விடுப்பு எடுப்பதை தவிர்க்கலாம் இல்லையா?!

பள்ளியின் தேர்வில் பிள்ளையின் எதிர்காலம்!

'நல்ல ஸ்கூல்ல நிறைய ஃபீஸ் கட்டி சேர்த்துட்டேன்... அப்பாடா!' என்று இந்தக் கல்வி ஆண்டுக்கான உங்கள் கடமை முடிந்து விட்டதாக ஒதுங்காமல், உங்கள் குழந்தைகளுக்கான பள்ளியைத் தேர்வு செய்வதில் இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் வையுங்கள் பெற்றோர்களே..

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

17. பள்ளியின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் 'முழுமையாக' குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்று சரி பார்க்கவும். 'கணினி லேப் வசதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தால், 'போதுமான கணினிகள் உள்ளனவா, கற்பிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனரா?' என்பனவற்றையெல்லாம் சரிபார்ப்பது உங்கள் கடமை; உரிமை.

18. பெற்றோர்களுக்கும் பள்ளி தரப்புக்கும் அடிக்கடி கலந்துரையாடல்களை ஏற்படுத்தும் பள்ளிகளை 'டிக்' செய்யுங்கள். பல குழந்தைகளின் நடவடிக்கைகள் பள்ளி மற்றும் வீட்டில் அப்படியே மாறுபடும். அதற்கு மனோதத்துவரீதியில் பல காரணங்களும் இருக்கும். அவற்றையெல்லாம் நீங்கள் இந்த கலந்துரையாடல் மூலம் அறிவதுடன், உங்கள் குழந்தையின் கல்வி, பழக்க வழக்கங்கள் பற்றிய விவரங்களை முழுமையாக அறியப்பெறுவீர்கள்.

19. உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தால், அதற்கேற்ற பயிற்சியாளர்கள், பயிற்சிக் கூடம் அந்தப் பள்ளியில் இருக்கிறதா, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கடந்த ஆண்டில் எத்தனை பேருக்கு அந்தப் பள்ளியில் இருந்து கல்லூரி வாய்ப்புகள் கிடைத்தன போன்ற விவரங்களைப் பார்க்க வேண்டும். ஒருவேளை விளையாட்டு வசதியே இல்லாத பள்ளியில் நீங்கள் விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளை அடைக்கும் பொருட்டு, அவர்கள் மனமுடைந்து போய், அது அவர்களின் படிப்பிலும் எதிரொலிக்கலாம்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

20. முடிந்த அளவுக்கு, வீட்டிலிருந்து 3 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள பள்ளிகளிலேயே பிள்ளைகளைச் சேருங்கள். 'தொலை தூர பள்ளியே சிறந்தது' என்ற நிலையில் உள்ள பெற்றோர்கள், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் இட வசதி ஆகியவற்றை பரிசோதித்த பின்பு பிள்ளைகளை அதில் அனுப்புங்கள்.

21. பள்ளி வாகனம் கிடைக்காதவர்கள்... பிரைவேட் ஆட்டோ, வேன் போன்ற பிற வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் பிள்ளைகளை திணித்து அனுப்புவது கூடாது. சிறிய ஆட்டோவில் மூன்று குழந்தைகளையும், பெரிய ஆட்டோவில் ஐந்து குழந்தைகளையுமே அனுப்பலாம். அத்தகைய வாகனங்கள், வலிமையான பக்கவாட்டுக் கம்பிகள் மற்றும் பாதுகாப்புக் கம்பிகளுடன் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

22. பள்ளியின் இடம் மற்றும் கட்டட அமைப்பு ஆரோக்கியமானதாக, பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குறுகலான சந்துகளில் உள்ள வானளாவிய கட்டடங்கள், சிறைகளுக்கு ஒப்பானவை. உங்கள் செல்ல குழந்தைகளுக்கு சிறைகள் வேண்டாமே!

23. வகுப்புகளில் காற்றோட்டம் எப்படி இருக்கிறது, போதுமான மின் விசிறிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்கவும்.

24. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகிய இரண்டும் மிகவும் முக்கியம். தூரத்தில் இருந்து பார்த்தோ... ஆசிரியர்களிடம் மட்டும் கேட்டோ இவற்றை உறுதி செய்வது பலன் தராது. அங்கு படிக்கின்ற மாணவர்களிடம் விசாரிப் பது உண்மையை அறிய வைக்கும்.

25. தமிழகப் பள்ளிகளில் சரி பாதிக்கும் மேலே சரியான கழிப்பிட வசதியற்றவை. மிக முக்கியமாக, பெண்களின் கழிப்பறைகள் பெரும்பாலும் தூய்மைக் குறைவாகவே உள்ளன. சிறுநீரை அடக்குவதால் பள்ளி செல்லும் சிறுவர்-சிறுமிகள் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். எனவே, இந்த விஷயத்தில் கவனம் தேவை.

26. பதினொன்றாம் வகுப்புக்கு பிள்ளைகளைப் பள்ளி மாற்றும் பெற்றோர், உயர்கல்விக்கு நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுக்க கடந்த சில ஆண்டுகளில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டையும், உயர் மதிப்பெண்களின் வரிசையையும் வாங்கிப் பார்க்க வேண்டும். கூடவே, அந்தப் பள்ளியின் சீனியர் மாணவர்களிடம் ஆலோசனை பெறுவது நலம்.

ஸ்கூல் டிரான்ஸ்ஃபர் சிக்கல்கள் தீர..!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

வேலை மற்றும் சில குடும்ப காரணங்களுக்காக அடிக்கடி குழந்தைகளை பள்ளி மாற்றும் பெற்றோர்கள், அந்த மாற்றம் குழந்தைகளின் படிப்பு, பழக்கங் களைப் பாதித்து விடாமல் இருக்க, இவற்றைக் கையாளலாம்...

27. குழந்தையை பள்ளி மாற்றும் முடிவில் இருப்பவர்கள், முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை முடித்து விடுங்கள். 'அகடெமிக் இயர்' ஆரம்பித்த பின் பள்ளி பள்ளியாக ஏறி இறங்காதீர்கள்.

28. பள்ளியை மாற்ற வேண்டியதற்கான காரணத்தை, பக்குவமாக குழந்தைகளிடம் சொல்லி, புதிய பள்ளித் தேர்வு பற்றி அவர்களிடமும் கலந்தாலோசித்தால், குழந்தைகள் அந்த மாற்றத்துக்கு மனதளவில் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.

29. புதுப் பள்ளியில் அப்ளிகேஷன் வாங்க, அட்மிஷன் போட என்று செல்லும்போது குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். பள்ளியைப் பார்த்ததும் பிடித்துவிட்டால் அது மனதளவில் நம்பிக்கையை வளர்க்கும். அதேபோல, பள்ளி திறப்பதற்கு முன்பே ஓரிரு முறை பள்ளிக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டால் முதல் நாள் பள்ளிக்குப் போகும்போது புது சூழ்நிலையைப் பார்த்து மிரள மாட்டார்கள்.

30. குழந்தைகள் பள்ளி மாறும்போது அதிகம் கவலைப்படும் விஷயம்... நண்பர்களை விட்டுப் பிரிவதுதான். 'புது ஸ்கூல்ல எனக்கு ஃப்ரெண்டே இருக்காதே...' என்பதுதான் அவர்களின் மனதைப் பிசைகிற விஷயமாக இருக்கும். ''அங்கயும் உனக்கு சூப்பர் ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க..." என்ற நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லுங்கள். அந்த வார்த்தைகள்தான் அவர்களுக்கு டானிக்!

31. குழந்தைகளின் முன்பாக, ''இவ புது ஸ்கூல்ல எப்படி ஃபிட் ஆகப்போறாளோ..?" என்று புலம்பி, அவர்களின் தன்னம்பிக்கைக்கு வாலன்டரியாக வேட்டு வைக்காதீர்கள். வளர்ந்தவர்களைவிட குழந்தைகள் புது சூழ்நிலையுடன் விரைவில் ஒன்றிப்போகக் கூடியவர்களே!

32. அக்கம் பக்கத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் பேசி, அங்குள்ள நல்ல விஷயங்களைக் குழந்தை உணரும் விதமாக சொல்லிப் பாருங்கள். கண்ணில் நம்பிக்கை மின்னல் அடிக்கும். உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பும்.

ஆசிரியர்களுக்கும் ஹோம்வொர்க்!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

பிள்ளைகளை அறிவாக, செறிவாக வடித்துக் கொடுக்கும் உளிகள், ஆசிரியர்கள். அந்த உன்னத உளிகள், இந்த விடுமுறையில் தங்களைத் தாங்களே கூர்படுத்திக் கொள்வது, அடுத்த கல்வி ஆண்டில் இன்னும் சிறப்பாக பிள்ளைகளை செதுக்கும்தானே?! அதற்கு சில ஆலோசனைகள்...

33. பாடம் நடத்தும் முறைகளில் வந்துள்ள மாற்றங்களை விடுமுறையில் அலசுங்கள். 'பவர் பாயின்ட் பிரசன்டேஷனில் வகுப்புகளை எடுப்பது எப்படி, மாணவர்களுக்கு நோட்ஸ்களை எழுதித் தராமல் உடனுக்குடன் பிரின்ட் செய்து கொடுப்பது எப்படி' போன்றவற்றை விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வமுடன் அறிந்து கொள்வது, நம் கல்வித் தரத்தை மேம்படுத்தும்.

34. பாடங்களுக்கான லேட்டஸ்ட் உதாரணங்கள், பாடம் தொடர்பான புகைப்படங்கள் போன்றவற்றை சேகரிக்கலாம். வகுப்பறைகள் இன்னும் சுவாரஸ்யமாகும்.

35. அடுத்த ஆண்டில் வரும் புது மாணவர்களுக்காக தங்களைத் தயார் செய்து கொள்ளலாம். மாணவர்கள் மீது கோபப்படாத மன நிலையை வளர்த்துக் கொள்ளலாம். பழைய மாணவர்கள் மீதான மதிப்பீடுகளையும் எதிர்பார்ப்புகளையும் புதிய மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கலாம்.

36. கடந்த ஆண்டில் பாடங்கள் நடத்தும்போது எதேனும் தவறுகளும் தடுமாற்றங்களும் நேர்ந்திருந்தால், அவற்றை எல்லாம் சரி செய்து கொள்ளலாம்.

37. இவ்வாண்டில் பாடம் நடத்தும்போது மாணவர்களின் கேள்வி எதற்காவது பதில் தெரியாவிட்டால், கால அவகாசம் கேட்டு அதற்கான பதிலை அவர்களுக்கு அளிப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

38. விடுமுறை முடிந்து வரும் மாணவர்களுக்கு முதல் நாளே பாடத்தை ஆரம்பித்தால், அது அவர்கள் அத்தனை நாளாக அனுபவித்த சுதந்திரத்துக்கு எதிர்மறையாக அமைந்து, மன அழுத்தத்தைக் கொடுக்கும். எனவே, முதல் வாரத்தில் அவர்களைக் கையாள்வதற்கான முறைகளைத் திட்டமிடலாம்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

39. மாணவர்களின் விடுமுறை அனுபவங்களை சொல்லச் சொல்லி கேட்கலாம். அப்போது அவர்களுக்கு வகுப்பின் மீது அதிக ஆர்வம் உண்டாகும்.

40. ஊரின் விழாக்கள், சொல் வழக்குகள், பாட்டி சொன்ன கதைகள்... இவை பற்றி பேசச் சொன்னால் முதல் நாள் முத்தான நாளாக அமையும்.

41. விடுமுறையில் கராத்தே கிளாஸ், டான்ஸ் கிளாஸ் போன்றவற்றுக்கு போய் வந்த மாணவர்களை 'பெர்ஃபார்ம்' செய்து காட்டச் சொல்லலாம். அவர்களின் தன்னம்பிக்கைக்கு நீங்கள் நீர் ஊற்றியதாக இருக்கும்.

புதுப்பொலிவு பெறட்டும் பள்ளிகள்!

வரும் கல்வி ஆண்டில் தங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னும் சிறப்பான, தரமான ஒரு கல்வி தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க, பள்ளி நிர்வாகம் இந்த விஷயங்களில் எல்லாம் கவனம் கொடுக்க வேண்டியது அவசியம்...

42. பள்ளி என்றதும் ஞாபகம் வருவது கரும்பலகைதான். அந்தப் பலகைகள் எல்லாம் சரியாக எழுதுகிறதா என்பதை சரி பாருங்களேன். சரியில்லாதவற்றை செப்பனிட இதுதான் சரியான நேரம்.

43. வகுப்பு அறையில் இருக்கும் மின்விசிறி, ஒலிப்பெருக்கிகள் போன்ற மின்சாதனப் பொருட்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சரி பார்த்து வைப்பது நிர்வாகத்தின் கடமை.

44. மழை பெய்து விளையாட்டு மைதானம் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்கும்போது அலட்டிக் கொள்வதைவிட, இப்போதே சமமில்லாத இடத்தில் மணல் கொட்டி சரி செய்வது, போதுமான விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைப்பது போன்ற நடவடிக்கைகள்... பிள்ளைகளின் மனதுக்குப் பிடித்த சொர்க்கமாக உங்கள் பள்ளி கிரவுண்ட்டை மாற்றிவிடும்!

45. அறிவியல் ஆய்வுக் கூடங்களில் உபகரணங்கள் எல்லாம் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப இருக்கிறதா, கண்ணாடிப் பொருட்கள் எல்லாம் உடைந்து போய் உள்ளனவா என்று செக் செய்துவிட்டால்... சரியான சமயத்தில் சரி செய்த பெருமிதம் உங்களுக்கு இருக்கும்.

46. ஆசிரியர்கள் வருடம் முழுக்க எனர்ஜெட்டிக்காக இருக்க ஒரு 'கெட் டுகெதர்' ஏற்பாடு செய்யலாம். அதில் கலந்துரையாடலுக்கு வழி வகுத்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்கலாம். 'நம் பிரச்னைகளை நிர்வாகத்திடம் சொல்ல முடியவில்லையே' என்பது பல ஆசிரியர்களின் ஆதங்கம்.

47. ஆசிரியர்களின் திறனை இன்னும் மெருகேற்ற... ஏதாவது குறுகிய கால விசேஷ பயிற்சி அளிப்பது குறித்து யோசித்து, செயல்படுத்தி பாருங்கள். அறுவடை பல மடங்கு இருக்கும்.

பப்ளிக் எக்ஸாம் மாணவர்களுக்கு!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என எதிர்வரும் கல்வி ஆண்டில் பள்ளி இறுதித் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், பள்ளித் திறப்பதற்கு முன்பாகவே சில விஷயங்களை பிளான் செய்து கொண்டால், அது அந்த வருடம் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

48. 'இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்... எப்படி எழுதப்போறோமோ...' என்று ஆரம்பத்திலேயே படபடக்காமல், 'நான் நன்றாகத் தேர்வை எழுதிவிடுவேன்' என்ற பாஸிட்டிவ் மனநிலையுடன் பள்ளிக்குத் தயாராகுங்கள். பெற்றோர்களும், ''இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போற... ஆட்டம் போடாம படி, படி" என்று டென்ஷன் வார்த்தைகளைத் தெளிக்காமல் இருப்பது, அவர்களின் பொதுத் தேர்வு பற்றிய பயத்தை நீக்கும்.

49. பள்ளி சீனியர்களிடம் அவர்கள் எழுதிய மிட்-டெர்ம் டெஸ்ட், திருப்புதல் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகள் என அனைத்துக் கேள்வித் தாள்களையும் வாங்கி வைத்துக் கொண்டால்... அது நல்ல பலனைத் தரும்.

50. கேள்வித்தாள்கள் ஒரிஜினல் கிடைக்கவில்லையெனில், கிடைக்கப்பெற்ற மாணவர்களிடமிருந்து அவற்றை ஜெராக்ஸ் செய்து கொள்ளலாம். பிள்ளைகள் இதைச் செய்யாவிட்டால், பெற்றோர்கள் தங்களின் அலுவலக நண்பர்களின் பிள்ளைகளிடம் கேட்டு வாங்கிக் கொடுக்கலாம்.

51. உங்கள் பலமும் பலவீனமும் உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும். எனவே, எந்த பாடத்தில் நீங்கள் ஹையர், லோயர் என்பதை சுயமதிப்பீடு செய்து, அதற்கு ஏற்றாற்போல உங்களின் உழைப்பைக் கூட்டுங்கள்.

52. உதாரணமாக, ஆங்கில கிராமரில்தான் தகராறு என்றால்... சீனியர்கள் பயன்படுத்திய கிராமர் கைடுகளை வாங்கி பிராக்டீஸ் செய்து பாருங்கள். பலன், பரீட்சை பேப்பரில் தெரியும்.

53. கணக்குடன்தான் பிணக்கு என்றால், கணக்குப் பாடத்தில் எந்த சேப்டரில் ரொம்ப வீக்காக இருக்கிறீர்களோ, அந்த சேப்டரில் கிங்காக உள்ள உங்கள் நண்பர்களிடம் கேட்டு போட்டுப் பார்த்தால், வகுப்பில் ஆசிரியர் அந்தப் பாடத்தை நடத்தும்போது நிமிர்ந்த நெஞ்சத் துடன் இருக்கலாம்.

54. வேதியியல் சமன்பாடுகள், இயற்பியல் கணக்குகள் எல்லாவற்றையும் 'வொர்க் அவுட்' செய்து பார்க்கும் பயிற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

55. தமிழ், ஆங்கிலத்தில் மனப்பாட பாட்டுக்களை மனப்பாடம் செய்வது என்றாலே சிலருக்கு எட்டிக்காய்தான். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் அந்தப் பாடல்களை மட்டும் கற்றுத்தர சொல்லி, மனப்பாடம் செய்ய முயற்சிக்கலாம்.

56. பொதுத் தேர்வுகளில் மார்க்கை அள்ளித் தரும் சக்தி நல்ல கையெழுத்துக்கு உண்டு. இந்த விடுமுறையில் கையெழுத்துப் பயிற்சி எடுங்கள். எழுதி எழுதி உங்கள் கையெழுத்தை சரிபடுத்துங்கள்.

57. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடத்தில் வீக்காக இருந்தீர்களோ, அந்தப் பாடத்தை ஜஸ்ட் ஒரு மணி நேரம் ஒதுக்கி திரும்பப் படியுங்கள். பேஸ்மென்ட் 'ஸ்ட்ராங்'காக இருந்தால்தானே பில்டிங் 'வீக்' ஆகாமல் இருக்கும்..!

58. எந்தப் பிரிவு மாணவர்களாயினும் அடிப்படையில் தெளிவு இல்லாமல் அடுத்த அடியை எடுத்து வைப்பது குழப்பத்தைத்தானே உருவாக்கும்? எனவே, அரிச்சுவடியை ஆழமாகப் படித்து விடுங்கள் நண்பர்களே!

முதன் முதலாக பள்ளி செல்லும் மொட்டுகளுக்கு!

உங்கள் குழந்தை இந்த வருடம்தான் ப்ளே ஸ்கூல், ப்ரீ கே.ஜி... என்று முதல் முதலாக பள்ளியில் அடியெடுத்து வைக்கப் போகிறதா..? அதற்கு பள்ளி என்பது சந்தோஷத்தை அள்ளித் தரும் இடம் என்ற எண்ணத்தை விதைத்து, அதை அனுபவமாக மாற்றினால்தான், குட்டீஸ் அங்கு முழுமனதுடன் செல்லும். 'ஸ்கூலுக்கு போகமாட்டேன்...' என்ற அலறல் கேட்காமல், அவர்கள் ஆனந்தமாக உங்களுக்கு 'டாட்டா' சொல்லிவிட்டு பள்ளி கிளம்பும் அனுபவம் பெற...

59. அட்மிஷனுக்கு இரண்டு, நான்கு மாதங்களுக்கு முன்பாகவே மனதளவில் குழந்தையை பள்ளிக்கு தயார்படுத்துங்கள். குழந்தைக்கு புத்தகங்களில் இருந்து படித்து கதை சொல்லுங்கள். இதனால் பள்ளியில் புத்தகத்தைப் பார்க்கும்போது மிரட்சி ஏற்படாமால், சுவாரஸ்யம் பெருகும் அவர்களுக்கு. 'புத்தகம் கதை சொல்லும்' என்ற எண்ணம் அதன் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

60. அவர்களின் அண்ணனோ, அக்காவோ படிக்கும் பள்ளியின் விழாக்களுக்கு அவர்களையும் உடன் அனுப்பி வைக்கலாம். அப்போது, 'ஆஹா, ஸ்கூல் ரொம்ப ஜாலியான இடம்' என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியலாம். 'ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்'!

61. தானே உட்கார்ந்து சாப்பிடத் தெரியாத சின்ன குழந்தைகளுக்கு, பள்ளிக்கு சென்றதும் சாப்பிடுவது சிரமாக இருக்கும். அதனால், இப்போதே சாப்பிடப் பழக்கலாம். 'டாய்லெட் டிரெய்னிங்'கும் கொடுத்துவிடுவது நலம். 'ஸ்கூல்லதான் ஆயாம்மா இருப்பாங்கள்ல... பார்த்துக்குவாங்க...' என நினைக்காமல் கற்றுத்தந்து விட்டால், நோ பிராப்ளம்.

62. ரைம்ஸ் சி.டி-கள், ஸ்டோரி டெல்லிங் சி.டி-களை அவ்வப்போது பிளேயரில் ஓட விட்டு, அவர்களுக்கு அதை அறிமுகப்படுத்துங்கள். அல்லது அவ்வப்போது நீங்களாகவே பாடுங்கள். இயல்பாக மனதில் பதியும் அவர்களுக்கும்.

63. பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, ஆல்ஃபபெட்ஸ், கலர்ஸ், ரைம்ஸ் என்று நீங்கள் கற்றுக் கொடுத்தவற்றை, ''எங்க சொல்லு பார்ப்போம்..." என்று அதிகார தொனியில் மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லி கேட்காதீர்கள். அவர்கள் நல்ல மனநிலையில் உள்ளபோதோ, விருந்தினர் முன்னிலையிலோ பெருமித அனுபவமாகக் கேட்கலாம். அதையும்கூட அடிக்கடி செய்தால் எதிர்வினையாகிவிடும்... கவனம்.

64. அடிக்கடி அவர்களின் வளர்ச்சியை சோதித்து அவர்களின் மனநிலையைக் கெடுக்காமல் அவர்களின் கற்றலுக்கு அவர்கள் போக்கிலேயே உதவ வேண்டும். ஒரு செடி வளர்ப்பவன் எப்படி தினமும் வேரைப் பிடுங்கி வளர்ச்சியை அளவிடக் கூடாதோ அப்படித்தான் பெற்றோரும்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

65. அறிவு என்பது குழந்தைகளின் மனதில் வேரைப் போல வளர வேண்டியது; அதை ஆணியைப் போல அறைவானேன். யோசியுங்களேன்... ப்ளீஸ்!

66. 'ஆசிரியர்', 'நண்பர்கள்' போன்ற வார்த்தைகளுக்கு நல்ல வரையறைகளை அவர்கள் மனதில் பதிவு செய்யுங்கள்.

67. உங்களின் நல்ல பள்ளி அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வகுப்பினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காட்டலாம்.

68. 'பள்ளிக்கு செல்லப்போகும் நாள் ஒரு திருவிழா நாள்... பள்ளிக்குப் போகும் செயல் பெருமைப்பட வேண்டிய செயல்' என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஊன்றுங்கள்.

69. பள்ளியின் முதல் நாளில் பிற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள இனிப்புகள், பலூன்களை முன்னதாகவே வாங்கி வைத்து, ''இது உனக்கும் உன் நண்பர்களுக்கும்..." என்று சொல்வது போன்ற சிறிய மகிழ்வூட்டும் செயல்களிலும் கவனம் செலுத்துங்கள்.

70. முதல் நாள், பள்ளியென்னும் ஒரு புதிய சூழலில் தன்னை நிராதரவாக விட்டுப் போவதாக எண்ணுவதால்தான் பெரும்பாலான குழந்தைகள் மிரண்டு, அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் அழாமல் உற்சாகமாகச் செல்ல முன்பே ஓரிருமுறை பள்ளியை சுற்றிக் காட்டி, ''இங்கதான் குட்டிம்மா படிக்கப் போறாங்களாம்..." என்று அறிமுகப்படுத்தலாம்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

71. குழந்தை முரண்டு பிடித்தால், அடித்து கட்டாயப்'படுத்தி' இழுத்துப் போகமல்... முடிந்த அளவு சமரசம் செய்து அனுப்பலாம். அழுது அடம் பிடிக்கும் குழந்தையை, அப்படியே விட்டுவிட்டு வரக் கூடாது.

72. முதல் நாள், பெற்றோரில் ஒருவர் தங்கள் குழந்தையின் பள்ளி வளாகத்திலேயே இருந்தால்... வகுப்பு முடித்து வெளியில் வரும்போது அவர்களைப் பார்க்கும் குழந்தைக்கு, அடுத்தா நாள் வகுப்புக்குச் செல்லும்போது, 'நம்ம அம்மா வெளியதான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க...' என்ற நம்பிக்கை வரும்.

73. உங்கள் குழந்தையை எப்படி எளிதில் சமாதானப்படுத்துவது, அதற்கு என்ன என்ன பிடிக்கும் என்பது போன்ற விவரங்களை ஆசிரியரிடம் தெரிவிப்பது நலம். அதிகம் அடம்பிடித்தால் உங்கள் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளலாம்.

74. ''சாப்பிடலைனா உங்க மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..." என்று குழந்தைகளிடம் ஆசிரியரை ஒரு பூச்சாண்டியைப் போல அறிமுகப்படுத்த வேண்டாம். ''மிஸ் உனக்கு இன்னிக்கு நிறைய கதை சொல்வாங்க..." என்று அன்பானவராக அறிமுகம் செய்யுங்கள்.

75. முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும்போதே புத்தகம், பென்சில் எல்லாம் வேண்டவே வேண்டாம். ஸ்நாக்ஸ் பாக்ஸ், வாட்டர் பாட்டில் மட்டும் போதுமானது

76. ஆசிரியர்களும்கூட 'ரைம்ஸ்'களை இரண்டாம் நாளுக்கு தள்ளிப்போட்டு விட்டு, முதல் நாள் அந்த பூக்குட்டிகளிடம் கண்கள் விரித்து கதை பேசலாம். அது குழந்தைகளுக்கு நல்ல தோழமை உணர்வை ஏற்படுத்தும்.

77. முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பலூன், சாக்லேட் போன்றவற்றையோ, ஆர்வம் தூண்டும் வரைபடங்களையோ கொடுத்து அடுத்த நாளின் மீது எதிர்பார்ப்பு வரும்படி செய்யலாம்.

பெற்றோர்களும் கற்றுக்கொள்ளுங்கள் கல்விமுறைகள் பற்றி!

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

தங்கள் குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதும், நோட் புக் வாங்கித் தருவதும், டியூஷனுக்கு ஏற்பாடு செய்வதும் போதுமானது என்ற பெற்றோர்களின் எண்ணப்போக்கு, உங்கள் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு கை கொடுக்காது. இப்போது கல்விமுறை திட்டங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அவை பற்றி தெளிவான புரிதல் இருந்தால்தான், உங்கள் குழந்தைகளுக்கான கல்விப் பாதையை நீங்கள் சீராக்கித் தர முடியும். அதற்காக...

78. 'நாம படிக்காத படிப்பா... எழுதாத பரீட்சையா...' என்று எண்ணாமல், புதிதாக வந்திருக்கும் மாற்றங்களை எல்லாம் அறிந்து வைத்துக் கொள்வது... குழந்தை வளர்ப்பில் மிகவும் துணை செய்யும்.

79.. 'ஏ.பி.எல்' (A.B.L - Activity based learning) எனப்படும் 'செயல்வழிக் கற்றல்' கல்வி முறையில் 1 முதல் 4 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒன்றாகவே உட்கார வைக்கப்படுகின்றனர். அனைவருக்கும் பொதுவாக பாடம் நடத்தப்படுவதால் வகுப்பு வாரியாக உட்கார வேண்டிய அவசியம் இல்லை.

80. 'ஏ.எல்.எம்.' (Active Learning Methodology) 'படைப்பாற்றல் கல்வி' எனப்படும் இந்த முறையானது ஏ.பி.எல். முறையின் அடுத்தக் கட்டம். இது 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது. மனப்பாடம் செய்து ஒப்பிப்பதைவிட, புரிந்துகொண்டு கற்றுக் கொள்ளும் முறை. 1 முதல் 4 வகுப்புகள் வரை 'ஏ.பி.எல்' முறையில் படித்தவர்களுக்கு, இந்த 'ஏ.எல்.எம்' முறை எளிதாக இருக்கும்.

81. ரேங்க் சிஸ்டம், கிரேடு சிஸ்டம் என்று உங்கள் பிள்ளைகளின் பள்ளியில் எந்த முறை நடைமுறையில் உள்ளதோ, அதன் நுணுக்கங்களையும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை பர்சன்டேஜில் இருந்து இத்தனை பர்சன்டேஜ் வரை இந்த கிரேடு, பத்து ரேங்குக்குள் எடுக்கும் பிள்ளைகளின் சதவிகிதத்தில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

82. உங்கள் பிள்ளை சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறதா என்பதை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ''அப்பா... இந்த மிட்-டெர்ம்ல எங்க கிளாஸ்ல எல்லாருமே இந்த சப்ஜெக்ட்ல ஆவரேஜ் மார்க்தான்பா..." என்று பிள்ளைகள் கூறுவதை முழுமையாக நம்ப வேண்டாம்.

83. 'அனைவருக்கும் சமமான கல்வி' என்ற சமச்சீர் கல்வியின் அடிப்படை மந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதன் திட்டங்கள், மற்றும் வழிமுறைகளைக் கூர்ந்து கவனிக்கும் பெற்றோர்களே அதன் பலன்களை பிள்ளைகளுக்குத் தரமுடியும். இம்முறையில் பின்னடைவுகளும் இருக்கலாம்.

ஹாஸ்டலில் சேர்க்கப் போகிறீர்களா?

பெற்றோரின் வேலைச் சூழல், தரமான கல்வி என்று பல்வேறு காரணங்களால் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்க்கும் பெற்றோர் பெருகிக் கொண்டிருக்கின்றனர். ரெசிடென்ஷியல் ஸ்கூல் எனும் அந்தக் கலாசாரத்துக்குள் குழந்தைகளை வளர்க்க நினைப்பவர்களுக்காக...

84. ஹாஸ்டலில் தங்கிப் படிக்க குழந்தைகள் பெரும்பாலும் விரும்புவது இல்லை. காரணம், அம்மா- அப்பாவை விட்டு பிரிந்து இருக்க மனதளவில் தயாராக இல்லை என்பதுதான். கட்டாயப்படுத்தி சேர்க்கும்போது... ஒரு நன்னாளில் அழுது கொண்டே வீட்டுக்கு வந்து நிற்கலாம் உங்கள் செல்லம். ஆகையால், ''உன் எதிர்காலம் நல்லா இருக்கணும் என்பதற்காகத்தான் சேர்க்கிறேன். நம்ம ஊர்ல இது மாதிரி நல்ல ஸ்கூல் இல்லையேப்பா" என்றெல்லாம் உண்மையான காரணங்களைச் சொல்லி, மனதளவில் தயார்படுத்திய பிறகு சேர்ப்பதே நலம்.

85. உங்கள் செல்லத்தை, நீங்கள் சேர்க்க நினைக்கும் ஹாஸ்டலில், ஏற்கெனவே தங்கிப் படிக்கும் பிள்ளைகளிடம் பேசுங்கள். அங்குள்ள நிலவரத்தை தெளிவாக கேட்டறியுங்கள். திருப்தி அளிக்கும்பட்சத்தில் பிள்ளையைச் சேர்ப்பது பல்வேறு பிரச்னைகளைத் தடுக்கும்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

86. ஹாஸ்டலில் சேர்க்கும் முன், அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டு என்னென்ன பொருட்கள் பிள்ளைக்குத் தேவைப்படுகிறதோ அதை முன்கூட்டியே வாங்கிக் கொடுத்து விட்டால், சிரித்துக் கொண்டே போவார்கள்.

87. 'கிடைத்து ஸீட்' என்று தள்ளிவிட்டு வராமல், ஹாஸ்டலில் நல்ல சாப்பாடு, தண்ணீர் வசதி, பாதுகாப்பான குளியல் அறைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் நோட்டமிட்டு விட்டால், நோ பிராப்ளம்.

88. சாப்பாட்டைவிட பாதுகாப்பு முக்கியமல்லவா..! ஹாஸ்டல் எந்த சூழ்நிலையில் அமைந்திருக்கிறது; மனிதர்கள் நடமாடும் இடமா; மெயின் ரோட்டிலிருந்து அதிக தூரம் நடக்க வேண்டுமா; மரம், செடி, கொடிகள் அடர்ந்த வனமா; பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடும் பகுதியா... என்பதைஎல்லாம் நீங்கள்தான் பார்த்து சேர்க்க வேண்டும்.

89. ஹாஸ்டலில் பாதுகாப்பு முறைகள், ஒழுங்கு விதிகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். 'மாலை எத்தனை மணிக்குள் வர வேண்டும், விடுமுறையின்போது பிள்ளைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் வரவேண்டுமா..? அவர்களை எத்தனை மாதங்களுக்கு/வாரங்களுக்கு ஒருமுறை வந்து பார்க்க முடியும்? அதற்கு 'சிறப்பு விசிட்டிங்' கார்டு வழங்கப்படுமா?' என்பது போன்ற விவரங்களை மறக்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

90. முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்... வார்டன்! நம் செல்லம், முழுக்க அவர் பொறுப்பில்தான் இருக்கப்போகிறது என்பதால், அவருடைய குணாதியசங்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொள்வது பல சமயங்களில் உதவும்.

91. புதிதாக வந்து சேரும் மாணவர்களை, சீனியர்கள் ரேகிங் செய்வார்களா, வார்டன் அந்த ஹாஸ்டல் வளாகத்துக்குள்ள்ளேயே தங்கி இருக்கிறாரா, பக்கத்தில் மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதையும் கவனிக்கத் தவறாதீர்கள்.

92. விடுதியில் தொலைபேசி வசதி இருக்கிறதா... இருக்கிறது என்றால் எத்தனை மணிக்கு தொடர்புகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது முக்கியம். தனித்திருக்கும் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நாம் பேசும் வார்த்தைகள் மனதில் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

நீங்களும் மாணவர்தான்..!

வீட்டிலிருக்கும் நாமும் மாணவர்களாக மாறினால்தான், நம் செல்லம் நல்லபடியாக படித்து வெளியே வரமுடியும் எனும் அளவுக்கு... இன்றைய கல்வி முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள். 'கிராஃப்ட், அசைன்மென்ட், புராஜெக்ட் வொர்க்' என நம் தலைமுறை கல்லூரிகளில் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்தத் தலைமுறை பிரைமரி ஸ்கூலிலேயே பயன்படுத்துகிறார்கள்.

''ம்... படிக்கறது அவனா... நானானு தெரியலையே?'' என்று அலுத்துக் கொண்டாவது எல்லாவற்றையும் வாங்கித் தந்துதான் ஆகவேண்டியுள்ளது. அதற்கு...

93. அசைன்மென்ட் என பிரைமரி வகுப்புகளில், ஆரம்ப கட்டங்களில் அதிகம் பூ, காய், கனிகள், விலங்குகள், உலக நாடுகள் போன்றவற்றின் படங்களை ஒட்டி வரச் சொல்வார்கள். இந்தப் படமெல்லாம் நம் பக்கத்தில் இருக்கும் ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும் என அலட்சியமாக நினைத்துப் போனால், ''நம்ம கடையில அதெல்லாம் இல்லீங்க" எனச் சொல்லி, கடைசி நிமிடத்தில் டென்ஷன் எகிறும். இந்த மாதிரியான படங்கள் அடங்கிய சார்ட்டுகள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் ஸ்டேஷனரி கடைகளில் பெரும்பாலும் கிடைக்கும்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

94. ''அனிமல் ஹவுஸ் செய்யணும். மிஸ் நாளைக்கு கண்டிப்பா எடுத்துட்டு வரச் சொன்னாங்க" என்று அழாத குறையாக குழந்தை நிற்க, 'அதை செய்ய தெர்மக்கோல் எங்க கிடைக்கும்' என விழி பிதுங்கி நிற்போம். கவலையேபடாமல் கொஞ்சம் பெரிய ஸ்டேஷனரி கடைகளில் கேட்டால்... நிச்சயம் கைகொடுப்பார்கள். அளவு, திக்னஸ் ஆகியவற்றுக்கு ஏற்ப விலை மாறுபடும். முன்கூட்டியே ஒரு செட் வாங்கி வைத்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம்.

95. ''எப்ப பார்த்தாலும் 'இதை செஞ்சுட்டு வா, அதை செஞ்சுட்டு வா'னு சொல்றாங்க. ஒட்டுற கம் வாங்கியே காசு கரையுது" என புலம்பாத பெற்றோர் இருக்க முடியாது. 5 ரூபாய், 10 ரூபாய் கொடுத்து கம் வாங்கினால் கட்டுப்படியாகாதுதான். ஹார்டுவேர் ஸ்டோர்களில் ஃபெவிகால் உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். விலை குறைவாகவும் கிடைக்கும்.

96. ''ரெயின் பத்தி ஃபிளிப் சார்ட்டுல 10 பாயின்ட்ஸ் எழுதிட்டு வர்ற சொன்னாங்க. அப்படியே சார்ட்டுல லேடீஸ் ஃபிங்கரோட பிரின்ட்ஸ் வரைஞ்சிட்டு வரச் சொன்னாங்க" என ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தை ஞாபகப்படுத்தும். விடிந்தால் பள்ளிக்குப் போக வேண்டும். என்ன செய்வது..? கொஞ்சம் வாட்டர் கலர், கிரையான் பென்சில், கலர் பென்சில், கலர்கலராக சார்ட் பேப்பர் - இவற்றையெல்லாம் ஸ்டாக் வைத்துக் கொண்டால்... எப்பவும் நாம்தான் 'ராணி மகாராணி'!

97. வெட்டி ஒட்டும் வேலைகள் அதிகம் இருக்கும். ஆனால்... பேப்பர், சார்ட் இதையெல்லாம் கட் பண்ண நம்மிடம் சரியான கத்தரிக்கோல் இருக்காது. இரண்டு அளவுகளில் இதனை வாங்கி வைத்துக் கொண்டால் அது புத்திசாலித்தனம்.

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...

98. முணுக்கென்றால்... ஸ்டேப்ளர் தேவைப்படும் காலம் இது. அதனால், ஸ்டேப்ளர், அதற்கான பின், குண்டூசி, பஞ்சிங் மெஷின் போன்ற ஸ்டேஷனரி அயிட்டங்களை வாங்கி, நினைத்தபோது சட்டென்று எடுக்கக் கூடிய இடத்தில் வைத்து விட்டால், 'அய்யோ' எனக் கையைப் பிசைந்து நிற்கும் நிலை வராது.

99. பல சமயங்களில்... ஜிகினாப் பொடி, சமிக்கி போன்ற அயிட்டங்கள்கூட கிராஃப்ட் வொர்க்குக்காக தேவைப்படும். அவற்றைக்கூட ஃபேன்ஸி ஸ்டோர்களிலிருந்து வாங்கி கொஞ்சம் ஸ்டாக் வைப்பது நல்லது.

100. அவ்வப்போது... ஓவியப் போட்டி, ஒட்டுதல் போட்டி என்று பள்ளிகளில் எதையாவது கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் ஏதாவது ஒரு தனியார் நிறுவனம், தங்களின் தயாரிப்பை வாங்க வைப்பதற்காக இப்படி ஐடியா செய்யும். ஆனால், 'இதைக் கட்டாயம் செய்யணுமா?' என்று பள்ளிகளில் கேட்டால்... 'ஜகா' வாங்கிவிடுவார்கள். எனவே, 'இது முக்கியமா?' என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

இனிதே துவங்கட்டும் இந்தக் கல்வி ஆண்டு... மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி தரப்புக்கு!

தொகுப்பு
நாச்சியாள்,
இரா.மன்னர்மன்னன்
படங்கள்
ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்

தொகுப்புக்கு உதவியவர்கள் ஜெயக்குமாரி தணிகாசலம்,

அரசு உயர்நிலைப் பள்ளி, தியாகதுருகம், விழுப்புரம்
ஆர்.லதா, பள்ளி ஆசிரியர், கற்பகவள்ளி வித்யாலயா ஆரம்பப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை
ஜி.கோபாலன், கல்வியாளர், அக்ஷயா அறக்கட்டளை, சென்னை
வித்யா சங்கர், ரிலீஃப் ஃபவுண்டேஷன், சென்னை

விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...
 
விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...
விட்டாச்சு லீவு....விடாது ஸ்கூலு...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு