வினாடி-வினா போட்டியில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியரும் ஒரே அணியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் 'சினிமா ரவுண்டை' தேர்ந்தெடுத்தபோது "ஓஹோ... மிஸ்ஸெல்லாம் இப்போ ரொம்ப சினிமா பார்க்குறீங்களா, உங்க ஸ்டூடன்ட்ஸ்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்" என்று கலாய்த்து காலி பண்ணினார் அபீக்ஷா.
ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் இடையில் செமத்தியான ஹிட் ஹாட் குத்துப்பாட்டு ஒன்றை இசைக்க சொல்லி ஆடி அடங்கினார்கள் ஆடியன்ஸ். இதையெல்லாம் முன்வரிசையில் உட்கார்ந்து பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்த நடுவர் கூட்டமும் ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்றபடி களத்தில் குதித்து ரகளையாக ஸ்டெப்ஸ் போட்டு அசத்த, அது 1000% ஆனந்த அனுபவமாக மாறியது.
இப்படி செவிக்கும், கண்களுக்குமான ஜாலி விருந்தில் திளைத்திருந்த வாசகிகளுக்கு பகல் இடைவேளையில் டீ மற்றும் ஸ்நாக்ஸ், லஞ்ச் டைமில் ஹெல்தியான, டேஸ்டியான சாப்பாடு, மீண்டும் மாலையில் டீ, ஸ்நாக்ஸ் என்று அவர்களின் வயிற்றுக்கு விருந்திடலும் இனிதே நிகழ்ந்தது.
இறுதிப் போட்டியான 'பாட்டுக்கு பாட்டு' முடிந்ததும் அத்தனை பேரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பரிசு வழங்கும் வைபவம். முதல் பரிசாக கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்ஸி, மூன்றாம் பரிசாக குக்கர் மற்றும் ஆறுதல் பரிசுகள் என்று தோழிகள் கூட்டம் பரிசுகளை அள்ளியது. அடுத்து, 'பம்பர் பரிசு'க்கான அதிர்ஷ்டப் பெண்மணியை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு வந்தது. நம்பர் அறிவிக்கப்பட்டதும் 'ஹேய்' என்று உற்சாகக் குரல் கொடுத்தபடி மேடை நோக்கி ஓடிவந்த உமாமகேஸ்வரி பம்பர் பரிசை தட்டிச் சென்றார்.
|