கல்லூரியில் படித்த காலத்தில் தனியார் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அங்கே இரவு 9 மணியிலிருந்து 10.30 மணி வரைக்கும் 'ஸ்டடி ஹவர்'. மேல்தளம், கீழ்த்தளம் என்று அந்தந்த தளத்தில் இருக்கும் மாணவிகள் வராண்டாவில் அமர்ந்து படிக்க வேண்டும். தளம் மாறக் கூடாது. அன்று ஒரு நாள், கீழ்த்தளத்தில் இருந்த என் தோழிகள் சிலர், மேல்தளத்துக்கு வந்து எங்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து ரவுண்ட்ஸ் வந்த வார்டன் அதைப் பார்த்துவிட, அர்ச்சனை ஆரம்பமானது எங்களுக்கு. அப்போது, எங்கள் அறையில் இருந்து ஓடி வந்த கீழ்த்தள தோழி ஒருத்தி, "தள்ளு தள்ளு... வார்டன் ரவுண்ட்ஸ் வர்றாங்களாம். நான் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கறேன்..." என்றபடியே நைட்டியில் இருந்த வார்டனை அடையாளம் தெரியா-மல் விலக்கிவிட்டு ஓட, நாங்கள் சிரிக்க, அவள் விழிக்க, வார்டன் முறைக்க... ஜோக்கோ ஜோக்குதான் போங்க!
அதன்பின் அர்ச்சனை டபுள் மடங்கானது தனிக்கதை!
- எழில், ஓசூர்
இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி அனுபவங்களை
எழுதி அனுப்பலாம்.
முகவரி 'ஃப்ளாஷ்பேக்', அவள் விகடன்,
757, அண்ணாசாலை,
சென்னை-600 002
|