இன்றைய பெரும்பாலான அலுவலகங்களில் இளைஞர், இளைஞிகளை வேலைக்கு எடுத்து, வயோதிகர்களை விரட்டியடிக்கின்றனர். ஆனால், நான் பணிக்கு சேர்ந்த அந்த எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வங்கி, கம்ப்யூட்டர் நிறுவனம், அரசு துறை போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வயோதிகர்களை வேலைக்கு வைத்திருந்தார் எங்கள் முதலாளி.
வேலைக்கு சேர்ந்த புதிதில், ஐம்பது ஊழியர்களில் இருபத்தி ஐந்துக்கும் மேல் வயோதிகர்களாக இருந்ததைப் பார்த்த எனக்கு, அதைப் பார்க்க ஆச்சர்யமாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அம்மா, தங்கை, தம்பி, பாட்டி, தாத்தா என ஒன்றாக உண்டு மகிழ்ந்த நான், ஊர்விட்டு ஊர் வந்து ஒற்றைப் பறவையாக ஹாஸ்டல் அறைக்குள் ஒடுங்கியதால், அந்த முதியவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அதீத மரியாதையுடன், அன்பும் பெருக்கெடுக்கும்.
இன்றோ, 'கிழட்டுத் தொல்லை தாங்க முடியல' என்று தினம் தினம் புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறேன். அவர்களின் அநாகரிகத்தை படியுங்கள்... ஏன் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
பெண் ஊழியர்கள் யாராவது, என்றாவது லேட்டாக வந்தால், அவர்களை நிற்க வைத்து அந்த தாத்தாக்கள் கேள்வி கேட்பதை நான் குறை சொல்லவில்லை. ஆனால், கேட்கும் கேள்விகளால்தான் குமுறுகிறேன். ஒரு நாள், பத்து நிமிடங்கள் தாமதமாக சென்ற என்னிடம், "ஏன் லேட்டு? உனக்கு என்ன குழந்தையா குட்டியா? கல்யாணம் மட்டும் ஆயிடுச்சுனா... எந்திரிக்கவே மாட்ட போல இருக்கு!" என்று வார்த்தை வக்கிரத்துடன் பலருக்கும் கேட்பதுபோல் பேசினார் ஒரு முதிய அதிகாரி.
கடந்த வாரம், என் மேலதிகாரி ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரது ஃபைலை எடுத்து வரச் சொல்ல, நானும் எடுத்துச் சென்றேன். அரை மணி நேரம் கழித்து என்னை அழைத்தவர், ஃபைலை என்னிடம் வீசி எறிந்து, "எவன் நெனப்புல இருக்க? கல்யாணம் கட்டிக்கிட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் எங்க உயிரை வாங்கற?" என்று வாய்க்கு வந்தபடி பேச, ஊழியர்களின் முன்னால் கூனிக் குறுகிப் போனேன் நான். அவர் எடுத்து வர சொன்ன நபரின் பெயரில் இருவர் இருந்ததால், நான் தவறுதலாக மற்றொருவ ருடைய ஃபைலை எடுத்துச் சென்ற எனக்கு, இந்த அநாகரிக வார்த்தைகள் அதிகபட்ச தண்டனை இல்லையா?
இதுபோல் அங்கு இன்னும் பணி புரியும் பெண்கள் ஒவ்வொருவருக்குமே பல பல வடுக்கள்.
அந்த முதியவர்கள் அனைவரும் தங்களின் அத்தனை வேலைகளையும் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் தள்ளிவிட்டு, வாயில் வெத்தலையை கொதப்பியபடி, அந்தக்கால விஷயங்களையும், அவர்களின் இளம் வயது ஜெகதலபிரதாபங்களையும் வாய் கிழிய பேசி முடிப்பதற்குள், லஞ்ச் டைம் வந்துவிடும். பின் மீண்டும் எங்களை அரட்டி விரட்டுவதில் கழிப்பார்கள் மிச்ச பொழுதை.
இவர்களைப் போல இளமையில் கைநிறைய சம்பாதித்து, சேமித்து, ஓய்வு பெற்று, வீடு வசதி என செட்டிலானவர்களை பணியில் அமர்த்துவதைவிட, படித்து, சாதாரண வேலையில் இருந்து ஓய்வு பெற்ற... வசதியில்லாத வயோதிகர்களை வேலைக்கு சேர்த்தாலாவது, உழைப்பின் உன்னதமும், பணத்தின் அருமையும், பெண் பிள்ளைகள் பணிக்கு வந்ததன் நோக்கமும் புரியும். ஏழைகளுக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தந்த சந்தோஷமும் இருக்கும்.
முதலாளி வர்க்கங்களே... சும்மா இருப்பவனுக்கு சம்பளத்தை தருவதைவிட, உண்மையான உழைப்பாளிகளை உன்னிப்பாக கவனித்து அவர்களின் உயர்வுக்கு ஊக்கத்தை கொடுங்கள்!
- ஹேமமாலினி, சேலம்
|