Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம் (35)
கரு.முத்து
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுகப்பிரசவம் அருளும் செவ்வந்திநாதர்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

ந்தை தாயும் நீ
என் உயிர் துணையும் நீ
சஞ்சலம் அது தீர்க்க
வந்த தேசிக வடிவு நீ உனையல்லால்
மற்றொரு துணை காணேன்
அந்தம் ஆதியும் அளப்பரும் சோதியே
ஆதியே அடியார் தம்
சிந்தை மேவிய தாயுமானவன் எனும்
சிரகிரிப் பெருமானே!

உலகத்து உயிர்களுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் ஈசன், தாயாகவும் இருந்து அருள்புரியும் அற்புதத் தலமும் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது. 'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே' என்று பாடிய தாயுமானவ அடிகள் அவதரித்த திருச்சி நகரத்தில்தான் 'தாயுமானவன்' எனும் பெயரில் வீற்றிருந்து, தன்னை நெஞ்சத்தில் வைத்து வேண்டும் பெண்களுக்கு தாயாக இருந்து சுகப்பிரசவம் நடக்க அருள்புரிகிறார் இறைவன்.

'திரிசிராமலை' என்பதுதான் ஊரின் பெயர். மூன்று சிகரங்களை உடைய மலை என்பது பொருள். ராவணனின் தம்பிகளில் ஒருவனான திரிசிரன் எனும் அரசன் ஆட்சி செலுத்தி, இம்மலையில் உள்ள இறைவனை வழிபட்டு சிறப்படைந்ததாலும் இது திரிசிரா மலை ஆயிற்று என்பர். இது, பல்லவர்களின் வருகைக்கு பின்னர்... திரிசிராபள்ளி என்றாகி, பின்னாளில் திருச்சிராப்பள்ளி ஆயிற்று. அதுவும் சுருங்கி, தற்போது 'திருச்சி' என்று அழைக்கப்படுகிறது!

நகரின் அடையாளச் சின்னமாக இருப்பது மலைக்கோட்டை! அந்த மலையில், மேற்கு முகமாக அற்புதமான கட்டமைப்போடு கோட்டை போன்ற பெரிய மதில் சுவர்களோடு கூடிய கோயிலில் செவ்வந்திநாதனாக வீற்றிருக்கிறார் ஈசன். கீழே மாணிக்க விநாயகர், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார்... இடையில் இருப்பதுதான் செவ்வந்திநாதர் (தாயுமானவர்) கோயில். அங்கேயே தனி சந்நிதி கண்டு அருள்புரிகிறார் அன்னை மட்டுவார்குழலி.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

சுவாமி சந்நிதியில் நின்று மெய்யுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ஜெயமணி. "திருச்சிதான் என் சொந்த ஊர். திருமணமும் உள்ளூர்லயே முடிஞ்சது. நல்ல கணவர், அழகான, அறிவான குழந்தைகள்னு நிறைவான வாழ்க்கை. எல்லாம் இந்தத் தாயுமானவர் அருள்தான். தினமும் இருநூறு படியேறி இவரோட உச்சிகால பூஜை பார்க்க வராம என் பொழுது முடியாது.

இப்போ என் கணவரும் இல்லாத நிலையில, எனக்கும் என் குழந்தைகளுக்கும் தாயாவும், தந்தையாவும் இருந்து அருள் புரியறவரு இவருதான். என் பொண்ணுக்கு நல்ல இடத்துல திருமணம் முடிய, இவர்கிட்டதான் பொறுப்பை ஒப்படைச்சேன். அப்படியே முடிஞ்சுது. இப்போ, 'என் மக னுக்கும் அதேமாதிரி திருமண ஆசி கொடுப்பா'னு வேண்டிட்டு இருக்கேன்" என்று பரவசத்தோடு சொன்னார் ஜெயமணி.

இப்படி எல்லாவற்றுக்கும் இறைவனைச் சரணடையும் பக்தர்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம்... தங்களுக்குச் சுகப்பிரசவம் நடக்க வேண்டி, வந்து வழிபடுகிற கர்ப்பிணி பெண்களும், நேர்த்திக்கடன் செலுத்திவிட்டுப் போகும் தம்பதியரும் இங்கு அதிகம்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

இறைவன், இங்கே தாயுமாகி நின்றது... இத்தல வரலாற்றில் அற்புதமான சாட்சிக் கதை.

பூம்புகாரில் செட்டியார் குடியில் பிறந்து, திரிசிராமலையில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள் ரத்னாவதி. அன்பான கணவன், அழகான இல்லறத்தின் விளைவாக கருவுற்றாள். பிரசவ காலம் நெருங்கியதும் பூம்புகாரில் உள்ள தாய்க்குத் தகவல் அனுப்ப, அன்போடும் தவிப்போடும் பிள்ளைப்பேறு பார்க்க புறப்பட்டு வந்தாள் ரத்னாவதியின் அன்னை. ஸ்ரீரங்கம் வரை வந்தவளை, மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடைபோட்டது... காவிரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம். 'மகளை எப்போது பார்ப்போம்' என்று பரிதவிப்போடு அக்கரையிலேயே காத்திருந்தாள்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

இக்கரையில் பிரசவ வலி எடுத்த நிலையில், 'இன்னும் அம்மாவைக் காணோமே?' என்று வழியைப் பார்த்திருந்தாள் ரத்னாவதி. வலி உயிர் போகும் நிலையில், தான் அன்றாடம் வணங்கும் செவ்வந்திநாதரை நினைத்தாள். "தந்தையே, என் அச்சம் போக்கி, இந்தப் பெரும் வலி கடந்து, நான் பிள்ளை பெற நீதான் அருள் புரிய வேண்டும்' என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். அந்த அபலைப் பெண் படும் பிரசவ வேதனை, செவ்வந்திநாதரை துயரப்படுத்தியது. தானே போய் அவளுக்குப் பிரசவம் பார்க்க முடிவெடுத்தார்.

ரத்னாவதியின் தாயைப் போலவே உருவெடுத்தவர், அவளை அரவணைத்து, அன்பு செய்து பிரசவத்தை சுலபமாக நடத்தி முடித்தார். காவிரியில் வெள்ளம் வடியாது இருக்கவே... அங்கேயே ஏழு நாட்கள் தங்கி குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார். அதன் பின்னர் வெள்ளம் வடிந்து, இக்கரை வந்து சேர்ந்தாள் நிஜ தாய்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

அப்போது... தாயாக மாறிய ஈசனும் அங்கிருக்க, ரத்னாவதிக்கும் அவளுடைய கணவனுக்கும் பெரும் குழப்பம். இப்போது வந்தது தாய் என்றால், இதுவரை இருந்தது யார்? என்ற கேள்வியோடு அவர்கள் பார்க்க, அங்கே ரிஷபாருடராக தேவியுடன் காட்சி கொடுத்து, தன்னை வெளிப் படுத்தினார் தாயுமான ஈசன். அன்றிலிருந்துதான் சுகப்பிரசவம் வேண்டுவோரின் பிரார்த்தனை தலமாக இது உருவெடுத்தது.

தன் இரண்டு குழந்தைகளுக்கும் மொட்டை போட்டு, சுவாமி சந்நிதியில் வைத்து காது குத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் தொட்டியம் அருகிலுள்ள மாராட்சிபட்டியைச் சேர்ந்த விமலா செவ்வந்திலிங்கம்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

"என் வீட்டுக்காரருக்கு இதுதான் குலதெய்வம். ரெண்டு தடவை நான் உண்டானப்போவும், 'சாமி... சுகப்பிரசவமா ஆக்கி என்னையும் எம் புள்ளையும் பொழைக்க வைப்பா'னு இவருகிட்டதான் சரணடைஞ்சேன். ஆணும், பொண்ணுமா ரெண்டையுமே சுகப்பிரசவத்துலயே பெத்தெடுத்தேன். எங்களுக்கு எல்லாமா இருக்கற இவரை, எங்க குழந்தைகளோட சரணடைஞ்சு வேண்டிட்டுப் போகத்தான் வந்திருக்கோம்" என்றார் விமலா.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்

கோயில் பெருமைகளைப் பேசிய குருக்கள் பஞ்சாபகேசன், "சுகப்பிரசவத்துக்காக வேண்டிக்கொள்பவர்கள், அது பலித்த பிறகு, ஒரு வாழைத்தாரை கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அத்துடன் பாலபிஷேகம் செய்ய வேண்டும். இதுதான் நேர்த்திக்கடன். இங்கு வரும் அனைவருக்குமே திருநீறுடன் வாழைப்பழம்தான் பிரசாதமாக தரப்படுகிறது. அதைச் சாப்பிட்டால் நம்முடைய அத்தனை பிரச்னைகளும் தீரும்.

சுகப்பிரசவம் நடக்க பிரார்த்திப்பவர்கள், எங்கிருந்தாலும் 'ஹே சங்கர; ஸ்மரஹர; பிரமாதிநாத; மன்னாத; ஸாம்ப; சசிசூட; ஹர; திரிசூலின்; சம்போ; சுகப்பிரசவக்ருத் பவமே தயாளோ; ஸ்ரீமாத்ருபூத; சிவ பாலயமாம் நமஸ்தே' என்ற மந்திரத்தைத் தினமும் முன்று வேளை சொல்லி வந்தால், நம்முடைய இறைவன் தாயுமானவர், அம்பாள் மட்டுவார்குழலி ஆகியோர் அரு ளால் அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்!" என்று நம்பிக்கையோடு சொன்னார்.

எப்படிச் செல்வது?

ரயில், பேருந்து, விமானம் என்று அனைத்து வசதிகளும் இருக்கின்றன திருச்சியை அடைய! கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6 முதல் பகல் 12 மணி வரை. மாலை 4 முதல் இரவு 8 மணி வரை. அலுவலக தொலைபேசி எண் 0431-2704621 தாயுமானவரைத் தரிசிக்க வருகிறவர்கள், ஒரு நாள் பயணமாக வந்தால், உச்சிப்பிள்ளையார், திருவானைக்கோவில்... ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீரங்கம்... அரங்கநாதர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.!


கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்
-படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக்
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism