"எத்தனையோ பேரு பத்து ரூபாகூட போட்டிருக்காங்க. ஆனா, முகம் கொடுத்து ஒரு வார்த்தை பேசினது இல்ல" என்றவர், சொல்ல ஆரம்பித்தார் தன் சோகக் கதையை... உலகத்துக்கு!
"என் பேரு லட்சுமி. முசிறி பக்கம்தான் எங்க ஊரு. எங்க அப்பா தெருக்கூத்து, தோல்பாவைக் கூத்து எல்லாம் சொல்லிக் கொடுக்கற நாடக வாத்தியாரா இருந்தாரு. நான்தான் தலப் புள்ள. சூம்பின கை, காலோட பொறந்த என்னைப் பார்த்ததுமே... மனசக் கல்லாக்கிட்டு கொல்லப் பார்த்தாங்களாம். அப்புறம், 'உருவமா இல்லையினாலும் ஒரு உயிராவாச்சும் கிடந்துட்டுப் போகுது'னு பரிதாபப்பட்டு விட்டுட்டாங்களாம். எனக்கு பன்னெண்டு வயசு ஆகியிருந்தப்ப... உடம்பு சரியில்லாத எங்கம்மா, ரெண்டு தம்பிங்க எல்லாரையும் விட்டுட்டு எங்கப்பா செத்துப் போயிட்டாரு" என்ற லட்சுமியின் வாழ்க்கை, அதன் பிறகுதான் அதிக சிரமத்துக்குள்ளாகி இருக்கிறது.
"வீட்டுல பயங்கரமா வறுமை. எல்லாருக்கும் பசி. அம்மா அரிசிப் பானைய தட்டி உருட்டி காய்ச்சற கஞ்சியில... 'செல்லாக்காசு'னு வாழற எனக்கும் பங்கு கேட்டு நிக்க எனக்கே புடிக்கல. 'நாம இருந்து என்ன பண்ணப் போறோம்?'னு அழுதுகிட்டே பஸ் ஏறி, திருச்சி பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கிட்டேன். என்ன பண்றதுனு தெரியல. ஒரு ஓரத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருந்த எங்கிட்ட நாலஞ்சு பேர் சில்லறையைப் போட்டுட்டுப் போனாங்க. கடைசியில எண்ணிப் பார்த்தா 1 ரூபா 80 காசு இருந்துச்சு. கண்ணத் தொடச்சுகிட்டு, காசை எடுத்துட்டு வந்து அம்மாகிட்ட கொடுத்தேன்.
'ஏது?'னு கேட்ட அம்மாகிட்ட நான் விஷயத்த சொல்ல, 'பிச்சை எடுத்துயா?'னு சொல்லி அழுதுகிட்டே அடிச்சாங்க. ஆனா, எனக்கு அழுக வரல. 'உழைக்கறதுக்கான உடம்பு எனக்கு இல்ல... அதனால இனி இதுதான் என் தொழில்'னு முடிவெடுத்தேன். பதிமூணு வயசுல ஆரம்பிச்சது... இந்த முப்பத்தி ஆறு வயசு வரைக்கும் கையேந்திதான் ஓடுது என் பொழுது..." என்ற லட்சுமி, தான் எடுத்த பிச்சையால் பிழைத்த தன் குடும்பம் பற்றி பகிர்ந்தார்.
"எங்க ஊருல பிச்சை எடுத்தா எல்லாரும் கேலி பண்ணுவாங்கனு, தெனமும் திருச்சிக்கு வந்து பிச்சையெடுத்தேன். வீட்டுல எல்லாரும் வயித்துக்கு கஞ்சி குடிச்சாங்க. என்னோட இந்த உருவத்தால, எங்க வீட்டுல என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பல. அதனால, தம்பிகளையாச்சும் கண்டிப்பா படிக்க வைக்கணும்னு ஆசை எனக்கு. மொத தம்பி பத்தாவது முடிச்சதோட, 'பிச்சக்காரி தம்பினு கேலி பண்றாங்க'னு சொல்லி பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேனுட்டான். பன்னெண்டாவது வரைக்கும் படிச்ச ரெண்டாவது தம்பி, 'நீ எடுக்கற பிச்சையில காலேஜ் ஃபீஸெல்லாம் கட்ட முடியாது'னு சொல்லி, அவனும் படிப்பை முடிச்சுட்டான். ஆனாலும், கூலி வேல, கடை வேலைனு அனுப்பாம, அதுவரைக்கும் படிக்க வச்சது... குடும்பத்தை காப்பாத்தினதும் என் கையில விழுந்த பிச்சைக் காசுதான்" என்றவர், சேமிப்பும் பழகியிருக்கிறார்.
"கருணையுள்ளவங்க எனக்கு போடற காசை, செலவு போக கஷ்டப்பட்டு சேமிச்சும் வச்சேன். என் தம்பிங்க வளர்ந்து ஆளானப்போ, ஆளுக்கு அம்பதாயிரம்னு செலவழிச்சு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். குடும்பப்பாட்டுக்கே அவங்க கஷ்டப்படறதால, இப்பவும் பிச்சை எடுக்கற காசுலதான் நானும் எழுபது வயசாகப் போற எங்கம்மாவும் சாப்பிடறோம்..." எனும்போது கண்களில் ஓடும் நீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.
|