"திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருக்கும் நான், வேடியப்பனூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகளை அழைத்து வரும் வேனில்தான் தினமும் பள்ளிக்குச் செல்கிறேன். காலை எட்டு மணிக்கே தொடங்கிவிடும் பிள்ளைகளுடனான என் உலகம். ஆரம்பத்தில், 'ஐ... இந்த மிஸ்ஸப் பாரேன்... வெள்ள்ள்ளையா இருக்காங்க...' என்று என்னை ஒரு வேடிக்கை பொருளாக மட்டுமே பார்த்த குழந்தைகளிடம் நான் நெருங்க முடியாமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உலகத்தில் இறங்கி, அவர்களுடன் கலந்து, அவர்களுடனேயே இருந்து, நெருக்கமானவள் ஆனேன்.
குழந்தைகள், ஒரு காட்சித் தீனியாக என்னைப் பார்த்தது மாறி, 'மிஸ் நேத்து எங்க வீட்டுல மழை வந்துடுச்சு...', 'மிஸ் எங்க வீட்டு குட்டி பாப்பா கீழ விழுந்துருச்சு...', 'நோட் அட்டை கழண்டிடுச்சு... போட்டுத் தாங்க மிஸ்...' என்று என்னிடம் அனைத்தையும் பகிரும் ஒரு தோழியாக, அவர்களுக்கு பிடித்த ஆசிரியையாக ஆனேன்! பின் ஆரம்பமானது அவர்களுக்கான என் ஆக்கப்பூர்வ பங்களிப்பு..." என்றவர், பள்ளியில் தான் மேற்கொண்டிருக்கும் பொறுப்புகளைப் பட்டியலிட்டார்.
"ஆங்கிலம்... இதுதான் அவர்களை பயமுறுத்தும் விஷயமாக இருந்தது. எனவே, 'ஏ ஃபார் ஆப்பிள்... சொல்லுங்க...' என்று கையில் பிரம்புடன் கத்தாமல், ஃப்ரெண்ட்லியான சூழலில் அந்த ஆங்கில மொழியை அவர்களுக்கு கற்பித்தேன். ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் உண்டு. இப்போது இந்தப் பிள்ளைகளுக்கு நிறைய ஆங்கில வாக்கியங்கள் அத்துப்படி. ஆங்கில அறிவில் அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்துக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மாலை நேரங்களில் மற்ற பாடங்களுக்கான டியூஷனும் எடுத்தேன். விளையாட்டு, நடனம், நாடகம், பொது அறிவு, தனித்திறமைகள் என்று அவர்களுக்கு அனைத்து தளங்களிலும் பயிற்சி அளித்தேன். இப்போது என் விரல் பிடித்து, சமர்த்தாக சொன்ன வழி வருகிறார்கள் குழந்தைகள்..." என்றவர் பிரேக் டைமில் அந்த வழி கடந்த ஆசிரியைகளை 'பிக் மம்மி', 'மம்மி டூ' என்றெல்லாம் குறும்புடன் பட்டப்பெயர் சொல்லி அழைக்க, வெட்கி ஒளிகிறார்கள் அவர்கள். ஆம்! அந்தப் பள்ளியின் ஆசிரியைகளுக்கும் ஃப்ரான்சிஸ்கா ஃபேவரைட். அவர் அணிந்திருக்கும் காட்டன் சுடிதார், கண்ணாடி வளையல்கள் எல்லாம் அவர்களின் செலக்ஷனே!
"மிஸ்... பெல் அடிச்சாச்சு... வாங்க..." என்று ஒரு சிறுவன் ஃப்ரான்சிஸ்காவின் கையைப் பிடித்து இழுத்து அரங்கத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கே ஆண்டு விழாவுக்காக ஷேக்ஸ்பியரின் 'மிட் சம்மர் நைட் டிரீம்ஸ்' ஆங்கில நாடகத்தின் ரிகர்சலுக்கு குழந்தைகள் தயாராக இருந்தார்கள். பாவனைகளுடன் அவர்களுக்கு வசனங்களை கற்றுத் தந்து, சரிபார்த்துவிட்டு மீண்டும் நம்மிடம் வந்தார் ஃப்ரான்சிஸ்கா.
|