Published:Updated:

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

Published:Updated:

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
ரேவதி
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களே கண்காணிக்கலாம்... நிவாரணம் அளிக்கலாம்!

"நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன். என்னை எல்லாரும் 'குள்ளா குள்ளா'னு கிண்டல் பண்றாங்கம்மா..."

- தாயிடம் அந்தச் சிறுவன் அழ, ஆற்றாமையில் வாடுகிறது அந்த தாயின் முகம்.

"ஐயையோ... என்ன உங்க குழந்தை இப்படித் துரும்பா இருக்கு..?"

- அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் ஒரு பெண்மணி விசாரிக்க, வருத்தம் படர்கிறது அந்தத் தம்பதி முகத்தில்.

"என் பையன் வளர்றதுக்கு என்னதான் பண்றது..?"

"என் குழந்தைக்கு நல்ல சத்தான ஆகாரம்தான் தர்றேன். ஆனா, அவ ஒல்லியாவே இருக்காளே..."

- இவையெல்லாம் இன்று பல தாய்மார்களின் கேள்வி! விடைகள் தேடி, கேள்விகளை நிபுணர்களிடம் சேர்த்தோம்.

பப்ளி எல்லாம் ஆரோக்கியமல்ல... ஒல்லி எல்லாம் நோஞ்சானுமல்ல!

"முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒரு குழந்தை உயரமாகவோ, குண்டாகவோ இருந்தால், அது ஆரோக்கியமான குழந்தை என்றோ, குள்ளமாகவோ, ஒல்லியாகவோ இருந்தால், அது ஆரோக்கியமற்ற குழந்தை என்றோ எந்த மருத்துவ விதியும் சொல்லவில்லை.

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

ஊட்டச்சத்து பான விளம்பரங்களில் வருவதுபோல, உயரமான பிள்ளைகள் 'ஸ்டேட்டஸ் சிம்பல்' என்பதெல்லாம் அபத்தம். அதேபோல, தேகம் மெலிந்திருந்தாலும், நல்ல உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் குழந்தைகளும், 'பப்ளி பேபி' என்று கொஞ்சுமளவுக்கு கொழுகொழு பாப்பாவாக இருந்தாலும், செய்கைகளில் மந்தமாக இருக்கும் குழந்தைகளும் இங்கு கண்கூடு. எனவே, பார்வைக்கு எப்படி இருந்தாலும், குழந்தையின் உடல், மன நலம் முழுமையாக இருப்பதே முக்கியம்!" என்று மிகமிக முக்கியமான அறிவுரையோடு ஆரம்பித்தார்... சென்னை, எழும்பூரிலிருக்கும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநராக (பொறுப்பு) இருக்கும் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ராமச்சந்திரன்.

"உடனே, 'அப்போ என் பொண்ணு குள்ளமா, ஒல்லியா இருக்கறதுதான் சரினு சொல்றீங்களா டாக்டர்...?' என்று கேள்விகள் என்னிடம் வரலாம். அப்படியல்ல. ஒரு குழந்தை உயரமாகவோ, குண்டாகவோ இருக்க வேண்டும் என்பது அவசியமில்லைதான். ஆனால், தேவையான உடல் வளர்ச்சியுடன் இருப்பது முக்கியம்" என்ற டாக்டர், குழந்தைகளின் வளர்ச்சியைக் காலகட்டங்களாக பிரித்துச் சொன்னார்.

இப்படித்தான் வளர்ச்சி!

"உடல் மாற்றத்தைத்தான் வளர்ச்சி என்கிறோம். பொதுவாக... ஒரு குழந்தை, தன் தாயின் வயிற்றுக் குள் இருக்கும்போதே, அந்தத் தாய் எடுத்துக் கொள்ளும் உணவு, ஹார்மோன் மாற்றங்கள், யூட்ரஸின் நிலை, ரத்த ஓட்டத்தின் செயல்பாடுகள், மனநிலை... இவற்றைப் பொறுத்தும், மரபைப் பொறுத்தும் குழந்தையின் உயரம் உள்ளிட்ட உடல் வளர்ச்சியின் ஒரு பகுதி நிர்ணயிக்கப் பட்டுவிடுகிறது.

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

பிறந்த பிறகு, முதல் இரண்டு வருடங்களில் நிகழும் முதல்கட்ட வளர்ச்சி, முக்கியமானது. பிறந்ததும் 50 செ.மீ. உயரம் இருந்தால், படிப்படியாக 25 செ.மீ. வரை கூடி, ஒரு வயதில் கிட்டத்தட்ட 75 செ.மீ. அளவுக்கு வளரும். அடுத்த வருட இறுதியில் 12 செ.மீ. கூடி, 87 செ.மீ. வரை வளரும். அதன் பிறகு ஆண்டுக்கு சராசரியாக 6 செ.மீ. வளரும்.

குழந்தைகளின் இரண்டாவது கட்ட வளர்ச்சி... பெண் குழந்தைகளுக்கு 8 முதல் 9 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 10 முதல் 11 வயதிலும் நடைபெறும்.

மூன்றாவது கட்டமாக பெண் பிள்ளைகளுக்கு 14 முதல் 15 வயது வரையிலும், ஆண் பிள்ளைகளுக்கு 14 முதல் 17 வயது வரையிலும் ஒரு வளர்ச்சி இருக்கும். அதற்குப் பிறகு, குறிப்பிடும்படியான வளர்ச்சி இருக்காது. எனவே, குழந்தைப் பருவம் தொடங்கி, பருவ வயதுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கே, இந்தப் படிநிலை வளர்ச்சிகளை குழந்தைகள் தடையின்றி எட்ட உதவும்" என்ற டாக்டர், அந்தப் போஷாக்கை வழங்கும் விதம் பற்றியும் விளக்கினார்.

அண்டர் வெயிட்டை போக்கும் போஷாக்கு!

"குழந்தைகளின் வளர்ச்சிக்கான அடிப்படை போஷாக்கு, தாய்ப்பால்தான். ஆறு மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் சேரும்போது, உயரமும், எடையும் சரியாகத் தொடர்ந்து இருக்கும். ஒருவரின் உயரத்தை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு, எலும்புகளுக்குதான் இருக்கிறது. பருப்பு வகைகள், உளுந்து, பொட்டுக்கடலை போன்ற புரதச் சத்துள்ள உணவுகளை அதிகமாகக் கொடுத்து, எலும்பின் வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம்.

தினமும் குதித்து விளையாடுதல், உயரம் தாண்டுதல், ஸ்கிப்பிங், 'புல் அப்ஸ்' என்று கை, கால், தசைகளுக்கு நல்ல பயிற்சியைத் தரக்கூடிய விளையாட்டுக்களில் அவர்களை ஈடுபடுத்தலாம். இப்படி... உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் ஓரளவுக்கு உயரத்தைக் கூட்டலாம். அண்டர் வெயிட் எனப்படும் எடை குறைவாக இருப்பவர்களையும் இதன் மூலம், திடகாத்திரமாக உருவாக்க முடியும்" என்ற டாக்டர், மேலும் கூறினார்...

வளர்ச்சிக் குருத்து அடைபட்டால்... வழியே இல்லை!

"சில சமயங்களில், ஊட்டச்சத்து நிரம்பக் கொடுத்தும் குழந்தைகளுக்கு உயரம் தடைபடலாம். காரணம், ஒவ்வொரு எலும்பு முனையிலும் நீளத்தை அதிகரிக்க செய்யும் சக்தி மிகுந்த 'வளர்ச்சிக் குருத்து' உண்டு. பிறக்கும்போது பதினைந்து அங்குலம் மட்டுமே உள்ள எலும்பு, 5 அடி மனிதனாக வளர்வது இந்த ஸ்பெஷல் எலும்புக் குருத்தின் வளர்ச்சியால்தான்! சில குழந்தைகளுக்கு வளரக்கூடிய எலும்பு பகுதியும், எலும்பின் இறுதிப் பகுதியும் கான்க்ரீட் போட்ட மாதிரி மூடிக் கொண்டுவிடும். இது திரும்பவும் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. எந்த வயதில் எலும்பு மூடிக் கொள்ளும் என்பதை குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. பெண் என்றால் 14 முதல் 16 வயது வரையிலும், ஆண் என்றால் 14 முதல் 18 வயது வரையிலும் எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்" என்று விளக்கினார் டாக்டர் ராமச்சந்திரன்.

வளர்ச்சியைக் கண்காணியுங்கள்!

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் நலநிபுணர் டாக்டர் ராஜராஜன், ஒரு குழந்தை சரியான உயரம் மற்றும் எடையில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் முறையைப் பற்றி விளக்கினார்.

"இரண்டு வயது வரை தொடர்ந்து மாதம் ஒரு முறை உயரம், எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். அதன் பிறகு, ஆறு மாசத்துக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொண்டால் குழந்தையின் சரியான வளர்ச்சியைக் கண்காணிக்க முடியும்.

ஒரு குழந்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன எடை இருக்க வேண்டும் என்பதற்கு தனி சார்ட்டே இருக்கிறது மருத்துவர்களிடம் கேட்டுப் பெறலாம். அதை வைத்து கண்காணித்து வரலாம்.

குழந்தையின் உயரம், பொதுவாக அதன் பெற்றோரை வைத்தே கணக்கிடப்படும். இதை 'மிட் பேரன்டல் ஹைட்' என்பர். அப்பா, அம்மா ஆகியோரின் உயரத்தை சென்டிமீட்டர் அளவில் கணக்கிட்டு, இரண்டு உயரங்களையும் கூட்டி, இரண்டால் வகுக்க வேண்டும். கிடைக்கும் எண்ணிலிருந்து பெண் குழந்தையாக இருந்தால் 6.5 செ.மீ. கழித்தும், ஆணாக இருந்தால் 6.5 செ.மீ. கூட்டியும் கணக்கிட வேண்டும். இதை வைத்து 18 வயதில் அந்தக் குழந்தை வளரும் உயரத்தை ஓரளவு கணித்துச் சொல்லிவிடலாம்'' என்ற டாக்டர், அடுத்து சொன்னவை... மிகவும் முக்கியமாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டிய பிரிஸ்கிரிப்ஷன். அவை...

''வளர்ச்சி விஷயத்தில் குழந்தைகளின் மனம் பக்குவப்பட வைப்பதும் முக்கியம். இது, பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. குள்ளமாக இருப்பவர்களை விட, உயரமாக இருப்பவர்களுக்கு சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 'உயரமோ, குள்ளமோ ஒருவனை உயரத்தில் வைத்துவிடுவதில்லை. படிப்பு, நல்ல குணங்கள், நோயில்லாத வாழ்க்கை இவையெல்லாம்தான் நம்மை முன் நிறுத்துகின்றன' என்பதுதான் உண்மை. இதைப் பக்குவமாகச் சொல்லி, பழக்கப்படுத்திவிட்டால், தாழ்வுமனப்பான்மை தலைதூக்காது. இதற்குப் பல தலைவர் களையும் உதாரணம் காட்டி கதை போலச் சொல்லலாம்."

சொல்லலாம்தானே?!

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?

''உயரமாக வளர உளுந்து தைலம் உதவும்!''

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சித்தவைத்தியம் எனும் நம்முடைய பாரம்பரிய வைத்தியம் என்ன சொல்கிறது? அதைப் பற்றி சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சித்த மருத்துவர் வேலாயுதம் இங்கே பேசுகிறார்.

''ரத்த ஓட்டம் உடலில் பாய்கிற மாதிரியான செயல்களைச் செய்யாதபோது உயரம் தடைப்படலாம். கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருவதால் எலும்பின் வளர்ச்சி தடைப்படும். இப்போதைய குழந்தை களுக்கு அசைவு என்பது கொஞ்சம்கூட இல்லை. பலரும், 'கறுத்துவிடுவான்' என்று வெயில்படாமல் வளர்க்கிறார்கள். இதெல்லாமே எலும்பு வளர்ச்சியைத் தடைபோடும் விஷயங்கள்தான்.

உளுந்து தைலத்தை வாங்கி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), காலையில அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். எகிறி குதித்துத் துள்ளி விளையாட பழக்க வேண்டும். இவையெல்லாம் உயரமாக வளர்வதற்கான வழிகள்!" என்று சொன்ன வேலாயுதம், முக்கியமான சில டிப்ஸ்களை பட்டியலிட்டார்...

பிறந்தது முதல் ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கவேண்டும். மருத்துவ குணம் வாய்ந்த தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒல்லியாக இருந்தாலும், எதிர்ப்புச் சக்தியும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

நன்றாக தண்ணீர்விட்டு தலைக்கு குளிப்பாட்டுவது, உடல் வளர்ச்சிக்கு அஸ்திவாரம். குழந்தை ஒரு களிமண் போல்தான். குளிப்பாட்டும்போது, கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

ஆறாவது மாதம் முதல்... வெந்த புழுங்கல் அரிசிச் சோறு, மசித்த பாசிப்பருப்பு இவற்றுடன் பசுநெய் சேர்த்து கொடுப்பது, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்துக்கள் நேரடியாக உடம்பில் சேரும்.

8-ம் மாதத்திலிருந்து முட்டையின் மஞ்சள் கரு, ஒரு வயதிலிருந்து முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி, தினம் ஒரு கீரையை மசித்துச் சாதத்துடன் கலந்து கொடுத்து வந்தால்... வைட்டமின், தாது உப்புக்கள் போன்ற சத்துக்கள் உடம்பில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கும்.

பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்கு, நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். பனை வெல்லத்தில் செய்த எள்ளு உருண்டை,, பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை தினமும் 2 கொடுக்கவேண்டும். இது நல்ல வளர்ச்சியைக் கூட்டும். ஏதேனும் ஒரு பழம் தினமும் கட்டாயம் சாப்பிடவேண்டும்.

காய்கறிகளில் பாகல், வாழைப்பூ, பச்சடி வகைகள், கிரீன் சட்னி, கேழ்வரகு அடை, புட்டு, முருங்கைக்கீரை, தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். சுண்டைக்காய், மணத்தக்காளி, துளசி இவற்றை குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்யவேண்டும்.

உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். எலும்பு நன்றாக வளர்ச்சியடைந்து உயரமாக வளர வழிவகுக்கும்.


உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
-படங்கள் பொன்.காசிராஜன், வி.செந்தில்குமார்
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
உங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் வளர்கிறதா?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism