"ஒரு போர்டிங் ஸ்கூலில் படித்ததால், அம்மா, அப்பாவைப் பிரிந் திருக்க வேண்டிய சூழ்நிலை. அதனால், அவர்களின் பிறந்த நாள், கல்யாண நாளுக்கெல்லாம் ஒவ்வொரு முறையும் நானும் என் தங்கையும் ஆசை ஆசையாக ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு, ஹாஸ்டலில் இருந்து ஓடி வருவோம்.
நான்கு வருடங்களுக்கு முன்பு, அம்மாவின் பிறந்த நாளுக்கு வழக்கம்போல பரிசுப் பொருள் தேடிய எங்களுக்கு, கடையில் இருந்த எந்தப் பொருளிலும் திருப்தி இல்லாமல் போனது. 'நாமளே கிரியேட்டிவா ஏதாச்சும் செய்வோம்...' என்று யோசித்து, ஒரு தேநீர் கோப்பையில் கம்ப்யூட்டர் உதவியுடன் அம்மாவின் போட்டோவை பிரின்ட் செய்து பரிசாக அளித்தோம். அதற்கு எங்களுக்கு ஆன செலவு, ஐம்பது ரூபாய். ஆனால், நாங்கள் அதுவரை ரெடிமேடாக, காஸ்ட்லியாக வாங்கித் தந்த பரிசுகளை எல்லாம்விட, அதை என் அம்மாவும், அப்பாவும் ரொம்பவே ரசித்தார்கள்.
அதிலிருந்து, எங்கள் தோழிகள், உறவினர்களுக்கும் கைப்பை, பேனா, புத்தகம், கடிகாரம் என ஏதாவது ஒரு பொருளில் அவர்களின் புகைப்படங்களை பிரின்ட் செய்து பரிசளிப்பதை வழக்கமாக்க, எல்லாரிடமும் இருந்து ஏகப்பட்ட பாராட்டுகள். கூடவே, 'ஏய்... எனக்கு வேண்டியவங்களுக்கு கொடுக்கணும். இதேபோல ஒரு கிஃப்ட் செய்து கொடேன்...' என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர். அப்போதுதான் 'இதையே ஏன் கொஞ்சம் கமர்ஷியலா செய்யக்கூடாது..?' என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது..." என்று அக்கா நத்தாஷா அறிமுகம் தர, தொடர்ந்தார் கல்லூரியில் பயின்று வரும் மாணவியான தங்கை நிமிஷா...
"இந்தத் தொழிலுக்கு எங்களுக்குத் தேவைப்பட்டது, ஒரு கம்ப்யூட்டர் மற்றும் 'போட்டோ ஷாப் சாஃப்ட்வேர்' பற்றிய அறிவு ஆகியவை மட்டுமே. ஸிக்சாக் பசில்ஸ், பிளேயிங் கார்டுகள், டைனிங் டேபிளின் மேட், எக்ஸாம் போர்டு, கீ-செயின், மவுஸ் என்று விதவிதமான பொருட்களில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங் களை பதிப்பதுடன், நானும் என் அக்காவும் சேர்ந்து புதுப்புது டிசைன் களிலும் பல பரிசுப் பொருட்களை உருவாக்கினோம். கிடைத்த வரவேற்பும், ஏற்பட்ட டிமாண்டும், 'நம்ம பிஸினசுக்கு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சா என்ன?' என்று தெம்பு கொடுக்க, அதையும் ஆரம்பித்து, வகை வகையாக நாங்கள் தயாரிக்கும் பரிசுப் பொருட்கள், அவற்றின் விலை என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டோம். ஐந்து ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரையான பரிசுப் பொருட்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து, எங்கள் பிஸினஸ், மாதாமாதம் பல ஆயிரக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது.
அழகுணர்ச்சிக்காக மட்டும் இல்லாமல், நம் அன்பை மிகவும் புதுமையாக வெளிப்படுத்துவதுதான் எங்கள் தயாரிப்புகளின் சிறப்பு. அந்தப் பொருட்களின் ஆர்டர் நம்பரை குறிப்பிட்டு கஸ்டமர்கள் தங்களின் புகைப்படங்களை எங்களின் தொடர்பு முகவரிக்கு அனுப்பினால், நாங்கள் அந்தப் புகைப்படம் பதித்த பரிசுப் பொருட்களை அவர்களுக்கு கொரியர் செய்துவிடுவோம்'' என்றபடியே தன்னுடைய கணினி முன் உட்கார வைத்தார்.
|