எனவே, கர்ப்பக் காலம் தொடங்கி, பிரசவம் வரை நகர்கிற நேரத்தை இயல்பாகக் கடந்தால்... உங்களின் முதல் பயம் முளையிலேயே அழிந்துவிடும்.
அடுத்தது, பிரசவத்தின்போது என்னவெல்லாம் நடக்கும் என்கிற தெளிவுபெற வேண்டியதும் அவசியம். இதை... சரியானபடி, சரியானவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் முக்கியம்.
பிரசவம் பற்றி மருத்துவரிடம் விளக்கங்கள் பெறுவதில் தயக்கம் தேவையில்லை. ஆனால், தவறான வழிகாட்டிகளைத் தேடிச் சென்று தத்தளிக்கக் கூடாது. உதாரணமாக, "நான் பிரசவத்தைப் பற்றி நிறைய படிச்சிருக்கேன். இருந்தாலும், அந்த நேரத்தை நினைச்சாலே பயமாயிருக்கு" என்று என்னிடம் நிறைய பெண்கள் சொல்வார்கள். அவர்களிடம், "எதைப் பார்த்து படிச்சீங்க, எதை வச்சுப் பயப்படறீங்க?" என்று கேட்டால், "நெட்ல பார்த்தேன் டாக்டர்... அதுல இருக்கற படத்தைப் பார்த்தாலே பயமாயிருக்கு" என்பார்கள்.
ஒரு விஷயத்தை எந்தக் கோணத்தில் நாம் பார்க்கிறோமோ... அந்த கோணத்தில்தான் அது நம்மை வந்து சேரும் என்பதை மீண்டும் அவர்களுக்கு புரிய வைப்பேன். இதனாலேதான் நம் பெரியோர் 'இந்த மாதிரி நேரத்திலே நல்லதை நினை. நல்லதை படி. நல்லதை பற்றியே யோசி' என்பார்கள்.
சரி... பிரசவ நேரத்தை நெருங்குகையில் என்னவெல்லாம் நடக்கும்? பிரசவத்துக்கு முன் சிலருக்கு வெள்ளைப்படுதல் இயற்கையே. இந்த வெள்ளைப்படும் நேரத்தில் துர்வாசம் இருந்தாலோ, பச்சை, கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் நீர் கலந்து கசிந்தாலோ மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டியது அவசியம்.
சில நேரங்களில் உணவுமுறையும், சூழ்நிலையும் பிரசவ நேரத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, திட உணவைக் குறைத்து... திரவ உணவுகளான இளநீர், ஐஸ் இல்லாத பழச்சாறு, நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
குழந்தையின் அசைவை அவ்வப்போது உணர்ந்து கொண்டே இருக்கும் நீங்கள், தொடர்ச்சியாக ஒரு சில மணி நேரங்கள் குழந்தை அசைவற்று இருப்பதை உணர்ந்தால்... தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது முக்கியம்.
இப்படி ஒவ்வொரு கட்டமாக கடந்து வரும் உங்களுக்கு, இறுதியாக வலி ஏற்படும். இந்த வலி விட்டு விட்டும் வரலாம்; தொடர்ச்சியாகவும் வரலாம். அந்தக் காலத்தில்... விட்டு விட்டு வலி ஏற்படும்போது, சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீரை ஆற வைத்துக் குடித்துவிட்டு, சிறிது ஓய்வெடுக்கச் சொல்வார்கள். அதையேதான் இப்போது நாங்களும் சொல்கிறோம். ஆம்... "உங்களுக்கு ரெஸ்ட் தேவை... நிறைய தண்ணி குடிங்க... அமைதியா படுங்க" என்கிறோம். இந்த நேரத்தில் தேவைப்படுவது ஓய்வும், அது தரும் மன அமைதியும் மட்டுமே.
ஒருவேளை... வலி ஏற்படும்போது, உங்களுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கப் பெற்றிருந்தால், அந்த வலி பொய் வலியாக இருக்கும்பட்சத்தில், பிரச்னை செய்யாமல் தானாகவே மறைந்துவிடும். முதுகில் ஊசியால் குத்துகிற மாதிரி வலி ஏற்படுவதும், கால்களில் குடைச்சல் உண்டாவதும் தூக்கமின்மை யும் சில நேரங்களில் தொடரலாம். இதுவும் இயற்கை யான சங்கதிதான். உங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சொல்லும்போது மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.
|