இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தம், சுகாதாரத்தை பயிற்றுவிக்க வேண்டும். கைவசம் கைக்குட்டை வைத்திருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், கண்ட இடங்களில் கை வைக்காதிருத்தல், பாத்ரூம் சென்று வந்ததும் கை, கால் கழுவுதல் போன்ற பழக்கங்களை, வழக்கமாக்க வேண்டும்.
நமது கவனத்தையும் மீறி, வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைக் குழந்தைகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் பல கிருமிகள் ஏற்படலாம். மசாலாவும் காரமும் கலந்து பல்வேறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 'கரகர மொறுமொறு' பதார்த்தங்களாலும், ஃபாஸ்ட் ஃபுட் என்ற பெயரில் சிக்கலான உணவு கூறுகளை நாமே வாங்கித் தருவதாலும் குழந்தைகளின் பிஞ்சு குடல், நஞ்சு சேருமிடமாகிறது. எனவே, 'ஸ்நாக்ஸ்' என்ற பெயரில் குப்பை உணவுகளை தருவதற்கு பதில்... காய்கறிகள், பழங்கள், சாலட், பருப்பு உணவுகள் போன்றவற்றை தந்து பழக்க வேண்டும்.
இவை தவிர, மனோரீதியான சில விஷயங்களும்கூட வயிற்றுவலிக்கு காரணமாக அமைகின்றன. இவை உடல் ரீதியான மருத்துவ பரிசோதனைகளில் பிடிபடாது.
ஐந்து வயது வரை விளையாட்டு, பாட்டு, நடனம் இவற்றின் மூலமாக கற்றல், கற்பித்தல் இருக்க வேண்டும். அதிகப்படியான எழுத்து பயிற்சியோ, ஹோம் வொர்க் என்ற பெயரில் வீட்டிலும் அதிகப்படியான பாட திணிப்போ அவர்களை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, இவற்றில் இருந்து தப்பிக்க அவர்களாகவே 'வயிற்றுவலி', 'தலைவலி' என்று காரணம் சொல்வார்கள். எனவே, உங்கள் குழந்தையின் பாடச் சுமைகளில் இருந்து அவனை விடுவிடுத்துப் பாருங்கள்... அவன் கூறும் 'வயிற்றுவலி' சரியாகிறதா என்று பார்க்கலாம்!
தவிர, குடற்புழுக்கள், குடல்வால் அழற்சி, வயிற்றுப்புண், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளும் குழந்தைகளின் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கும். எனவே, அவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்!"
ஆரோக்கியம் குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தருகிறார்கள். கேள்விகளை 'டியர் டாக்டர்' என்று தலைப்பிட்டு, 'அவள் விகடன்' முகவரிக்கு அனுப்புங்கள். மருத்துவப் பதிவுகள் எதையும் சேர்த்து அனுப்ப வேண்டாம்.
|