''அட, என்ன சுவாமி... விளையாட்டா கூப்பிடறதைப் போய், இப்படி பெருசா எடுத்துக்கிட்டு அறிவுரையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க'' என்கிறீர்களா..?
நன்றாக ஒரு நிமிடம் நிதானித்துச் சிந்தித்துப் பாருங்கள்... நீங்கள் கூப்பிட்டது விளையாட்டாகவா... அல்லது கறுப்பு நிறத்தின் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதைக் குறைவின் வெளிப்பாடா...?
நிச்சயமாக... கறுப்பு நிறத்தின் மீதிருக்கும் மரியாதைக் குறைவின் வெளிப்பாடுதான். இது உங்களுடைய தவறில்லை. தலைமுறையின் தவறு. ஆம்... உங்களுடைய ஆழ்மனதுக் குள் இந்த விஷயத்தைக் கடத்திச் சென்று பதிய வைத்துக் கொண்டிருக்கும் தலைமுறையின் தவறு!
பெண் பார்க்கப் போகும் இடத்தில்... ''பொண்ணு கொஞ்சம் மாநிறம்தான்... ஆனாலும், லட்சணமா இருக்கா..." என்ற பேச்சைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள், இதில் நிறத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், அழகுக்குக் கொடுக்கப்படவில்லை. 'பரவாயில்லை' என்றே அந்த அழகை ஏற்கிறார்கள். அவர்களின் கவனமெல்லாம்... நிறத்தில் மட்டுமே ஆழப் பதிகிறது.
'கறுப்பி', 'மாநிறம்தான்... பரவாயில்லை' என்பது போன்ற பேச்சுக்களையே கேட்டுக் கேட்டு வளரும் இளம் பெண்களிடம், கறுப்பு நிறத்தின் மீதான வெறுப்பு வளராமல் என்ன செய்யும்?
ஆண் பிள்ளைகளும் இதே பேச்சுக்களைக் கேட்டு வளர்கிறார்கள். அதுவே பின்னாளில் மற்றவர்களை 'கறுப்பி' என்று அழைத்துக் கிண்டல், கேலி செய்ய அடித்தளமிட்டுவிடுகிறது.
அழகு என்பது வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. தன்னம்பிக்கை, தைரியம், கல்வி, அறிவு, தெளிவான சிந்தனை, மரியாதை ததும்பும் பேச்சு மற்றும் செயல், துணிச்சல், அன்பு, கருணை... இதெல்லாம்தான் ஒருவரை அழகாக மாற்றுகிறது. அதனால்தான் மூதாட்டிகளாக இருந்தாலும் ஒளவையாரும் அன்னை தெரசாவும் நமக்கு பேரழகாகக் காட்சி தருகிறார்கள்.
சிவப்புதான் சிறந்த நிறம், கறுப்பு என்றால் அழகில்லை என்று எந்த நீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லிவிடவில்லை. நீலவண்ணக் கண்ணன் கறுப்பு என்றாலும் தன் பக்தர்களின் கண்களுக்கு பேரழகனாக அல்லவா தெரிகிறார். புராணங்களின்படி பார்த்தால் மன்மதனும் ரதியும்கூட கறுப்புதான். ஆன்மிகத்தைத் தாண்டி சரித்திரத்தைப் பார்த்தாலும் உலகமகா அழகியாக கருதப்பட்ட கிளியோபாட்ராவும் கறுப்புதான்.
ஆனால், வெள்ளையர்கள் நம்மை வெகுகாலம் அடிமைப்படுத்தி வைத்திருந்ததாலோ என்னவோ... வெள்ளைக்கார துரைகளும், வெள்ளைகார சீமாட்டிகளும் மட்டுமே அழகு என்று நமது ஜீன்களுக்குள் ஒரு தப்பான செய்தி ஆழமாகப் படிந்திருக்கிறது.
மல்லிகை, முல்லை, ரோஜா என்று இறைவனின் படைப்பில் அத்தனை மலர்களும் அழகுதானே?! இதில் தான் அழகில்லை என்று மல்லிகையைப் பார்த்து ரோஜாவோ... தாமரையைப் பார்த்து மல்லிகையோ தாழ்வு மனப்பான்மை கொள்வதில்லை.
அவ்வளவு ஏன், நாம் இந்த வெள்ளைத் தோல்தான் அழகு என்று கருதுகிறோமே... அந்த வெள்ளைக்காரர்களே கறுப்பினத்தைச் சேர்ந்த ஏஞ்லினா ஜோலி, நயோமி கேம்பெல் என்று பலரையும் பேரழகிகளாக கொண்டாடுவது நம் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை?!
சரி, சாமுத்திரிகா லட்சணம்தானே அழகுக் குறிப்புக்கு அத்தாரிட்டி. அதில் சிவப்புதான் சிறந்த நிறம் என்று செல்லப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியிருந்தும் நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் சிவப்புத் தோல் மீது சித்தபிரமை பிடித்து திரிகிறார்கள். இதை, மனக்குறை என்று வேண்டுமானால் சொல்லலாமே... தவிர, உடல் குறை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
யோசித்துப் பார்த்தால், 'விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்' என்பதுதானே அத்தனை பெண்களின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்?! நமது உடலின் வண்ணத்தை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆரோக்கியத்தை நாம் தீர்மானிக்க முடியும். உணவுக் கட்டுப்பாடும், உடல் பயிற்சியும் இல்லாமல் உடம்பை பருமனாக வைத்திருப்பதா அல்லது நாணேற்றப்பட்ட வில் மாதிரி நோய் நொடி எதுவும் அண்டாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
கட்டுரையின் ஆரம்பத்தில் என்னை வந்து சந்தித்த அந்த இளம் பெண் மற்றும் தாயை இப்போது மீண்டும் பார்ப்போம். மேலே நீட்டி முழக்கியதைப் போல முழக்கினால் பொறுமையாகக் கேட்டுக் கொள்கிற வயதில்லை அந்தப் பெண்ணுக்கு. அவள் பள்ளிப் படிப்பின் இறுதித் தருணத்தில் இருப்பவள். அதனால் நான் வேறு ஒரு வழியைக் கையாண்டேன்.
அந்தப் பெண்ணை நோக்கி, வெளிநாட்டுத் தயாரிப்பான ஒரு சாக்லேட்டை நீட்டினேன். சாக்லேட்டுக்காக பாய்ந்தோடி வரும் வயதில் அவள் இல்லை. என்றாலும், 'மற்ற சாமியார்கள் என்றால் வெறும் திருநீறுதான் தருவார்கள், ஆனால் இவர் வித்தியாசமான ஆள்தான் போலிருக்கிறது. சாக்லேட் எல்லாம் தருகிறாரே' என்று நினைத்தோ என்னவோ... முக மகிழ்ச்சியோடு அதை வாங்குவதற்குக் கையை நீட்டினாள் அந்தப் பெண். உடனே நான் சாக்லேட்டைப் பிரித்து மேலிருந்த ஜிகினா காகிதத்தை மட்டும் அவளிடம் கொடுத்தேன். சட்டென்று அந்தப் பெண்ணின் முகம் சுருங்கிப் போனது.
"சாக்லேட்டை சுற்றியிருக்கும் ஜிகினா காகிதம் முக்கியமா? அல்லது சாக்லேட் முக்கியமா?' என்று கேட்டேன். காகிதம் முக்கியமல்ல. கருப்பொருள்தான் முக்கியம் என்பதை அவள் புரிந்து கொண்டதைப் போல தன்னம்பிக்கையோடு என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நன்றி சொன்னாள்!
சரி, வாசகிகளே... கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் நாம் விவாதித்த விஷயங்கள் நிச்சயமாக உங்களுக்கு நிறைந்த பலனுள்ளதாக மாறியிருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இப்போதைக்கு விடைபெறலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக... எனக்குத் தெரிந்த ஒரு அழகுக் குறிப்பை சொல்லிவிடுகிறேன்.
ஒரு பெண்ணுக்கு, ஏன் மனிதனுக்கு என்றுகூட சொல்லலாம்.... பொன் நகையைவிட புன்னகைதான் அழகு! இது பழைய அழகுக் குறிப்புதான். ஆனால்... என்றும், யாருக்கும் பொருந்தக்கூடிய அழகுக் குறிப்பு!
வாய்ப்புக் கிடைக்கும்போது மீண்டும் சந்திப்போம்!
சிந்தனை செய் மனமே!
சித்திரை மாத வெயிலில் அலைந்து திரிந்த ஒரு நாய்க்கு, பெருத்த தாகம். தூரத்தில் ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்து அங்கே ஓடியது. தண்ணீரைப் பருக கீழே குனிந்தபோது அதன் பிம்பம் தண்ணீரில் தெரிந்தது. நிழல் நாயைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது. அந்த நேரம் பார்த்து பெருத்த காற்றடிக்க, தண்ணீரில் தெரிந்த தன்னுடைய பிம்பம் விலக, இப்போது அந்த நாய்க்கு தண்ணீர் தெரிந்தது. நாய் தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டது.
உடம்பின் நிறத்தைத் தாண்டி நமது உள்ளத்தைப் பார்க்க கற்றுக் கொண்டால்தான் நம்முடைய அழகு நம் கண்களுக்கு தெரியும்!
|
|