Published:Updated:

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

Published:Updated:

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர் (13)
பாரதி பாஸ்கர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீ நதி போல ஓடிக்கொண்டிரு!
மோதி மிதிக்க... முகத்தில் உமிழ... எத்தனை பேர் தயார்?

'இன்று இரவு என்னோடு தங்குவதற்கு உனக்கு விருப்பமா?' (Would you like to stay with me tonight?) என்று அலுவலக கான்ஃபரன்சுக்காக வந்த இடத்தில், மேலதிகாரி அஜய் சக்ரவர்த்தி கேட்டபோது, சுமித்ரா அரண்டு போனாள். தெருவில் போகிறவளை 'வர்றியா?' என்று அழைக்கும் அதே ஆபாசம்தான் இதிலும். என்ன, சர்க்கரை தடவிய ஆங்கிலத்தில் கேட்கிறான்.

'கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் பெற்ற ஒரு பெண்ணைப் பார்த்து, திருமணம் ஆன ஓர் உயரதிகாரி எந்தத் துணிச்சலில் இப்படிக் கேட்கிறான்? நான் அலற மாட்டேன்; பளாரென்று கன்னத்தில் அறைய மாட்டேன்; எம்.டி-யிடம் புகார் செய்ய மாட்டேன் என்று என் நெற்றியில் எழுதியிருக்கிறதா?'

- எம்.என்.சி. (மல்டி நேஷனல் கம்பெனி) ஒன்றில் கண்ணியமான பதவியில் இருக்கும் என் தோழி சுமித்ரா எனக்கு அனுப்பியிருந்த இ-மெயில் நீண்டு கொண்டே போனது.

பெரும் அலுவலகங்களில் பதவிகளை அலங்கரிக்கும் சுமித்ராக்களுக்கு மட்டுமா இந்தச் சோதனை?! போன வாரம் என் வீட்டில் வேலை செய்யும் நாகம்மா திடீரென்று இரண்டு நாள் வரவில்லை. 'சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்; சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை' என்ற பாரதியார் கவிதையை முணுமுணுத்தபடி இரண்டு நாளும் நானே பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி வெறுத்துப் போன பின், நாகம்மா வந்து சேர்ந்தாள். கன்னங்கரிய முகம்; அழுது அழுது மினுமினுத்திருந்தது. ரௌத்ரம் ஏறிச் சிவந்த விழிகள் படபடக்க நாகம்மா பேசியதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

கணவன், குடிகாரன்தான் என்பதால், என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கட்டட வேலைக்கும் போகிறாள் நாகம்மா. எப்படியாவது குழந்தைகளுக்குக் கால் வயித்து கஞ்சியாவது ஊற்றியாகணுமே! அவ்வப்போது அவளிடம் பல்லைக் காட்டி வந்த 'மேஸ்திரி' என்ற பெயரில் திரியும் ஒரு ஓநாய், நேற்று முன்தினம் அவள் 'பாண்டு' தூக்கும்போது திடீரென வந்து புடவை ஒன்றை நீட்டியிருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை வேலை இருப்பதாகப் பொய் சொல்லிவிட்டுத் தனியாக அவள் வர வேண்டுமாம். 'பாண்டை' தூக்கிப் போட்டு விட்டு வீட்டுக்குப் போய் முடங்கியவள்தான். இரண்டு நாட்கள் கழித்து, என் முகத்துக்காக இப்போது வேலைக்கு வந்திருக்கிறாள்.

எனக்கு, சுமித்ராவின் கையையும், நாகம்மாவின் கையையும் பிடித்து என் இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்ளத் தோன்றியது. யுக யுகாந்திரங்களின் கண்ணீர் வாசம் அடிக்கும் கைகள்தானே இவை..?

போரில் வென்ற அரசன், தோற்ற மன்னனின் நகருக்குள் நுழைந்ததும் முதலில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதுதான் சங்க காலம் தொட்டு நமது சரித்திரம். எந்த இனத்தின் மீது பகை வந்தாலும் முதல் 'டார்கெட்' அந்த இனத்தின் அபலைப் பெண்கள்தான் என்பது காலம் காலமாக இந்தச் சமூகம் அங்கீகரித்திருக்கும் அவமானம். தேசப்பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்களைவிட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

ஹோட்டல்களில், தியேட்டரில், பஸ், ரயில் பயணங்களில், அலுவலக லிஃப்ட்டில், கூட்டமான கடைகளில்... சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச 'கமென்ட்டுகள்', அஜய் சக்ரவர்த்தி மாதிரி, ஓநாய் மேஸ்திரி மாதிரி வெளிப்படையான 'அழைப்புகள்'... இவற்றைச் சந்திக்காத பெண் இருக்க முடியுமா என்ன?

பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்கு பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை. சம்பவம் நடந்த உடனே, மனசுக்குள் மிகக் குன்றிப் போகிறாள். 'யாராவது கவனிச்சாங்களா?' என்று பார்க்கிறாள். கால்கள் நகர மறுக்கின்றன. 'அடுத்து என்ன செய்யப் போகிறான்?' என்ற பயம் போர்வை போல் கவிழ்கிறது. சில மணி நேரங்களில்இருந்து சில நாட்கள் வரை அச்சம்பவத்தின் தாக்கம் அவளுள் இருக்கிறது. நிகழ்ந்துவிட்டதை, வேறு வேறு விதமாக மனசுக்குள் பெண் நடத்திப் பார்க்கிறாள்.

அவன் அருகில் வந்தபோதே உஷாராகி சத்தம் போட, கூட்டம் சூழ்ந்து அவனை உதைக்கிறது... இல்லை... கையிலிருந்த மிளகாய்த்தூள் ஸ்ப்ரேயை அவன் முகத்தில் அடிக்க, எரிச்சலில் கதறித் துடிக்கிறான் அந்தக் கயவன்... இல்லையில்லை... கராத்தே கற்றிருந்த அவள் கையால் ஒரு வெட்டு வெட்ட அலறிச் சரிகிறான் அந்த அயோக்கியன்... இவை எல்லாம் கானல் நீர் கற்பனை.

நிஜத்தில், பெரும்பாலும் நடப்பது - சுமித்ரா ஒரு மாதம் 'மெடிக்கல் லீவ்' போட்டதும், நாகம்மா வேறு ஒரு 'கன்ஸ்ட்ரக்ஷன் சைட்'டில் வேலைக்குப் போனதும்தான்.

விஷயம் வேறு விதமாகவும் விமர்சனம் செய்யப்படுவது நமக்குத் தெரியாததில்லை. 'பிரச்னையே பெண்களின் உடைகளால்தான்' என்று ஒரு கோஷ்டி கத்திக் கத்தி தொண்டை கமறிப் போயிருக்கிறது. என்ன ஆபாச உடைகள்?! 'துப்பட்டா' இல்லாத 'குர்த்தி'. 'ஸ்பெக்ட்டி' ஸ்ட்ராப் உள்ள 'டி-ஷர்ட்'. 'லோ வெயிஸ்ட்' ஜீன்ஸ். 'இப்படி அரைகுறையா டிரெஸ் போட்டு ஆண் மனசை கலைத்தால், பாவம் அவனும்தான் என்ன பண்ணுவான்..' என்கிற மாதிரி உருக்கம் ஏகப்பட்ட நபர்களிடம் இருக்கிறது.

உண்மையில், இந்த மாதிரி 'அல்ட்ரா மாடர்ன்' பெண்களிடம் பெரும்பாலும் எந்த ஆணும் வம்பு செய்வதேயில்லை. பாதிக்கப்படுவதெல்லாம் பாந்தமாக உடை உடுத்தியிருக்கும் நடுத்தர வர்க்கத்துச் சராசரிப் பெண்கள்தான். இவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்கள்; நாளைய பிரச்னைகள் கருதி இன்றைக்கு நடக்கும் எதையும் சகித்துக் கொள்பவர்கள்.

கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளுடன் மதுரைக்கு நடந்து போனபோதே போக்கிரிகள் சிலர் கிண்டல் செய்தார்களாம். நல்லவேளையாக, கண்ணகியின் உடைதான் அந்தக் கயமைக்கும் காரணம் என்று யாரும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியதாகத் தெரியவில்லை. காலம் காலமாக, ஆணுக்குப் பெண் உடல் ஒரு கேளிக்கைச் சாதனம். அவளைச் சிநேகிதியாக, சக உயிராகப் பார்க்கப் பழகாத பார்வைக் கோளாறுதான் காரணமே தவிர உடைகள் மட்டுமே அல்ல.

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

மகாகவி பாரதிக்கென்ன சொல்லி விட்டார்... 'மோதி மிதித்து விடு பாப்பா... பாதகம் செய்பவரின் முகத்தில் உமிழ்ந்து விடு', என்று. நிஜத்தில்...

மாநகரப் பேருந்தில் ப்ளஸ் டூ மாணவி கம்பியைப் பிடித்தபடி நிற்கிறாள். பின்பக்கமாக ஒரு தடிமாடு அவள் மேல் சாய்ந்து சரிகிறது. குழந்தையின் முகம் கலங்கிப் போயிருக்கிறது. 'ஹேண்ட்பேக்' பெண்கள் எல்லாம் இதை கவனித்தும், கவனிக்காததுமாக இருக்கிறார்கள். கடைசி ஸீட்டில் மீன் கூடையோடு ஒருத்தி நிற்கிறாள். கூறு கட்டி மீன் விற்றுக் குடும்பம் நடத்தும் அன்றாடங்காய்ச்சி அவள். அந்தக் குழந்தைக்கு நடக்கும் கொடுமையைக் கண்டதும் கூச்சல் போடுகிறாள். "ஏய்! யாருடா அவன், கஸ்மாலம்... பேமானி..." - அவளது சத்தத்தில் தடிமாடு தானே விலகி பஸ்ஸில் இருந்து தாவிக் கீழே குதிக்கிறது.

உட்கார்ந்திருந்த பெண்களின் படிப்பும், பதவியும் அவர்தம் தைரியத்தை உலர வைத்து விட்டது. கூடைக்காரிக்கோ இழக்க எதுவுமில்லா இழுபறி வாழ்க்கை. சிறுமை கண்ட இடத்தில் சீறுகிறாள். இதுதான் கொடுமையை எதிர்ப்பது.

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்லதான்... ஆனால், சீண்டும் ஆண் யாராகவும் இருக்கக்கூடும் என்ற எச்ச ரிக்கைதான் கொடுமையை எதிர்ப்பதில் முதல் கட்டம்.

அலறிக் கத்தி அத்தனை பேரின் கவனம் ஈர்த்தல், கையில் கிடைக்கும் 'ஹேர் பின்'னோ, மிளகாய் பொடியோ, செருப்போ, நகமோ... தவிர்க்க முடியாத நேரத்தில் எதிர்த் தாக்குதலுக்குத் தயங்காத மனநிலை இரண்டாவது 'ஸ்டெப்'.

"இதுக்கு ஒப்புக்கிடலைனா உனக்கு வேலை போயிடும்" என மிரட்டும் மேலதிகாரியிடம், "உன் வேலை... என் கால் தூசுடா நாயே'' என்று முகத்திலறையும் துணிச்சல் மூன்றாம் நிலை.

வேறு யார் மூலமாவது விஷயம் வீட்டில் தெரியுமுன் நாமே விளக்கிச் சொல்லிவிடும் நெஞ்சுரம் நான்காவது 'ஸ்டேஜ்'.

ஒருவேளை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், நடந்த சம்பவத்துக்காக குமைந்தும் பயந்தும் போகாமல் நிமிர்ந்த நன்னடை; நேர் கொண்ட பார்வையோடு தொடர்ந்து செல்லும் ஞானச் செருக்கு எல்லாவற்றையும்விட அவசியத் தேவை!

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
- நதி ஓடும்...
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism