என் டைரி 233-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
'மாமனாரின்
மனதை மாற்று!'
உனக்கு எப்படி உன்னவர் தேவையோ... அதேபோல அவரின் தந்தைக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும். உன் கணவர் மூலமாகவே, பக்குவமாகப் பேசி புரியவைக்க முயற்சி செய். உன் குழந்தைகளையே அவருடைய பேரக் குழந்தைகளாக நினைக்கும் அளவுக்கு அவருடைய மனதை மாற்றும் வேலையில் இறங்கு. குழந்தைகளிடமும், தாத்தாவின் அருமை பெருமைகளை சொல்லி, அந்நியோன்யத்தை வளர்க்கும் வித்தையையும் பயன்படுத்து... நிச்சயம் உன் மாமனார் மனம் மாறுவார்.
- எஸ்.செல்வி ஸ்ரீனிவாசன், திருவண்ணாமலை
உன்னைக் குழந்தைகளுடன் ஏற்றுக் கொண்டு, விரும்பி மணந்தவர் உறுதுணையாக இருக்க, வீண் பயத்தை விட்டொழி. எது எப்படி இருந்தாலும், 'கைவிடமாட்டார் கணவர்' என்ற நம்பிக்கை உனக்கு இருந்தால், நீங்கள் இருவரும் உங்கள் முடிவில் உறுதியாக இருந்தால், எந்த மாமனாரும் எதுவும் செய்துவிட முடியாது. எல்லாப் பிரச்னைகளும் தன்னாலே விலகி ஓடிவிடும்.
- டி.எம்.பானுமதி, சென்னை-88
தங்களுக்கு என்று குழந்தைகள் பிறக்காத எத்தனையோ பேர்... அநாதைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கவில்லையா? அவற்றை சொந்த பேரன்/பேத்தியாகவே பாவித்து கொஞ்சி மகிழவில்லையா? இந்த விஷயங்களை, அக்கம் பக்கத்து உதாரணங்களோடு உன் மாமானருக்கு புரிய வைத்தால்... நிச்சயம் வெற்றிதான். ஆனால், இந்த வேலையை மறந்தும் நீ செய்துவிடக் கூடாது. அனைத்தையும் உன் கணவர் மூலமாகவே செய்ய வேண்டும். நிச்சயமாக கனி கனியும்!
- உஷா, சென்னை-4
'வேறு குழந்தைகள் வேண்டாம்' என்று உறுதியோடு இருக்கும் உன்னுடைய கணவர், இமயம் போல் உயர்ந்து நிற்கிறார். அப்படிப்பட்டவர் இருக்கும்போது எதற்காக மாமனாரைப் பார்த்து பயப்பட வேண்டும். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் வகிக்கின்ற டாடா, பிர்லா போன்றவர்களே வாரிசு பற்றி கவலைப்படாத நிலையில், இவர் வாரிசை நினைத்து வருந்துவதிலிருந்தே... வாழ்க்கையைப் பற்றிய தெளிவு இல்லாத நிலையில் இருக்கிறார் என்றே தெரிகிறது.
உன் திருமணம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றிருந்தால், யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. துணிச்சலோடு எதையும் எதிர்கொள்!
- ராதாமதி, பாபநாசம்
வாசகிகள் பக்கம் |
என் டைரி- 234 |
நேற்று, அன்புக் காதலி... இன்று, அடிமை மனைவி! |
கல்லூரிக் காலத்திலேயே காதல் திருமணம் செய்து கொண்டவள் நான். என் பெற்றோர்கள், இந்தத் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைய, நானோ அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், ப்ரியமுடன் என் கரம் பற்றிய கணவருடன் வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால், ஆறு மாதங்களுக்குள் வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கிறேன் நான். காரணம், என் புகுந்த வீட்டுச் சூழல்.
காதலித்தபோது 'எல்லாம் நீதான்' என்று உருகிய கணவருக்கு, இப்போது நான் ஒரு அடிமை மனைவி... அவ்வளவுதான். காலையில் அரக்கப்பரக்க கிளம்பி அலுவலகம் செல்பவர், இரவு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுப் படுத்துவிடுகிறார். கேட்டால், "வேலைக்கு போற மனுஷனுக்கு ஆயிரம் டென்ஷன். உனக்கு என்ன தெரியும்..." என்று என்னைத் திட்டுகிறார்.
|
|
|