Published:Updated:

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

Published:Updated:

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க...
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர் 100 டிப்ஸ்

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

"மண்ணிலே... மண்ணிலே... வந்து உடையுது வானம்!"

- மழையைப் பார்த்து அதிசயித்த ஒரு திரைக்கவிஞனின் வார்த்தைகள் இவை!

துள்ளி விளையாடும் குழந்தை முதல் தள்ளாடி நடைபோடும் முதியவர்கள் வரை மழை பிடிக்காத, அதை ரசிக்காத மனங்கள் இருக்க வாய்ப்பில்லை. மழை... பூமியைக் குளிர வைத்து அதனை பசுமையாக்குகிறது; நீர் நிலைகளை நிறைத்து, தண்ணீர்ப் பஞ்சம் போக்குகிறது; கூடவே, சில நோய்களையும்... கஷ்ட நஷ்டங்களையும் அள்ளித் தருகிறது.

பெய்யெனப் பெய்யும் மழையை ரசிக்கவும், அதேநேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் சொல்கிறது இந்தப் புத்தகம். மழையைப் போல இதையும் ரசித்துச் சேமியுங்கள்; ஒவ்வொரு துளியும் பொக்கிஷம்!

அடிப்படை சுகாதாரம் ஆரோக்கியத்துக்கான ஜன்னல்!

மழைக்காலத்தில் நோய்க்கிருமிகள் ஜாலியாக உலா வருவதற்கான சூழல் அதிகம் என்பதால்... ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நமது கைகளில்தானே உள்ளது?! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்படி இருக்கட்டும்...

1. ஹோட்டல், வீடு என எங்கு தண்ணீர் குடித்தாலும்... சுத்தமான, காய்ச்சி, வடிகட்டிய தண்ணீரை அருந்துங்கள். ஆரோக்கியத்துக்கு குறை வரவே வராது.

2. ஹோட்டல்களில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் என்றால், தரமான ஹோட்டலைத் தேர்ந்தெடுங்கள். அநாவசியமாக ஆஸ்பத்திரிக்கு செலவழிக்கத் தேவையிருக்காது.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

3. நீங்கள் பழகி நடந்த சாலை என்றாலும், மழை நீர் தேங்கி நிற்கும்போது எங்கு குழி இருக்கிறது, பாதாள சாக்கடை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாது. அதனால் அடிமேல் அடியெடுத்து நடை பழகுவது முக்கியம். குழந்தைகளை அந்த மாதிரியான சாலைகளில் நடக்கவிடாமல் இருப்பது மிக முக்கியம்.

4. கால்கள் ஈரமாகிவிட்டால், முடிந்த அளவு துடைத்து ஈரமில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். 'ஈரமான கால்கள், நோய்களின் தோற்றுவாய்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

5. தேங்கிக்கிடக்கும் மழைநீரில் காலை நனைப்பதைத் தவிர்க்கவும். அப்படியே நனைத்தாலும் வீட்டுக்கு வந்தவுடன், நல்ல தண்ணீரில் காலை கழுவுவது கிருமித் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும். கால் இடுக்குகளில் நமைச்சல் ஏதும் இருந்தால், சுடுநீரில் சிறிது டெட்டால் கலந்து கால் அலம்புவது நல்லது.

6. மழைக்காலத்தில் துணிகளை உலர்த்துவது பெரும்பாடு. முடிந்தவரை வெயிலில் உலர்த்துவது நல்லது. தொடர் மழைக் காலங்களில் நிழலில் உலர்த்தினாலும், ஈரப்பதமின்றி உலர்த்துவது முக்கியம்.

7. பீரோவில் அடுக்கும் துணிகள் ஸ்டிஃப்பாக இல்லாமல், ஈரப்பதத்துடன் இருப்பதுபோல் தோன்றினால், துணி அடுக்குகளுக்கு இடையே சில சாக்பீஸ்களைப் போட்டு வைத்தால், ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொள்ளும்.

8. எளிதில் ஈரம் காயக்கூடிய காட்டன் ஆடைகளை அணிவது முக்கியம். ஈரமுள்ள ஆடைகள் பூஞ்சைத் தொற்றை உருவாக்கி, தோல் நோய்களை உண்டாக்கும் என்பதால் அதற்கான வாய்ப்பை உருவாக்காமல் இருங்கள்.

9. மழையில் முழுக்க நனைந்துவிட்டால், முதலில் நன்றாக தலையைத் துவட்ட வேண்டும். அப்போதுதான் சளி, ஜுரம் என்று தொல்லைகள் தொடராமல் இருக்கும். அல்லது வீட்டுக்கு வந்ததும் உடனே சாதாரண தண்ணீரில் குளியல் போடுங்கள். அது உடல் வெப்பநிலையைச் சீராக்கும். காய்ச்சல் வராமல் தடுக்கும்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

10. கொட்டும் தொடர் மழையில் அலுவலகம் சென்றே ஆகவேண்டிய சூழ்நிலை என்றால், கையில் ஒரு மாற்று உடை எடுத்துச் செல்வது நல்லது. ஈர ஆடையுடன் அலுவலகத்தில் நிறைய நேரம் உட்கார்ந்து இருப்பது, காசு கொடுத்து நோயை விலைக்கு வாங்குவதற்குச் சமம்.

11. வெள்ளக் காலங்களில் தொற்று நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம், அதனைத் தவிர்க்க, கழிவு நீர் சரியாக வெளியேறுமாறு அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். ஆனால், வெள்ள நீரை உள்ளே புகவிடக் கூடாது.

12. உணவைப் பொறுத்தவரை, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை ருசி பார்க்க நாக்கு அலையும். என்றாலும் 'நோ' சொல்லுங்கள். அப்போதுதான் வயிறு பத்திரமாக இருக்கும்.

13. வைட்டமின் 'சி' அடங்கிய பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும்.

14. வாய்ப்பு கிடைக்கும்போது இளஞ்சூட்டில் சூப் குடிக்கலாம். இது, மூச்சுக் குழாயில் உள்ள கோழையை அகற்றி, சுவாசத்தை சுலபமாக்கும்.

மழையிடமிருந்து மழலைகளைப் பாதுகாக்க..!

மழைக்காலத்தில் பெரியவர்களையே நடுங்க வைத்துவிடும் தூவான ஈரம். அந்த நடுக்கத்தைப் போக்க வழி கண்டு, சுகமடைந்து விடுவோம் நாம். ஆனால், பிறந்து சில வாரங்கள், மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் என்ன செய்யும்? பூ போன்ற அந்த மொட்டுகளை மழை தரும் சளி, காய்ச்சல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பது எப்படி..?

15. மழைக்காலத்தில் சுற்றுப்புறமும் அறை வெப்பநிலையும் நார்மல் டெம்ப்பரேச்சரில் இருக்காமல் சில்லென இருக்கும். இந்த அசாதாரண வெப்பநிலையை குழந்தைகளால் தாங்க இயலாமல், உடம்பு சில்லென மாறி... உச்சகட்ட ஆபத்தாக உடல் ப்ளூ கலரில் மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆகையால், இந்தத் தருணங்களில் குழந்தைகளின் கால், கைகளை கதகதப்பாக வைத்திருக்க சாக்ஸ், கை உறைகள் போட்டு வைத்திருப்பது நல்லது.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

16. குழந்தைகளுக்கு சளி, இருமல் சில நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால், உடனே குழந்தைகள் நல மருத்துவரை பார்ப்பது அவசியம். அலட்சியமாக விட்டால் 'பிரான்கியோலைட்டிஸ்' (Bronchiolytis) எனும் மார்புச்சளி தொந்தரவு அதிகமாகிவிடும் என்பதால் அம்மாக்களே எச்சரிக்கை.

17. குழந்தைக்கு எப்போதும் மூக்கில் சளி ஒழுகிக் கொண்டே இருத்தல், பால் குடிக்காமல் அழுதல், குறைந்த அளவே பால் குடித்தல், கஷ்டப்பட்டு மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால்... குழந்தைக்கு 'பிரான்கியோலைட்டிஸ்' தாக்கி இருக்கிறது என்று அர்த்தம். உடனே நல்ல டாக்டரிடம் செல்வதுதான் தீர்வு.

18. சளி தொந்தரவுகளுக்கு இன்னொரு காரணம்... வீட்டில் இருப்பவர்கள் புகை பிடிப்பது. குழந்தை அதனை சுவாசித்தால், அது சுவாசக் கோளாறுகளை உடனே உருவாக்கும். அந்தக் கஷ்டமான சூழ்நிலையைக் குழந்தைக்கு உருவாக்காமல் இருப்பதுதான் நாம் அவர்கள் மேல் காட்டும் பாசம், பாதுகாப்பு.

19. பாப்பா வீறிட்டு அழும். பால் கொடுத்தால் குடிக்காது. அம்மாக்களுக்கு என்ன காரணம் என்றே தெரியாமல் தலையைச் சுற்றும். அப்படி அழுதால், பாப்பாவுக்கு காது வலி என்று அர்த்தம். ஆரம்பகட்ட சளியைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், காதில் சீழ் வைத்து குழந்தையைப் படுத்திவிடும். சளி வராமல் பாதுகாப்பதே சிறந்த வழி. வந்துவிட்டால் ஆரம்பத்திலேயே சரிசெய்வது நன்று.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

20. காது வலிக்கு இன்னொரு காரணம்... குழந்தையைப் படுக்க வைத்து பால் கொடுப்பது. மடியில் வைத்து பால் கொடுத்தால் 'நோ பிராப்ளம்'. பால் கொடுத்த பிறகு, சிறிது நேரம் தூக்கி வைத்து தட்டிக் கொடுத்த பிறகே தூங்க வைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதெல்லாம் மூச்சுத் திணறல் பிரச்னை வராமல் தடுக்கும்.

21. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாரில் சளி கட்டி, அது தீவிரமடைந்து, நிமோனியா காய்ச்சலாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுக்க தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். மினரல் வாட்டர் என்று சொல்லி விற்கப்படும் தண்ணீரிலும் கிருமிகள் இருக்கக்கூடும் என்பதால், காய்ச்சி, வடிகட்டிய குடிநீரே சரியான தடுப்பு நடவடிக்கை.

22. குழந்தை சரியாக சிறுநீர் போகவில்லை, சோர்வாக இருக்கிறது, அதிகபட்சமான காய்ச்சல் இருக்கிறது என்றால், அலட்சியப்படுத்தாமல் டாக்டரிடம் உடனே செல்வது, குழந்தைக்கு நல்லது. அது டெங்கு உள்ளிட்ட வேறுவிதமான காய்ச்சல்களாகக் கூட இருக்கலாம் என்பதால் தாமதம் வேண்டவே வேண்டாம்.

23. டெங்கு காய்ச்சல் பெரியவர்களுக்கு மட்டும் வருவதில்லை. இப்போதெல்லம் சில வாரங்கள் ஆன குழந்தைகளுக்கும்கூட வருகிறது என்பதால், அம்மாக்கள் குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது நலம்.

24. கொசுவர்த்திச் சுருளை குழந்தை இருக்கும் அறையில் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நலம். அப்படியே வைத்தாலும், குழந்தை இருக்கும் இடத்தில்இருந்து தூரத்தில் வைப்பது பாதுகாப்பு. குறிப்பாக, மூச்சுத் திணறல் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

25. குழந்தை இருக்கும் அறையில் ஃப்ளவர்வாஸ், மீன்தொட்டிகள் வைக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். இது மழைக்காலத்தில் கொசுக்களின் 'புரொடக்ஷன் ஹவுஸ்' என்பதால் முன்னெச்சரிக்கை தேவை.

26. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் தொந்தரவுகளுக்குப் பின் குழந்தைகளுக்கு வருகிற அடுத்த பிரச்னை... வயிற்றுப்போக்கு. இது வராமல் தடுக்க தாய்ப்பால்தான் மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள். தாய்ப்பாலைவிட நோய் வராமல் தடுக்கும் மருந்து எதுவுமில்லை என்பது பல கோடி தாய்மார்களின் அனுபவ உண்மை.

27. புட்டிப்பால் கொடுக்கும்போது, பாட்டில் சுத்தமில்லாததாக இருந்தால் சில பிரச்னைகள் வரும் என்பதால் குறைந்தபட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பது சாலச் சிறந்தது.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

28. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் கூடிய சிறு சிறு கட்டிகள் வரும். அது ஒரு வகையான அம்மைநோய். அது எளிதில் தொற்றக்கூடிய நோய் என்பதால், பாதிப்புக்குள்ளான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது நலம்.

29. குழந்தைகளுக்கு எந்தத் தொற்றுநோயும் வராமல் இருக்க, வெளியில் இருந்து வீட்டுக்குள் வருகிறவர்கள் கை, கால்களை சுத்தமாக கழுவிய பின், குழந்தையைத் தொட்டுத் தூக்கினால் செல்லப் பாப்பாவுக்கு ரொம்ப சேஃப்டி.

30. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அடிப்படையான சுகாதார முறைகளைக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாக, அடிக்கடி கை கழுவினாலே பல தொற்றுநோய்கள் வராது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

31. குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை இருக்கும்போது கைக்குட்டை ஒன்றை கொடுத்தனுப்புவது நல்லது. இருமல் வரும்போது வாய்மூடி இரும வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது ஆரோக்கியத்துக்கான வழி.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

மழைக்காலத்தில் மழலைகளைப் பாதுகாக்க வழிகள் இருக்கும்போது, அவர்களைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் பாதுகாப்புக்கும் அக்கறையோடு வழி சொல்ல வேண்டும் அல்லவா..?! கர்ப்பிணிகளுக்காக பாசத்தோடு இந்த டிப்ஸ்...

32. கர்ப்பிணிகள் மழைக்காலங்களில் வெளியில் செல்லாமல் இருப்பதும், தொற்று மற்றும் நோய்களிடமிருந்து இரு மடங்கு கவனத்துடன் இருப்பதும் நல்லது. ஏனெனில், காய்ச்சல், சளி என்று தொந்தரவுகளை இழுத்துக் கொண்டால், அதில்இருந்து குணம் பெறுவதற்காக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள், கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கலாம்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

33. மழைக்காலத்தில் மிகக்குறிப்பாக டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் பரவும். அதைத் தடுக்க ஒரே வழி... கொதிக்க வைத்து வடிகட்டிய குடிநீர்தான். இதையே எப்போதும் அருந்துவது... உங்கள் சிசு மேல் கொண்டுள்ள பாசத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழி.

34. மலேரியா, டெங்குக் காய்ச்சல்... மழைக்கால ஸ்பெஷல். கொசுக்களின் அதிதீவிர ஆக்கிரமிப்பால் பரவும் இந்நோய்களைத் தடுக்க வழி, உங்கள் படுக்கையை சுற்றிலும் நல்ல தரமான கொசுவலைகளைக் கட்டுவதே. கொசுவர்த்தி சுருள், மேட், லிக்யூட் எல்லாவற்றையும்விட எளிமையான, பக்க விளைவுகள் அற்ற பாதுகாப்பு முறை இது.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

35. மழைக்காலத்தில் வீட்டுத் தரையிலும், வெளிச் சாலைகளிலும் தண்ணீர் ஓடி வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். ஆகையால், கிரிப்பான செருப்புகளை அணிந்து செல்வது புத்திசாலித்தனம்.

முதியவர்களுக்கு...

36. 'ஆர்த்ரைட்டீஸ்' எனப்படும் மூட்டுவலி பிரச்னை உள்ள முதியோர்களுக்கு, அது மழைக்காலத்தில் தீவிரமாக வாய்ப்பு உள்ளது. ஆகையால், கால்களுக்கு உறை அணிந்து செல்வது, கதகதப்பான வெப்பநிலையில் உடலை வைத்திருப்பது மூட்டு வீங்குவதைத் தடுக்கும்.

37. மழைக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் செல்வது ஒரு பெரும் பிரச்னை. அதைத் தவிர்ப்பதற்காக தண்ணீர் அருந்துவதைக் குறைத்தால், அது சிறுநீரகத் தொற்றை உருவாக்கலாம். தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

அடை மழைக்கால அழகு குறிப்புகள்!

மழை பெய்தாலும் குளிரடித்தாலும் செல்லும் இடங்களுக்கு நல்ல உடை அணிந்து, நீட்டாக செல்வது அவசியம்தானே! சிதறிய மழைத்துளிகளால் ஐ லைனர் கலைந்து, கேசம் நனைந்து, ஆடைகள் ஒட்டி என... இந்தக் கஷ்டங்களையெல்லாம் சமாளித்து மழையிலும் அழகாக, அம்சமாக இருக்க...

38. மேக்கப் போடுவதற்கு முன் 'மாய்ஸ்ச்சரைஸர்' கிரீம்களைத் தடவி, பிறகு மேக்கப் போட்டுக்கொண்டால் சீக்கிரத்தில் அழியாமல் இருக்கும். குறிப்பாக 'ஆயில் பேஸ்டு' மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தினால் பிரச்னை இருக்காது என்கிறார்கள் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

39. கண்களில் மை இட்டுக்கொள்ளும்போது... வாட்டர் புரூஃப் ஐ லைனர், வாட்டர் புரூஃப் மஸ்காரா பயன்படுத்தலாம்.

40. லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள், 'செமி மேட்டட்' வகை லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால், நிறம் மாறாமல், அழகு குறையாமல் இருக்கும்.

41. மழைக்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். அப்போதுதான் அதிகமான பொடுகு தலையில் வரும். இதைத் தடுக்க... வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

42. 'மழைக் காலம்தானே...' என்று தலைக்குக் குளிக்காமல் சென்றால்... பொடுகு அழையா விருந்தாளியாக வரும். குறைந்தபட்சம் வாரம் 2-3 முறை தலைக்குக் குளிப்பது அவசியம். சொட்டச் சொட்ட தலைக்கு எண்ணெய் வைத்துச் செல்வதும் நல்லதல்ல என்பதால் அளவோடு எண்ணெய் வையுங்கள். தலை முடி பேணுங்கள்.

43. கேன்வாஸ் ஷ¨... இந்த சீஸனுக்கு ஏற்றதல்ல என்பதால், அதனை அணிவதைத் தவிர்க்கலாம். கட்டாயம் ஷ¨தான் அணிய வேண்டும் என்றால், ரெக்ஸின் ஷ¨க்கள் நல்ல சாய்ஸ்.

44. மழைக்காலத்தில் கொலுசு மணிகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தங்கி நின்று, தோல் நோய்களை உருவாக்கலாம். அதைத் தவிர்க்க தினம் தினம் கொலுசையும் குளிப்பாட்டுங்கள். அல்லது தற்காலிகமாக அதை அணிவதை நிறுத்துங்கள். ஆரோக்கியம்தானே அவசியம்?!

ரெயின் கோட், குடை... பர்ச்சேஸ் அண்ட் மெயின்டெனன்ஸ்!

மழைக்காலத்தில் வெளியில் நடமாட வேண்டிய சூழல்களில் நமக்குப் பாதுகாப்பு தருபவை ரெயின்கோட்டுகள், குடைகள்தான். நம் தேவைக்கேற்ப அவற்றைச் சரியாக தேர்வு செய்வதும் பாதுகாப்பதும் முக்கியம்தானே தோழிகளே?!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

ரெயின்கோட்...

45. கஷ்டப்பட்டு துவைத்து, அயர்ன் செய்து அணிந்து செல்லும் ஆடைகள் மழையில் நனைந்து உடலோடு உடலாக ஒட்டி தர்மசங்கடப்படுத்தும். குடை பிடித்துப் போனாலும் தலை தவிர மற்ற பகுதிகள் நனைந்து குளிர வைக்கும். இதிலிருந்தெல்லாம் பாதுகாப்பாக இருக்க ஒரே வழி... தரமான, பொருத்தமான ரெயின்கோட்தான்.

46. இருசக்கர வாகன ஓட்டிகள், மழைக்காலத்தில் கட்டாயம் ஒரு ரெயின்கோட் வைத்திருப்பது நல்லது. மார்க்கெட்டில் பலவிதமான ரெயின்கோட்டுகள் கிடைக்கின்றன. பெண்கள் கைப்பையில் வைத்து பயன்படுத்துமளவுக்கு சிறிய, 'கம்பேக்ட்'டான பிளாஸ்டிக் வகை ரெயின்கோட்டுகள் இருக்கின்றன. இவற்றைப் பராமரிப்பதும் எளிது.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

47. ரெயின்கோட்டில் மடித்தால் சுருக்கம் விழாத, 'ரிங்கிள் ஃப்ரீ' வகை ரெயின்கோட்டுகளும் இருக்கின்றன. அவற்றைத் தேடி வாங்கி, அடாத மழையிலும் 'ஜம்' என்று உலா வரலாமே..!

48. ரெயின்கோட்டைவிட, ரெயின் ஜாக்கெட், பேன்ட் பலவிதமான மாடல்களில் வந்திருக்கிறது. இந்த ஜாக்கெட்-பேன்ட் மாடல் பயன்படுத்தினால், உள்ளே நாம் அணிந்திருக்கும் ஆடை நனையவோ... ஈரமாகவோ வாய்ப்பு இல்லை என்பது இதன் சூப்பர் அட்வான்டேஜ்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

49. ரெயின்கோட்டில் மழை சகதி, சேறு கறை பட்டுவிட்டால், அது நோய்க்கிருமிகளின் வாசஸ்தலமாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு முன்பாக சுத்தம் செய்வது பல பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.

50. ரெயின்கோட்டை பயன்படுத்திய பிறகு, காற்றும் வெளிச்சமும் படும் இடத்தில் உலர வைப்பது நல்லது. ஈரத்துடன் மடித்து காற்றுப்புகாத பகுதியில் வைத்தால், அதற்குள் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அதோடு மறுபடியும் ரெயின்கோட் அணியும்போது, பூஞ்சைகள் நம்மைத் தாக்குவதற்கு 100% வாய்ப்பு உண்டு.

குடை...

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

51. கடும் மழை, பலத்த காற்று இல்லாத சமயங்களில், குடை கைகொடுக்கும். கடும் மழை மற்றும் பலத்த காற்று போன்ற சந்தர்ப்பங்களில் குடை பிடித்தால்... பலன் இருக்காது. கடும் மழை, குடையையும் மீறி நம்மை பாதிக்கும். காற்று பலமாக இருந்தால், குடையை இறுகப் பிடிப்பதே வேலையாகிவிடும். இந்த மாதிரியான நேரங்களில் ஜெர்கின், ரெயின்கோட் வகை பாதுகாப்புதான் கை கொடுக்கும்.

52. குடைகளில் மழைக்காலத்துக்கு ஏற்றது, வெயில் காலத்துக்கு ஏற்றது என வகை வகையாக உள்ளன. வெயில் காலத்துக்கு இளம் வெளிர் நிறக்குடைகள் ஏற்றவை. மழைக்காலத்துக்கு குடைகளின் நிறத்தைவிட, நீடித்து உழைக்கும் குடைகள்தான் முக்கியம் என்பதால் பிராண்டட் குடைகளைப் பயன்படுத்தலாம்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

53. நம் உருவ அமைப்புக்கு பொருந்தாத சிறு குடைகளைப் பயன்படுத்தி, முழுக்க நனைந்து, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதைவிட, பொருத்தமான, பாதுகாப்பான அளவில் உள்ள குடைகளைப் பயன்படுத்துவதே நல்லது.

54. குடைகளைப் பயன்படுத்திய பிறகு, ஈரம் போக காயவைத்து, பிறகு மடித்து வைப்பது துர்நாற்றம் வராமல் தடுக்கும்.

கொட்டும் வானம் VS வாகனங்கள்!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

மழை பெய்யும்போது மனிதர்களோடு சேர்ந்து அவதிக்குள்ளாவது இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும்தான். பெரும் பணம் கொடுத்து வாங்கும் அவற்றை பத்திரப்படுத்துவதும் பாதுகாப்பதும் மிகமுக்கியம் என்பதால் வரிசைப்படுத்துகிறோம் இவற்றை..!

55. இன்ஜின், என்னதான் நன்கு சீல் செய்யப்பட்டது என்றாலும், நீரில் மூழ்கும்போது அழுத்தத்தின் காரணமாக நீர் உள்ளே புகுந்து விடும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

56. நீரில் மூழ்கிய காரோ... பைக்கோ... இன்ஜின், சைலன்ஸர் ஆகியவற்றில் இருந்து நீரை வெளியேற்றி விட்டால், பிரச்னை முடிந்தது என நினைக்கக் கூடாது. ஏனெனில், வாகனங்கள் சாலையில் செல்லத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றனவே தவிர, நீரில் செல்வதற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

57. இன்ஜின் மூழ்கும் அளவுக்கு அல்லது சைலன்ஸர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தால், அந்தப் பாதையில் செல்லாமல் இருப்பதுதான் புத்திச்சாலித்தனம்.

டூ-வீலர்...

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

58. தேங்கி நிற்கும் தண்ணீரைக் கடக்கும்போது... ஆக்ஸலரேட்டரை குறைக்காமல் சென்றால், சைலன்ஸரில் நீர் புகாமல் வெளியே சென்று விடலாம் என முயற்சிப்பவர்கள் நிறையவே உண்டு. இப்படி, ஆஃப் கிளட்சில் இன்ஜினை அதிர வைப்பதால், கிளட்ச் பிளேட் வீணாகிவிடுவதற்கு வாய்ப்பு அதிகம்.

59 'ஆஃப்' ஆன பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காமல், அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மெக்கானிக், சைலன்ஸரைக் கழற்றி முழுமையாக சுத்தம் செய்கிறாரா என்றும் பாருங்கள். அதேபோல, கியர் பாக்ஸ், இன்ஜின் ஆயில் மூடியைக் கழற்றச் சொல்லிப் பாருங்கள். அதுதான் சரியான முறை.

60. நீர் உள்ளே புகுந்திருந்தால், ஆயில் வெள்ளையாக மாறி இருக்கும். அப்படி இருந்தால், அதை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றச் சொல்லுங்கள்.

61. 'ஸ்பார்க் பிளக்' சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோல் கிளட்ச், கார்புரேட்டர், ஃபில்டர் ஆகியவற்றையும் கழற்றி முழுமையாகச் சுத்தம் செய்த பின்னரே பொருத்த வேண்டும். பேட்டரி ஒயர் டெர்மினல், எலெக்ட்ரிக்கல் பாகங்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்வது அவசியம். இவை அனைத்தும் முடிந்த பிறகுதான் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டும்.

62. ஸ்டார்ட் செய்து சில கிலோ மீட்டர்கள் ஓட்டிப் பார்த்து, வேறு ஏதாவது பிரச்னை தருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், உடனடியாகச் சரிசெய்துவிட வேண்டும்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

63. மீண்டும் ஒரு முறை இன்ஜின் ஆயிலைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. இன்ஜின் பகுதியில் தண்ணீர் இருந்திருந்தால், ஆயிலில் லேசான வெள்ளை நிறம் எட்டிப் பார்க்கும். தயங்காமல் மீண்டும் இன்ஜின் ஆயிலை மாற்றி விடுவதுதான் உத்தமம்.

கார்...

64.கார் பாதிக்கப்பட்டுவிட்டால்... சர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் செல்வதுதான் சிறந்த வழி. இன்ஜின் ஸ்டார்ட் ஆகிறதா என ஆர்வக்கோளாறில் இயக்கி விட்டால், பில் பழுத்து விடும். இன்ஜின், கியர் பாக்ஸ் ஆயிலை முழுமையாக மாற்றிவிட வேண்டும்.

65. கிளட்ச், ஸ்டார்ட்டர் மோட்டார், ஆல்ட்டர்னேட்டர், எலெக்ட்ரிகல் பாகங்கள், ஏ.சி. கம்ப்ரஸர், கூலன்ட் என பானெட்டில் உள்ள அனைத்து சமாசாரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

66. இன்ஜினுக்குள் நீர் இறங்கியது உறுதியானால், சிலிண்டர் ஹெட்டைக் கழற்றிச் சுத்தம் செய்து, கேஸ்கட் மாற்ற வேண்டும். டைமிங் கேஸ், ஃப்யூல் சிஸ்டம் ஆகியவற்றையும் சர்வீஸ் செய்வது அவசியம். இதையெல்லாம் முடித்த பின்பே ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

67. 'நல்லா சொல்றாய்ங்கப்பா டீட்டெய்லு... இதுவும் செலவுதான பிடிக்குது' என்பவர்களுக்கு... உங்கள் வாகனத்தின் நீண்ட ஆயுளை அப்படியே தொடர்வதற்கு, இந்தச் செலவுகளைச் செய்துதான் ஆக வேண்டும்!

68. மழைக்காலங்களில் வாகனம் நீரில் மாட்டிக் கொள்வதால் ஏற்படும் செலவை ஈடுகட்டுவதற்கு, வாகன இன்ஷ¨ரன்ஸில் வழி இருக்கிறது. ஆம்... வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து நிவாரணம் பெற (Flood Cover) உங்கள் பாலிஸியிலேயே வழி உண்டு. ஆனால், நீரில் மூழ்கிய வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றது தெரிய வந்தால், அதனால் பாதிக்கப்பட்ட பாகங்களுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் கிடைக்காது என்பதால் கவனம்.

மின்சாரப் பாதுகாப்பு!

மழைக் காலங்களில் மின்விபத்துக்களும் சர்வசாதாரணமாகிவிடும். அதனால், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி...

69. மின்சாதனங்களை தேவையில்லாமல் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சாதனங்கள் பழுதாகவும், ஷாக் அடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால்... இதில் கவனம் காட்டுவது அவசியம். ஸ்விட்சுகளைப் போடும்போதும்கூட, உலர்ந்த துணியில் கைகளைத் துடைத்துக் கொண்டு போடுங்கள்.

70. சுவர்களில் ஈரக்கசிவு இருந்தால், அது உங்களுடைய ஸ்விட்ச் பாக்சுக்கு அருகில் இருந்தால்... நிச்சயமாக எச்சரிக்கை தேவை. ஷாக் வருகிறதா என்று தரமான டெஸ்டர் கொண்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆம் என்றால், கூடுமானவரை மின்சாதனங் களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

71.எர்த் கனெக்ஷன் சரியாக இல்லாமல், ஷாக் அடிக்க வாய்ப்பு உண்டு. உடனடியாக எலெக்ட்ரீஷியனை அழைத்து, விஷயத்தை விளக்கி சரிசெய்வது நல்லது. எக்காரணம் கொண்டும், விவரம் தெரியாமல் சுயமாகக் களத்தில் இறங்கி, கஷ்டத்தை வரவழைக்கக் கூடாது.

72. இரவு நேர பவர்கட் பிரச்னையைச் சமாளிக்க, பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் போன்றவற்றை வாங்கி வைக்கலாம். தங்குதடையில்லா தொலைதொடர்புக்காக உங்கள் செல்போனுக்கு கூடுதலாக ஒரு பேட்டரியை வாங்கி, முன்கூட்டியே சார்ஜ் ஏற்றி வைக்கலாம். இது ஆபத்தில் கை கொடுக்கும்.

73. பவர்கட் சமயங்களில்... சரியான காற்றோட்ட வசதி இல்லாத வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றினால், அதன் வாடை வீட்டுக்குள்ளேயே சுழன்று, உங்களுக்கு வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். மெழுகுவர்த்திகளை ஏற்றலாம். அதைவிடச் சிறந்தது... நல்லெண்ணெய் விளக்கு.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வெள்ளம் வந்த பின்பு தவிப்பதைவிட, 'வருடா வருடம் நம் பகுதி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகிறது... ஆலாய்ப் பறக்கிறோம். இந்த முறையாவது முன்னெச்சரிக்கையாக எப்படி இருப்பது..?' என்பவர்களுக்கு...

74. ஏரிக்கரை, கடற்கரை, குளத்தோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ள அபாயத்தை மனதில் கொண்டு, வீட்டை வடிவமைப்பது நலம். அகலமான சுற்றுச் சுவர், நல்ல வடிகால் வசதி, உயரமான தளம் இவற்றோடு வீடுகளை அமைக்கலாம்.

75. வீட்டின் அமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளம் பாதிக்காத வகை வீடுகளின் அமைப்புகள், மாடல்கள்... 'நேஷனல் டிசாஸ்டெர் மேனேஜ்மென்ட்' (National Disaster Management) என்ற மத்திய அரசு அமைப்பிடம் உள்ளது. வெள்ள அபாயப் பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம். கீழ்க்கண்ட இணையதளத்தில் தகவல்கள் கிடைக்கும்... http//new.ndmindia.nic.in/

76. வெள்ளம் வரும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் வீடு கட்டுபவர்கள், மின்சார பிளக் பாயின்ட்டுகளைத் தரை அல்லது உயரம் குறைவான இடங்களில் வைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

77. சுவர் மற்றும் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை ஒட்டுவதற்கு ஏற்ற பசைகளும் விற்பனையில் உள்ளன. வெள்ளக் காலத்தில் வீடே சோதனைக் களமாக மாறுவதைத் தடுக்க முன்னேற்பாடாக அவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

78. மாடி வீடுகளில் வசிப்பவர்கள் சமைப்பதற்கும் உறங்குவதற்கும் தேவைப்படும் பொருட்களை தரைதளத்தில் வைக்காமல், மேல்தளத்திலேயே வைப்பது சிக்கலைக் குறைக்கும்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

79. அதிக வெள்ள ஆபத்துள்ள பகுதியினர், தேவையான முக்கிய ஆவணங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் புகாத பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்க வேண்டும். மிகப் பெரிய இயற்கை சீற்றம் என்றால், அவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால், வீட்டிலேயே பத்திரமாக ஓர் இடத்தில் வைக்கலாம்.

80. நீண்ட நாள் தொடரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு நம்மை வீட்டிலேயே முடக்கி விடும். உணவுப் பொருள், மருந்துகளுக்கு பற்றாக்குறை வந்தால்..? அபாய காலங்களில் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்குத் தேவையான மளிகை மற்றும் மருந்துப் பொருட்கள் எப்போதும் கையிருப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

81. வெள்ளம் பெருக்கெடுத்து வருவதற்கு முன் பாதுகாப்பற்ற சூழல்களில் வாழ்பவர்கள், குடும்பத்துடன் குடியேற வேறு பாதுகாப்பான தங்கும் இடம் குறித்து யோசிப்பது நலம். அதை உடனே செயல்படுத்துவது மிக முக்கியம்.

82. 'வெள்ளம் வரலாம்' என்ற நிலை ஏற்பட்ட உடனேயே பள்ளமான பகுதிகளில் இருப்பவர்கள் மேடான அல்லது சமமான இடங்களுக்குக் குடி பெயர்வது சமயோஜித முடிவு.

83. மேடான பகுதிகள் வெள்ளக் காலங்களில் வாழப் பாதுகாப்பானவை என்றாலும், மண் சரிவு ஏற்படும் வாய்ப்பு இருந்தால் அதுவும் அபாயகரமான பகுதியே என்பதால் யோசித்து நல்ல பாதுகாப்பான இடம் குறித்து முன்கூட்டியே முடிவு செய்வது நல்லது. அலட்சியம்... ஆபத்து!

84. பல்வேறு காரணங்களால் உடனே குடிபெயர்தலை நிகழ்த்த முடியாதவர்கள், குறைந்தபட்சம், பேரிடர் காலங்களில் தேவைப்படும் பொருட்களை மட்டுமாவது அங்கே வைப்பது நலம். அவசரத்தில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியம் இருக்காது.

85. மழைக்காலங்களில் மலைவாசஸ்தலங்களுக்கு பயணப்படுவதையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், திடீர் நிலச்சரிவுகள் உங்கள் பயணத்தை பாதிப்பதோடு, வேறுவிதமான பிரச்னைகளுக்கும் வழி வகுத்துவிடும்.

நாடுங்கள்... நாட்டு மருந்தை!

மழை பெய்தால்... உடனே ஓடி வந்துவிடும் சில வியாதிகள். இதற்காக உடனடியாக மருத்துவரிடம் ஓடிக் கொண்டிருப்பது என்பது அந்த நேரத்தில் தேவையற்ற அலைச்சலையும், அசதியையும் கொடுக்கும். எனவே, இருக்கவே இருக்கிறது 'வருமுன் காப்போம்' எனும் பாட்டி வைத்தியம். அதிலிருந்து...

86. ஜலதோஷம், சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை. தவிர்க்க முடியாமல் குளிர்பானமோ, ஐஸ்க்ரீமோ சாப்பிட்டு அது ஒப்புக் கொள்ளவில்லை என்றால், உடனடியாக சூடாக வெந்நீர் அருந்த வேண்டும்.

87. வெந்நீர் அருந்திய பிறகும் பிரச்னை எனில், மணத்தக்காளி கீரையை சூப் செய்து அருந்தலாம். அதை சூப்பாக செய்து அருந்தும்போது சளி, ஜலதோஷம் வராமல் தடுக்கும். காலையில் இஞ்சிச்சாறு, டீயில் இஞ்சி சேர்த்துக்கொள்வது, இஞ்சித் துவையல் போன்றவை நல்ல நிவாரணம் தரும். மாலை வேளைகளில் சுக்கு காபி அருந்தலாம்.

88. சுக்கு காபி என்பது... வெறுமனே சுக்கை தட்டிப் போட்டு பால் கலந்து அருந்துவதல்ல. ஒரு பங்கு மிளகு, இரண்டு பங்கு சுக்கு, நாலு பங்கு தனியா, ஐந்தாறு எண்ணிக்கை ஏலக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, ஆடாதொடை உள்ளிட்ட மூலிகைளில் ஏதாவது ஒன்றை சேர்த்து கொதிக்க வைக்கலாம். பிறகு, தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம்.

89. மாலை வேளைகளில் கற்பூரவள்ளி இலைகளை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது சளியைக் கட்டுப்படுத்தும். சேற்றுப்புண் இருந்தால் அம்மான் பச்சரிசி இலைக் காம்பிலிருந்து வழியும் பாலைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

90. தொண்டைக் கரகரப்பு இருந்தால்... அது சளி, ஜலதோஷத்தின் அறிகுறியாகும். அதற்கு காலை எழுந்ததும் பொறுக்கும் சூட்டிலான தண்ணீரில் கல் உப்பு கலந்து, தொண்டை நனைய நனைத்து கொப்பளிக்க வேண்டும். இரவு உறங்கப் போவதற்கு முன்னும் இப்படி செய்து வந்தால் அந்த தொந்தரவு வராது.

91. இஞ்சி மிட்டாய், இஞ்சி முரப்பா, சுக்கு மிட்டாய், தூதுவளை மிட்டாய், துளசி மிட்டாய் போன்றவை (காதி பவன்) கடைகளில் கிடைக்கின்றன அவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். சளி பிரச்னைக்கு சடுதியில் தீர்வு கிடைக்கும்!

கைகொடுக்கும் தொலைத்தொடர்பு எண்கள்!

வெள்ள ஆபத்தில் கைகொடுத்து உதவுவதற்கு என்றே சில அரசுத் துறை அலுவலகங்களின் தொலைத்தொடர்பு எண்கள் உள்ளன. அவற்றை அறிந்து வைத்துக் கொள்வது, சொல்லப்போனால் மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது பல ஆபத்துக்களையும் சேதங்களையும் தடுக்கும்...

92. பொது அவசர அழைப்புக்கான எண் 108. காவல், தீயணைப்புத்துறை மற்றும் உயிர் சார்ந்த ஆபத்து தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த எண்ணை அழைக்கலாம். என்றாலும், உடனடி உதவிக்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லதுதானே!

93. நீங்கள் வாழும் பகுதிக்கு உட்பட்ட வருவாய்த்துறை தாசில்தார் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அங்கு சேவை புரியும் தொண்டு நிறுவனங்களின் எண்களை வாங்கி வைத்துக் கொண்டால் 'ஆபத்து வரலாம்!' என்ற சூழலில் அவர்களிடம் உதவி கோரலாம்.

ஆபத்பாந்தவன்... ஏ.எம். ரேடியோ!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

புயல், வெள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு பலவித யுக்திகள் கையாளப்பட்டாலும் எல்லா நேரத்திலும் இயங்கக்கூடிய ஏ.எம். (A.M) ரேடியோதான் சிறந்த ஆபத்பாந்தவன். அது என்ன ஏ.எம். ரேடியோ..?! தெரிந்து கொள்ளுங்கள்.

94. புயல், வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுக்க... டி.வி. செல்போன், தொலைபேசி என பல ஊடகங்கள் இருந்தாலும், அபாயத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு, தங்கு தடையில்லாமல் உதவ ஒரே ஒரு ஊடகம்தான் உள்ளது. அது ஏ.எம். ரேடியோ. நீங்கள் வாழும் பகுதி முழு வெள்ளக்காடாகி, தகவல் தொடர்பு முற்றாக துண்டித்தாலும், இந்த ரேடியோ சேவை உங்களுக்கு உதவும்.

95. செல்போன், டி.வி., ரேடியோ ஆகியவற்றுக்கு தேவையான அலைகள்... அருகில் உள்ள டவர்களில் இருந்து கிடைப்பவை. டவர் போனால் சிக்னலும் போச்சு. ஆனால், ஏ.எம். ரேடியோ இயங்குவது ரேடியோ அலைவரிசை (லண்டன் பி.பி.சி. ரேடியோ உதவியோடு). அதனால், எந்தத் தடங்கலும் இன்றி உங்கள் இருப்பிடம் நோக்கி தகவல் தவழ்ந்து வரும்.

96. வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்ற பயங்கர இயற்கைப் பேரிடர்களில் சிக்கிக் கொள்பவர்கள், 'மீட்புப்பணி எங்கு நடக்கிறது, உணவுப் பொட்டலம் எங்கு வழங்கப்படுகிறது, பாதுகாப்புக்காக தங்குவதற்கு எங்கு இடம் உள்ளது' போன்ற தகவல்களை ஏ.எம். ரேடியோ மூலம் பெற இயலும்.

97. ஏ.எம். ரேடியோ சேவையைப் பெற, ஏ.எம். வாய்ப்பு உள்ள ஒரு ரேடியோ மற்றும் பேட்டரிகள் இருந்தால் போதும். இயற்கை பேரிடரில் சிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், கட்டாயம் உடன் எடுத்து பத்திரப்படுத்த வேண்டிய சாதனங்களில் இதுவும் ஒன்று.

98. 'அமெச்சூர்' ரேடியோ எனப்படும் 'ஹாம்' (HAM ) ரேடியோ என்ற ஒன்றும் பேரிடர் காலங்களில் உதவுகிறது. இந்த 'ஹாம் ரேடியோ'வை இயக்க, ரேடியோ அலைவரிசையில் இயங்கக்கூடிய கையடக்க ட்ரான்ஸ்சீவர் (Transceiver) டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியுள்ள ரேடியோ இருந்தால் போதும்.

99. உலகம் முழுதும் இந்தத் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு இயங்கும் ஆர்வலர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களில் யார் ஒருவரிடம் உங்கள் தகவல் போய் சேர்ந்தாலும், தேவையான உதவிகள் எப்படியாவது கிடைத்துவிடும்.

100. பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த ரேடியோ குழுவில் இணைந்து, சேவையாற்றலாம்.

new.hamradioindia.org/ amateur_radio/ என்ற இணையதளத்தில் இதைப்பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது ஆபீஸர் இன்சார்ச், வயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன், கந்தன்சாவடி, பெருங்குடி, சென்னை - 600 096 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!

மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
-தொகுப்பு நாச்சியாள், எம்.மரிய பெல்சின், இரா.மன்னர்மன்னன்
படங்கள் என்.விவேக், து.மாரியப்பன்
தொகுப்புக்கு உதவியவர்கள் டாக்டர் தீபா ஹரிஹரன், சென்னை ஊடக கலைகள் துறை, லயோலா கல்லூரி, சென்னை
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால பிரச்னைகள்... தவிர்க்க... தப்பிக்க.. சூப்பர் டிப்ஸ்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism