'"கூடவே, அரசு மருத்துவமனைகள்ல முதியோர்களுக்கு தனி கவுன்ட்டர் வசதி, சிறைச்சாலைகள்ல தனி அறைகள், காவல் நிலையங்கள்ல அவங்க குறைகளை அலைக்கழிக்காம காதுகொடுத்துக் கேட்க ஒரு தனி அதிகாரினு மாவட்ட கலெக்டர் உதவியோட எங்க பணிகளை விரிவுபடுத்தியும் இருக்கோம்" என்று சந்தோஷம் பகிர்ந்தார்கள் மற்ற இரு செயல் வீராங்கனைகளான காயத்ரி, திவ்யா.
"செல்போன், கம்ப்யூட்டர் மேல காட்டுற அக்கறையகூட எங்க மேல காட்டாம எங்கள இல்லத்துல நிராதரவா விட்டுட்டுப் போயிட்டாங்க எங்க புள்ளைங்க. அவங்கள பெத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுக்க நாங்க பட்ட பாட்டை நெனச்சுட்டா, உயிரைப் புரட்டும். இப்ப காலேஜ் புள்ளைங்க எல்லாம் வந்து, 'நாங்க இருக்கோம்'னு நாலு வார்த்தை அக்கறையா பேசுறதுதான், இப்ப எங்களுக்கு இருக்கற ஒரே ஆறுதல்..!" என்று கண் கசிந்தனர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள்!
நம்மிடம் பேசிய குழுவின் சீனியரும் மெஜுரா காலேஜ் மாணவியுமான செல்வராணி, "குழு சார்பா வருஷா வருஷம் இல்லங்கள்ல இருக்கற தாத்தா, பாட்டிகளுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்கறதும் நடக்கும். அப்போவெல்லாம் 'இத்தன பேரக் குழந்தைங்க முன்னால எங்களோட அறுபதாம் கல்யாணம் நடக்கறது, சந்தோஷமா இருக்கு'னு நெகிழ்வாங்க'' என்று சொல்லி தானும் நெகிழ்ந்தவர், நிறைவாக சொன்னது நெஞ்சில் நிற்கும் விஷயம். அது...
''ஒரு வருஷமா செயல்பட்டு வர்ற இந்தக் குழுவோட மொத்த உறுப்பினர்கள்ல 85% மாணவிகள்தாங்கறது பெருமைக்குரிய விஷயம். இப்படி ஒவ்வொரு வருஷமும் இதில் கல்லூரி மாணவிகளோட பங்களிப்பு அதிகமாயிட்டே வர்றதே, இந்தக் குழுவோட நோக்கம் பாதி வெற்றி அடைஞ்ச மாதிரிதான். ஏன்னா, பொறந்த வீடானாலும், புகுந்த வீடானாலும் பந்த பாசத்தை பலப்படுத்துறதும், வெட்டி விடறதும் பொண்ணுங்களான எங்க கையிலதானே இருக்கு?!"
|