நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்த போது, அன்று எங்கள் தமிழ் ஆசிரியை மாணவிகளின் திருத்திய விடைத்தாள்களை வகுப்பில் விநியோகித்து, அவரவர் செய்த பிழைகளைச் சுட்டிக் காட்டி, அதைத் தவிர்க்க வேண்டிய வழிகளை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாணவி, 'இராவணன் சிதையைத் தூக்கிச் சென்றான்' என்று எழுதியதைச் சுட்டிக்காட்டிய அவர், "சிதை என்பது எழுத்துப்பிழை என்றாலும், ஒரு வகையில் அதுவும் சரியே! ஏனெனில் இராவணன், சீதையைத் தூக்கிச் சென்றதன் மூலம் தனக்கான சிதையை (நெருப்பை), தானே சுமந்து சென் றான் என்றும் பொருள் கொள்ளலாம்!" என்று கூறி சுவாரஸ்யப்படுத்தினார். இத்தனை நாட்களாக 'அறுவை' என்று நாங்கள் நினைத்திருந்த தமிழ் வகுப்புகள், அன்றிலிருந்தே அறுசுவை வகுப்புகள் ஆனதை சொல்லவும் வேண்டுமோ?!
- கே.ஆர்.லட்சுமிராணி, மதுரை
இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி அனுபவங்களை எழுதி அனுப்பலாம்.
முகவரி 'ஃப்ளாஷ்பேக்',
அவள் விகடன், 757, அண்ணாசாலை,
சென்னை-600 002
|