கையில் பரிசையும், மனதில் வாழ்த்தையும் எடுத்துக் கொண்டு நான் அந்த திருமணத்துக்குக் கிளம்பியபோது, மனதுக்கு நிறைவான, நெருக்கமான ஒரு நாள் அன்று எனக்காக காத்திருக்கிறது என்பதை நான் அறியவில்லை.
'தாலி கட்டியதும் அட்சதை போடுவோம்... கூட்டம் தணிந்தால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம்... பந்தியை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோம்' என வழக்கமான மணவிழா நிகழ்ச்சி நிரலை என்று எண்ணி நான் காத்திருந்தேன். ஆனால், முறைப்படி தேவாரம் பயின்ற வித்தகர்களைக் கொண்டு, வைபவத்துக்குப் பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்து, கணீர் குரல்களில் பாடச் செய்து, தமிழ் முறைப்படி நடந்த சடங்குகள் 'சம்திங் ஸ்பெஷல்...' என்று என் ஆர்வத்தைப் பெருக்கிப் போட்டது அந்த நாள்.
மங்கல நாண் பூட்டியபின், அனைவரும் புடவைகளை சரிசெய்துகொண்டு புகைப்படத்துக்காக மேடை ஏறக் காத்திருக்க, மணமக்களே மேடையை விட்டு இறங்கி வந்து, ஒவ்வொருவரிடமும் வாழ்த்துக்களைப் பெற்றனர். அட்சதை அரிசி, மலர் கொண்டு அனைவரும் மணமக்களை மிக அருகில் வாழ்த்த முடிந்தது மிகவும் மகிழ்ச்சி. மேடை ஏற முடியாத வயதானவர்கள் நிறைய பேருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
மணமகன் வீட்டார், விநாயகர் அகவல், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருமந்திரம், முருகன் பாடல்கள்களை சிறுசிறு நூல்களாகத் தொகுத்து வெளியிட்டு, அதையே அனைவருக்கும் தாம்பூலப் பரிசாகத் தந்தனர். மணமகள் வீட்டாரோ, பூமி வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுத்து இயற்கையைப் பாதுகாத்து பூமியைக் காப்பாற்ற மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க அரிய யோசனைகள், நம் நாட்டின் முத்திரைகள், மாநிலங்கள், மாவட்டங்களின் பெயர்கள்... என நல்ல பல தகவல்கள் அடங்கிய புத்தகத்துடன், பசுமை சிரித்த தேக்கு, வேம்பு போன்ற மரங்களின் கன்றுகளையும் கை நிறைய தாம்பூலப் பரிசாகத் தந்தனர்.
இரு குடும்பங்களும் இணைகின்ற திருமண விழாவில், பல குடும்பங்களுக்கும் பயன் தரும் இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் நிறைய நடந்தன. அறுசுவை விருந்து மட்டுமல்ல; நம் ஐம்புலன்களுக்கும் விருந்து கிடைத்த திருப்தி!
'சமூக அக்கறையோடு இதுபோன்று புதுமையாக யோசித்து நம் வீட்டு திருமண விழாவிலும் நாம் வாழும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று மனதில் குறித்துக்கொண்டேன் நான்!
அப்போ நீங்கள்?!
- எம்.காந்திமதி கிருஷ்ணன், சென்னை-49
யார் சொன்னது?
|