" 'இன்னும் சில பொருட்கள் வாங்கி வச்சு, நம்ம கடைய கொஞ்சம் விரிவு படுத்தலாமே'னு கணவர்கிட்ட சொன்னப்போ, 'எதுக்கு ரிஸ்க்..?'னு அவர் தயங்கல. மாறா, அவங்க அண்ணன்கிட்ட அஞ்சாயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டு வந்து, நம்பிக்கையோட கடைக்கான பொருட்கள் வாங்கப் போனாரு.
ஆனா, அந்த அலைச்சல் அவர் கால் வலியை அதிகமாக்க, சோர்ந்து திரும்பி வந்தாரு. அவர் சிரமத்தைப் பார்த்து நானும் சரிஞ்சுடாம, 'நீங்க தனியா கஷ்டப்பட வேண்டாம். நானும் கடைக்கு வர்றேன்'னு சொல்ல, அது நல்ல யோசனைனு அவருக்கும் பட்டது" என்று சொல்லும் பாரதி, தன் கணவருடன் கைகோக்க, அவர்களின் புரிதலுக்குக் கிடைத்திருக்கிறது பலன்.
"ஆரம்பத்துல இந்தத் தொழிலோட அடிப்படைகள், நெளிவு, சுளிவுகள்னு எல்லாம் அவர் எனக்கு கத்துக் கொடுத்தார். வியாபாரம், கணக்கு வழக்குனு கடையில இருந்து அவர் பார்த்துக்க, வெளியில அலைஞ்சு சரக்கு எடுத்துட்டு வர்ற வேலைகள நான் பொறுப்பேத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையில அயராம உழைச்சோம். வெற்றியை நெருங்கினோம். இடையில எங்களுக்குப் போட்டியா சில கடைகள் முளைச்சுது. ஆனா, கொஞ்ச நாள்லயே... 'தொடர்ந்து நடத்த முடியல'னு, மிஞ்சின பொருட்களை எங்ககிட்டயே வித்துட்டுப் போனதும் நடந்திருக்கு" என்றவர்,
"புத்தகக் கடைக்கு நிரந்தரமான கஸ்டமர்கள் கிடைக்க, அந்தத் தெம்புலயே அதே இடத்துல 'ஃபேன்ஸி ஸ்டோர்'னு ஒண்ணையும் சேர்த்துக்கிட்டோம். இப்போ குண்டூசியில இருந்து செல்போன் வரை எல்லா பொருட்களுமே இங்க கிடைக்குது. நியாயமான விலை, தரமான பொருட்கள், தளராத உழைப்பு... இது மூணும்தான் இந்த ஆறே வருஷத்துல எங்க கடைய இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. இப்போ சொந்தமா ரெண்டு கார் வாங்கியிருக்கோம். பதினஞ்சு பேர் எங்ககிட்ட வேலை பார்க்கறாங்க" எனும்போதே பெருமிதத்தில் கண்ணீர் மல்குகிறார் பத்தாவது வரையே படித்திருக்கும் பாரதி.
" 'ஊனமான ஒருத்தனையா கல்யாணம் கட்டிக்கப் போறே?'னு அப்ப எதிர்ப்பு தெரிவிச்சவங்கள்லாம் இப்ப மூக்குல விரல் வைக்கற அளவுக்கு வாழ்ந்துகிட்டிருக்கோம். இந்த வெற்றிக்கு எல்லாம் ஊன்றுகோல் என் கணவர்தான்!"
- வெற்றிக்கு விதையிட்ட அன்பையும், புரிதலையும் குறிப்பிட்டு முடித்தார் பாரதி!
|