மதுரை, அமெரிக்கன் கல்லூரி ஆடிட்டோரியம்...
"ஆறறிவு இருந்தாலும் 'அது... இது...' என்று சுட்டுப் பெயரால் அறியப்படும் 'அஃறிணைகள்' நாங்கள். எங்களின் ஓலங்கள் மனித சப்தங்களுக்குப் பொருளற்றவை..."
- வலி சுமந்த வரிகளுடன் விரிகிறது மூன்றாம் பாலினம் பற்றிய 'அஃறிணைகள்' ஆவணப்படம்.
'லிவிங் ஸ்மைல்' வித்யா, ஏஞ்சல் கிளாடி... ஆணாகப் பிறந்து உடல், மன, மருத்துவ, சமூகப் போராட்டங்களுக்குப் பின் தங்களின் விருப்பப்படி பெண்ணாக மாறிய இந்த இரு திருநங்கைகளின் வாழ்க்கையைத்தான் பேசுகிறது படம். படம் முடிந்த பின் பேசினார்கள் அந்த திருநங்கைகள்.
"எங்களின் சமூக அங்கீகாரத்துக்கான போராட்டங்கள் வலி நிறைந்தவை. அப்படி பல போராட்டங்களின் பலனாக, சமீபத்தில் ' 'திருநங்கை' என்ற அடையாளத்துடனேயே கல்லூரிகளில் படிக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த ஆணையின்படி, முதல் முதலாக கல்லூரி விண்ணப்பத்தில் 'பாலினம் திருநங்கை' என்று பூர்த்தி செய்து, இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படிக்கிறேன் நான்... பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலாளிகள் என எங்களைப் பற்றிய சமூகத்தின் பிம்பம் மாறும் என்பதற்கான நம்பிக்கை சாட்சியாக..!" என்றார் ஆஞ்சல் கிளாடி!
அதேபோல இன்னொரு நம்பிக்கைதான், 'லிவிங் ஸ்மைல்' வித்யா. தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் 2008-ல் வெளியிடப்பட்ட இவரின் 'நான் வித்யா' புத்தகம், அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான இரண்டாவது புத்தகம். இவரின் அந்த புத்தகம் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், மதுரை, அமெரிக்கன் கல்லூரியிலும் தமிழ் பாடத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினிமா, இலக்கியம், நாடகங்களில் ஆர்வமுள்ள வித்யா, இப்போது இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர்.
|