ஆசையுடனும், அன்புடனும் மணமுடித்த துணையை சில அற்ப காரணங்களுக்காக பிரிந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை, இன்றைய சமூகத்தில் பலருக்கும் சாபம். இப்படி சபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகியபடியேதான் இருக்கிறது. அதேபோல தவறான சில பழக்க வழக்கங்களாலும், தற்போதைய உணவு முறைகளாலும் வாழ்க்கையின் அரிய பேறாக கருதுகிற குழந்தைப்பேறு கிட்டாமல் போகும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இந்த இரண்டு வகையினருக்கும் ஏற்றதொரு தீர்வைத் தருகிறார் திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர். வரம் தரும் தெய்வமாக இருப்பதுடன் வருகிற பக்தர்களின் நோய்களையும் தீர்க்கும் வைத்தியநாதராகவும் விளங்குகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் இருக்கிறது இந்த திருக்களம்பூர். ஊரின் மையமாக அமைந்திருக்கிறது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில். எதிரே பாழடைந்த நிலையில் இருக்கிறது இன்னுமொரு சிவாலயம். 'எதற்கு ஒரே இடத்தில் இரண்டு சிவலாயங்கள்?' என்ற கேள்விக்கு விடையாக, கொஞ்சம் வரலாற்றை புரட்டுவோம்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், குதிரையில் காட்டுவழியாக வந்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் அழகிய பிள்ளையார் கோயிலும், அதை ஒட்டி அழகிய வாழைத்தோப்பும் இருந்ததைக் கண்டு அதிசயித்திருக்கிறார். 'இந்த அடர்ந்த காட்டில் இவ்வளவு நேர்த்தியாக இதைப் பராமரிப்பவர் யார்?' என்று தெரிந்து கொள்ள வாழைத் தோப்புக்குள் குதிரையைச் செலுத்தினான் மன்னன். அப்போது ஓரிடத்தில் குதிரை குளம்பு பட்டதும் பெரும் சத்தம் கேட்கவே, இறங்கிப் பார்த்தான். சிவலிங்கம் ஒன்று தலையில் காயம்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. இதைக் கண்ட மறுகணமே அவனுடைய பார்வை பறிபோனது. தவறை உணர்ந்த மன்னன் மனமுருக மன்னிப்பு கோரி நிற்க, முதியவர் வடிவில் வந்து மூலிகை பிழிந்து, பார்வை கிடைக்கச் செய்தார் இறைவன்.
|