"எங்களுக்கு மூணு புள்ளைங்க. என் வீட்டுக்காரர் உசிலம்பட்டியில மளிகைக்கடை வச்சிருந்தாரு. கடை நஷ்டத்துலயே ஓட, வீட்டுல வறுமை. 'நான் பெங்களூருல ஒரு கடை போடறேன்'னு முடிவெடுத்து, அங்க போனாரு. மாசா மாசம் அவர் பணம் அனுப்ப, நானும் புள்ளைங்களும் பசி இல்லாம சாப்பிட முடிஞ்சது. திடீர்னு, 'நான் ஊருக்கே வந்துடறேன்'னு அவர் சொல்ல, மறுபடியும் வறுமையில வதங்கற நிலை வந்துடுமோனு பயந்து, 'வேண்டாங்க'னு எவ்வளவோ அவர்கிட்ட கெஞ்சினேன். அவர் கேட்கவே இல்ல.
எங்களுக்குள்ள தொடர்ந்து சண்டை நடந்துகிட்டே இருக்க... ஒரு கட்டத்துல, விரக்தியில குழந்தைங்களைக்கூட நெனைக்காம, கடையில இருந்த காஸ்டிக் சோடாவை எடுத்துக் கரைச்சுக் குடிச்சுட்டேன். ஒரு வருஷம் ஆஸ்பத்திரி யில கிடந்தேன். என் வீட்டுக்காரர்தான் ஒரு தாய் மாதிரி என்னை கவனிச்சிக்கிட்டாரு. 'எவ்வளவு முட்டாள்தனமான முடிவெடுத்துட்டேன்'னு இன்னிக்குவரைக்கும் நான் வருந்தாத நாள் இல்ல.
இப்போ என் வீட்டுக்காரர், இங்க சென்னையில ஒரு கடை வைக்க, நிறைவா வாழறோம். வறுமையில வாடி, தற்கொலை செஞ்சுக்க நினைக்கறவங்களுக்கு நான் ஒரு பாடம்!"
சாரதா, அயப்பாக்கம்
"எனக்குச் சொந்த ஊரு தூத்துக்குடி. கூட்டுக் குடும்பமா இருந்தோம். காய்கறியில இருந்து துணிமணி வரைக்கும் எல்லாத்தையும் இவர் தம்பிகிட்ட கேட்டுதான் வாங்கணும். கேட்டாலும், உடனே வந்துடாது. அன்னிக்கு, என் ஏழு மாசக் குழந்தைக்கு தாய்ப்பால் பத்தல. அதனால, 'பால் பவுடர் வேணும்'னு அவர் தம்பிகிட்ட சொன்னேன். 'அண்ணன்கிட்ட கொடுத்து விடறேன்'னு சொல்லிட்டுப் போனாரு. வெறுங்கையோட வந்த என் வீட்டுக்காரர்கிட்ட 'பால் பவுடர் எங்க?'னு கேட்க, 'தம்பி எதுவும் சொல்லலையே'னு சொன்னாரு. பாலுக்காக அழுதுட்டு இருந்த குழந்தை, டாய்லெட்ல இருந்த ஆசிட் பாட்டிலை பாலுனு நினைச்சு... எடுத்துக் கொடுக்கச் சொல்லி அழுக, அந்த வேதனையில அந்த ஆசிட்டை நான் குடிச்சுட்டேன். மூணரை வருஷம் ஆஸ்பத்திரியில இருந்தேன். ரண வேதனை. 'இப்படி ஒரு அவசர முடிவெடுத்ததுக்கு பதிலா, விஷயத்தை எங்கிட்ட எடுத்துச் சொல்லி புரிய வச்சிருந்தா, நல்ல தீர்வா எடுத்திருக்கலாம்ல'னு என் வீட்டுக்காரர் எங்கிட்ட சொன்ன வார்த்தைகள், 100% உண்மை!
அந்தப் பிரச்னைக்குப் பிறகு சென்னைக்கு வந்துட்டோம். அவரு இங்க தனியா கடை வச்சுருக்கார்."
ஜெகதீஸ்வரி, சென்னை
"காதலிச்சு, வீட்டை எதிர்த்து கல்யாணம் கட்டிட்டேன். அவர், ஏற்கெனவே கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைங்களுக்கு தகப்பன்னு தெரிஞ்சதும், அதிர்ந்துட்டேன். ஆனாலும் பிரிய மனசு வராம, கூடவே வாழ்ந்தேன். ஒரு கட்டத்துல அவர் என் மேல சம்பந்தமே இல்லாம சந்தேகப்பட ஆரம்பிக்க, நரகமாகிப் போன அந்த வாழ்க்கைய விட்டுட்டு, எங்க அப்பா, அம்மாகிட்ட மனசொடிஞ்சு போய் அடைக்கலமானேன். காலம் போகப் போக, 'உனக்குனு ஒரு வாழ்க்கை வேணும்'னு அவங்க என்னை தேற்றி, வேற ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க. கடைசி நேரத்துல அது நின்னு போயிடுச்சு. 'என்ன வாழ்ந்து என்ன பண்ணப் போறோம்'னு வெறுத்து ஆசிட்டை குடிச்சுட்டேன்.
என்னை ஆஸ்பத்திரில சேர்த்து வைத்தியம் பார்க்க, எட்டு மாசம் எச்சில்கூட முழுங்க முடியாம அவஸ்தைப்பட்டேன். இங்க இருக்கற டாக்டர்கள் சிகிச்சையோட, மனதைரியமும் தந்தாங்க. 'மத்தவங்களுக்காக எதுக்கு நாம வாழணும், சாகணும்? நமக்காக வாழ்வோம்'னு பாதியில நிறுத்தின படிப்பை தொடர்ந்து, டிகிரி முடிச்சேன். இனி விதி என்னை எவ்வளவு துரத்தினாலும், எதிர்த்து சமாளிப்பேன்!"
|