திருமணம் செய்து கொள்ளாத ஸ்வர்ணலதா... 3 சகோதரர்கள், 6 சகோதரிகள் என்று மிகப் பெரிய அளவில் இருந்த உறவுகளோடுதான் வாழ்ந்து வந்தார். கடைசி வரை அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வந்தார்!
அவருடன் சமகாலத்தில் பயணித்த அவரது சகாக்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டார்கள்...
"அவங்க இறந்துட்டாங்கங்கிறதை நம்பறதுக்கே பல வருஷங்கள் ஆகும். அவங்க எப்படி இறக்க முடியும்..? 'பூங்காற்றிலே என் சுவாசத்தை தேடி பாருங்க'னு சொல்ற மாதிரி இருக்கு, அந்த பாட்ட இப்ப கண்ண மூடி கேட்கும்போது..."
- சோகம் படர்ந்த முகத்துடன் உணர்வுப் பூர்வமாகக் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ்...
"ரொம்ப யுனிக்கான வாய்ஸ் அவங்களோடது. அதுல ஒரிஜினாலிட்டி இருக்கும். ரொம்ப எளிமையானவங்க. அதிர்ந்துகூட பேசமாட்டாங்க. ஆனா, மியூசிக் டைரக்டர் நூறு சதவிகிதம் திருப்தியாகுற வரைக்கும் பாடுவாங்க. அவங்களோட அந்த மரகத குரலுக்காகவே அவங்க இன்னும் இன்னும் பல வருஷங்கள் உயிரோட இருந்திருக்கணும். துரதிஷ்டசாலிகள், நாமதான்!" என்று எல்லோரின் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் விழியோரம் துளிர்த்த கண்ணீர் வழிய முடித்தார் ஸ்ரீநிவாஸ்.
"அவங்க வாய்ஸ்ஸோட ஸ்பெஷாலிட்டி, அந்த குரல யாராலும் காப்பி அடிச்சு பாட முடியாது. அவங்க பாட்டுல சங்கதிகள் அத்தனையும் அவ்வளவு பெர்ஃபெக்டா இருக்கும். தன் குரலால, அவங்க பாடுற பாட்டுக்கே ஒரு புது கலர் கொடுப்பாங்க. எவ்வளவு சிரமான பாட்டா இருந்தாலும், சர்வசாதாரணமா பாடுவாங்க. ஆடாம, அசையாம பாடுவாங்க. ஆனா, பாட்டுக்குள்ள ஜீவன கரைச்சு ஊத்துற மாதிரி இருக்கும். ஸ்வர்ணம்னா தங்கம்னு அர்த்தம். பேருக்கு ஏத்தமாதிரி தங்கமாவே இருந்தாங்க. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கறத பார்த்தாலே அந்த சிரிப்பு நமக்கும் ஒட்டிக்கும். இனிமே அந்தச் சிரிப்பை எங்க போயி பார்க்குறது..?" என்று விடை காண முடியாத கேள்வியுடன் முடித்தார் ஹரிணி.
"நான் சினிமாவுக்கு பாட வந்ததுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்ததே ஸ்வர்ணலதா சேச்சிதான். அவங்க பாடின 'நேற்று இல்லாத மாற்றம்', ரங்கீலா படத்துல பாடின 'ஹைரமா'... இந்த ரெண்டு பாட்டும்தான் 'நாமளும் பாடணும்'னு பெரிய ஆசையை எனக்குள்ள உண்டு பண்ணுச்சு. சினிமா பேக்கிரவுண்ட் இல்லாத என்னை மாதிரி நிறைய பேருக்கு... அவங்க பெரிய முன்னுதாரணம்.
நேரு இறந்தப்ப கண்ணதாசன் எழுதினாராம்... 'சாவே, உனக்கு ஒரு சாவு வந்து நேராதா?'னு. 'ஐந்து மொழிகள்ல ஆறாயிரம் பாடல்கள் பாடின எங்க சேச்சி இப்போ இல்லையே'ங்கற ஆதங்கத்தோட அதையேதான் சாவைப் பார்த்து நான் இப்போ கேக்கறேன்" என்று ஆற்றாமை யுடன் பகிர்ந்துகொண்டார் தன் சோகத்தை, இளம் பாடகி சின்மயி!
சாகாவரம் பெற்றது அவரது குரல். அது பூங்காற்றில் எப்போதும் இசையாக கலந்திருக்கும் பாடல்களாக. அந்த அழகிய ஆத்மா உறங்கட்டும் அமைதியாக!
|