மொத்தத்தில், நம் மாநிலத்தின் இந்த கருக்கலைப்பு 'ரெக்கார்ட்', சமூக முன்னேற்றத்தின் குறியீடு இல்லை; சமூக சிந்தனையை மாற்ற வேண்டியதற்கான எச்சரிக்கை மணி!" என்று சூடான வார்த்தைகளில் விளக்கினார் தமிழிசை சௌந்தரராஜன்.
"குடும்ப சூழ்நிலை, குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை, போதிய வருமானம் இல்லை என்று இப்படி பலவித காரணங்களால் அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொண்டால், சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை எந்த அளவில் பாதிக்கப்படும்?" என்ற கேள்வியை மனநல மருத்துவர் பத்மாவதியிடம் முன் வைத்தோம்.
"சராசரியாக இந்தியாவில் வருடத்துக்கு 20,000 மரணங்கள் கருக்கலைப்பினால் உண்டாகின்றன. இருந்தாலும் இன்றும் இந்த விஷயத்தை அலட்சியமாகத்தான் கையாளுகிறோம். பாதிக்குப் பாதி பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். அதனால்தான் 1951-ல் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள் இருந்த தமிழ்நாட்டில், 2001-ல் 1000986 என்றளவில் மாறியிருக்கிறது அந்த விகிதம். இது நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் போகிறது..." என்று வேதனைப்பட்ட பத்மாவதி,
"ஒரு பெண் இரண்டு, மூன்று கருக்கலைப்பு செய்து கொண்டால், முதலில் அவருக்குள், 'ஐயோ, என் சந்ததியை நானே அழிக்கிறேனே' என்கிற குற்ற உணர்வு வரும். அது அவர் மன நிம்மதியை பாதிக்கும். அடிக்கடி கருக்கலைப்பு செய்தால் அனீமியா, உடலில் தெம்பு குறைவு ஏற்பட்டு அது மன அழுத்தமாக மாறும். அதனால் இந்த மாதிரியான சூழ்நிலைக்கு ஒரு பெண்ணை தள்ளாமல் இருப்பது அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பொறுப்பு" என்று அறிவுறுத்தினார் டாக்டர் பத்மாவதி.
"கருக்கலைப்பால் உண்டாகும் உடல் நல கோளாறுகள் என்னென்ன?" என்ற கேள்வியுடன் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்தை நாம் சந்திக்க... "அபார்ஷன் செய்து கொள்ளத் துணிபவர்கள், அதனால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் பற்றி அறிந்திருப்பதில்லை. சர்ஜிக்கல் அபார்ஷன் செய்யும்போது அனஸ்தீஸியா கொடுப்பார்கள். அடிக்கடி இப்படி கொடுக்கும்போது அதனால் சில தொற்றுக்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதுமட்டுமில்லை, கருப்பையே பாதிப்படையவும் கூடும். கருவழிப் பாதையில் புண் உண்டாகும்; அதிக ரத்தப்போக்கு ஏற்படும்; சில சமயங்களில் உடலுக்குள் செல்லும் தொற்று, விஷமாவதற்கும் வாய்ப்பு உண்டு" என்ற டாக்டர்,
"இத்தனை பிரச்னைகள் இருப்பதால், முதல் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள், அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை சரியான கருத்தடை முறைகளை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். இன்று கருத்தடை மாத்திரைகள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை போட்டுக்கொள்ளும் ஊசிகள், காண்டம், காப்பர்-டி என பலவிதமான கருத்தடை வழிகள் இருக்கும்போது கருக்கலைப்பை நாடுவதை தவிர்ப்பதுதான் உயிர் காக்கும் வழி. இதற்கு கணவர்களின் ஒத்துழைப்பும் முக்கியம். அரசும், மீடியாக்களும் கருத்தடை சாதனங்கள் பற்றி அதிக விளம்பரம் கொடுப்பது காலத்தின் அவசியம்!" என்று தீர்வுக்கான வழிகள் காட்டினார் டாக்டர் ஸ்ரீகலா.
கரு... உயிரும் உணர்வும் கனவுகளும் நிறைந்த ஜீவன்! தாய்மையோடு காப்பாற்றினால்தான் ஆரோக்கியமான சந்ததி உருவாகும்... யோசியுங்கள்!
|