Published:Updated:

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

Published:Updated:

'வியட்நாம் பத்மினி'யின் வியக்க வைக்கும் ஸ்வீட் பிஸினஸ்
இரா.கோகுல் ரமணன்
விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...
விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...''


விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

"வியட்நாம்ல பிறந்து வளர்ந்து, தமிழ்நாட்டுக்கு மருமகளா வந்த லேடி ஒருத்தவங்க, நம்ம ஊரு கை மணம் பழகி, சமையல்ல அசத்துறாங்க. குறிப்பா, அவங்களோட 'ஹோம் மேட் ஸ்வீட்ஸ்', டேஸ்ட்னா டேஸ்ட்... அப்படி ஒரு டேஸ்ட்! தீபாவளி, விசேஷங்கள்னா அவங்க வீடு ஆர்டர்கள்ல பிஸியாகிடும். அதான், இந்த தீபாவளிக்கு இப்போவே ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்துட்டு வந்துட்டேன்!"

- மதுரை வாசகி ஒருவர் புகழுரையாற்றிவிட்டுப் போக, 'வியட்நாம் டு மதுரை, ஹோம் மேட் ஸ்வீட்ஸ், ஆர்டர்கள், சுவை அசத்தல்கள்' என்று அவர் குறிப்பிட்ட ஹின்ட்ஸ் அனைத்தும் தூண்டியது நம்மை. போய் நின்றோம்... மதுரை, அண்ணாநகரிலிருக்கும் பத்மினி என்கிற ஃபொம்மான் வீட்டில்!

"வணக்கம்... வாங்க வாங்க!" என்று தமிழோடும் பண்போடும் நம்மை ஃபொம்மான் வரவேற்றதே அழகு!

"எங்க அப்பா முருகப்ப செட்டியார், ஒரு தமிழர். தொழிலுக்காக கோட்டையூர்ல இருந்து வியட்நாம் போன எங்கப்பா, வியட்நாம் குடிமகளான எங்கம்மாவை கல்யாணம் பண்ணிட்டார். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் வியட்நாம்தான். அது, வியட்நாம் போர் உச்சத்துல இருந்த சமயம்... குடும்பத்தோட நாங்க தமிழ்நாட்டுக்கு வந்துட்டோம். அப்போ எனக்கு வயசு பதினெட்டு!" என்ற அந்த வியட்நாம்-இந்திய கேர்ளுக்கு பிடித்திருந்ததா நம் நாடு?!

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

"சுத்தமா பிடிக்கல. 'இது சரிப்படாது. நான் பாரீஸ்ல இருக்கற பாட்டி வீட்டுக்குப் போயிடறேன்'னு எங்க அப்பா, அம்மாகிட்ட கெஞ்ச... 'சரி, விசா கிடைக்கட்டும்'னு என்னை சமாதானப்படுத்தினவங்க, இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயம் எனக்கே தெரியாது. அதிர்ந்துட்டேன் நான்" என்று ஃபொம்மான் நிறுத்த, தொடர்ந்தார்... கணவர் கல்யாணசுந்தரம்.

"அதுக்கு மேல நான் அதிர்ந்துட்டேன். பொம்மைக்கு ஃப்ராக் போட்டுவிட்டது கணக்கா நின்னுகிட்டு, 'கெக்க பிக்கே'னு ஏதோ ஒரு மொழி பேசிக்கிட்டு, சாதத்தைக்கூட குச்சிய வச்சு குத்தி குத்தி சாப்பிட்ட இவங்களைப் பார்த்தவொடனே, 'வெளிநாட்டுப் பொண்ணும் வேணாம், ஒண்ணும் வேணாம்... ஆள விடுங்கடா சாமீ'னு கதறிட்டேன். ஆனாலும், பெரியவங்க எல்லாம் அவங்க முடிவுல உறுதியா நின்னுட, மிஸ். வியட்நாம், இந்த காரைக்குடிக்காரனுக்கு மனைவி ஆயிட்டாங்க!" என்று ரசிக்கத்தக்க கதை சொன்ன கணவரைத் தொடர்ந்தார் ஃபொம்மான்.

"கல்யாணத்தப்போ என் பெயரை 'பத்மினி'னு மாத்தினாங்க. கலாசார வேறுபாடுகள் நீங்கி, புரிதலோட நாங்க வாழ்க்கையைத் தொடங்க... என் மாமியாரும், நாத்தனாரும் ரொம்பவே மெனக்கெட்டாங்க. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா மொழியையும், பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுத்தாங்க. விறகு அடுப்புல கண்ணுல தண்ணி வர ஊதி ஊதி அவங்க சமைக்கும்போது, 'ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா..?'னு நான் போய் நிக்க, 'அதெல்லாம் வேணாம்மா'னுட்டாங்க. 'இல்ல... உங்க காரைக்குடி ரெசிபி எல்லாம் சூப்பரா இருக்கு. நானும் கத்துக்க ஆசைப்படறேன்'னு கேட்க, அவங்களுக்கு சந்தோஷம் தாங்கல! உடனே எனக்காக கேஸ் ஸ்டவ் வாங்கி, கடுகு, மிளகுல இருந்து பாடத்தை ஆரம்பிச்சாங்க!" என்ற பத்மினிக்கு (!), பிறகுதான் கை வந்திருக்கிறது பக்குவம்!

"குழம்பு, கூட்டு, பொரியல், அவியல், வறுவல், மண்டி, பச்சடி, கிச்சடினு அவங்க ரெண்டு பேரும் சுவாரஸ்யமா சொல்லிக் கொடுக்க, சமையல்ல இவ்வளவு வகையானு பிரமிச்சுப் போயிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அதை எல்லாம் கத்துக்கிட்டு, ஒரு கட்டத்துல அவங்கள உட்கார வச்சு சமைச்சுப் போட, அசந்துட்டாங்க எங்க வீட்டுல. சமையல்ல என் ஆர்வம் விரிஞ்சுட்டே போக, 'உங்க ஏரியா ஸ்பெஷல் சமையல் என்ன?', 'இந்த பலகாரம் எப்படி பண்றது?'னு சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் ரெசிபி கேட்க ஆரம்பிச்சுட்டேன். டி.வி., பத்திரிகைனு 'சமையல் ஸ்பெஷல்'கள விடறதில்ல. இப்படியே கத்துக்கிட்டு, காரைக்குடி கை மணம், சௌராஷ்ட்ரா பன் அல்வா, விருதுநகர் பரோட்டா, துளி எண்ணெய் சேர்க்காத கோழி சாதம், நார்த் இண்டியன் சிக்கன் ரோல்னு எல்லா ஏரியாவுலயும் கிச்சன் எக்ஸ்பர்ட் ஆனேன்!" என்பவர், தன் அந்த ஆர்வத்தை தொழிலாக்கியதைப் பற்றித் தொடர்ந்தார்.

"என்னோட ரெண்டு பசங்களும் வளர்ந்த பிறகு, நாங்க மதுரையில செட்டில் ஆனப்போ நிறைய நேரம் கிடைச்சது. ஏற்கெனவே எங்க தெருவெல்லாம் என் கை மணம் பிரபலம். ஏதாவது விசேஷம்னா, 'பத்மினி... ஏதாச்சும் ரெசிபி சொல்லுங்களேன்'னு வந்து நிப்பாங்க. லேடீஸ் கிளப்ல மெம்பரான பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஒருத்தவங்க, 'கிளப்ல ஒரு ஃபங்ஷன்... மூணு கிலோ ஸ்வீட்ஸ் பண்ணிக் கொடுக்க முடியுமா?'னு கேட்க, நட்புக்காக பண்ணிக் கொடுத்தேன். கிளப் மெம்பர்கள் எல்லாம் டேஸ்ட்ல ஆல் அவுட் ஆயிட, 'இனி எங்க கிளப் நிகழ்ச்சிகளுக்கு நீங்கதான் ஸ்வீட் கான்ட்ராக்ட். கூடவே, எங்க வீட்டுக்கும் ஸ்வீட்ஸ் செஞ்சு தர முடியுமா?!'னு ஆளாளுக்கு கிளம்பி வந்து கேட்க, அதுவரை அதை ஒரு தொழிலா பண்ணலாங்கற யோசனையே இல்லாம இருந்த நான், 'இது ஏன் இவ்வளவு நாளா நமக்குத் தோணா போச்சு?!'னு சட்டு 'சரி' சொல்லிட்டேன்.

பரபரனு கையும் மனசும் வேலை பார்க்க, மூணு மணி நேரத்துல பத்து கிலோ ஸ்வீட்ஸை செஞ்சு அனுப்பினேன். அன்னிக்கே ஸ்டாக் காலி! 'சூப்பர்பா'னு சுவை வாய் வழியா பரவ, அதுவே எனக்கு செலவில்லாத விளம்பரமாகிப் போச்சு. கூடவே, என் கணவரும், பிள்ளைங்களும் அவங்க அலுவலக வட்டத்துல இருந்தும் ஆர்டர்கள் வாங்கிட்டு வர, மளமளனு லாபம் வந்துச்சு" என்றவர், அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தொழிலில் இன்னும் மெருகேற்றியிருக்கிறார்.

" 'அம்மா... கஸ்டமருக்கு ருசியா கொடுத்தா மட்டும் போதாது. சுத்தமான, நேர்த்தியான பேக்கிங்லயும் கொடுக்கணும்'னு என் மூத்த பையன் சொல்ல, பேக்கிங் கவர் ஏற்பாடு பண்ணினதோட, 'கே.பி.எஸ். ஹோம் ஸ்வீட்ஸ்'னு பிராண்ட் நேமும் வச்சோம். அந்த மெனக்கெடலுக்கு பலனா, பெரிய நிறுவனங்கள் விசேஷ தினங்கள்ல அவங்க பணியாளர்களுக்கு கொடுக்க ஐம்பது கிலோ, நூறு கிலோனு எங்கிட்ட ஸ்வீட்ஸ் ஆர்டர் பண்ணினாங்க. வேலை பளு அதிகமாக, பழக்கமான ரெண்டு பேரை உதவிக்கு வச்சுக்கிட்டேன். ஆறு வருஷத்துக்கு முன்னால மூணு கிலோவுல ஆரம்பிச்ச பிஸினஸ், இப்போ ஆயிரம் கிலோவுக்கு மேலயும் ஆர்டர் வருது!" என்று சொல்லும் பத்மினியின் வார்த்தைகளில் பெருமிதம்!

திகட்டவே திகட்டாத செவன் கப் ஸ்வீட்ஸ், கேஸிவ் பர்ஃபி, லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, கலா கன்த், மைசூர்பா, அல்வா, கோக்கனட் பர்ஃபி, குலாப் ஜாமுன், வியட்நாம் பன்கேக்... இதெல்லாம் 'பத்மினி ஸ்பெஷல்' அயிட்டம்ஸ்!

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...

"எனக்கு லாபம் அதிகம் வேண்டாம். 'பத்மினி ஸ்வீட்ஸ் சூப்பர்'ங்கற நிரந்தர பெயரும், நிறைவும் போதும். அதனால பண்டிகை தின ஆர்டர்களை நிறைய வாங்கி குவிச்சுட்டு, பரபரப்புல பக்குவம் மாறிப்போயிடக் கூடாதுங்கறதால, விசேஷ தினங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னாடியே ஆர்டர்களை நிறுத்திடுவேன். இப்போ தீபாவளி ஸ்வீட்ஸ் பிரிப்பரேஷன்ல நான் பிஸி!" எனும் 'வியட்நாம்' பத்மினியின் சமையலறையில் ததும்புகிறது இனிப்பும் துடிப்பும்!

விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...
-படங்கள் ஜெ.தான்யராஜு
விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...
விளையாட்டா கத்துக்கிட்டேன்... வியாபாரமா மாத்திக்கிட்டேன்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism