இப்படியெல்லாம் செய்கிறபோது 'சற்று படுத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாமே' என்று மனது நினைக்கும். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்... தவறில்லை. ஆனால், ஒரே பக்கமாக படுத்த நிலையில் இல்லை. கொஞ்ச நேரம் வலது பக்கம், அடுத்து கொஞ்ச நேரம் இடது பக்கம் என்று படுத்து அழற்சியைப் போக்கிக் கொள்ளலாம்.
ஒருவேளை நிமிர்ந்த நிலையில் படுத்து, அதனால் முதுகில் அதிகமாக வலி ஏற்படுகிறது என்றால், அதற்கும் வழியிருக்கிறது. சுகப்பிரசவத்துக்கான பயிற்சிகளில் நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கனமான விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் மடக்கி முட்டிப் போட்டு, உள்ளங்கைகள் இரண்டையும் தரையில் ஊன்றிக் கொண்டு (படம் 1), மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். இதனால் முதுகில் இருக்கும் கூடுதல் எடை குறையும்.
இப்படிச் செய்வதை கடினம் என்று உணர்ந்தால், மாற்றுப் பயிற்சியாக கைப்பிடி இல்லாத நாற்காலியில், நாற்காலியின் சாய்வு பகுதியில் உங்கள் மார்பு பகுதி வருமாறு சிறிது நேரம் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் (படம் 2).
அடுத்து தோள், கழுத்து, கால்கள், தலை பகுதிகளில் அதிக அழுத்தம் தராமல், மசாஜ் தரும் வகையில் தசைப் பகுதிகளைப் பிடித்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின், தசைகளின் இறுக்கம் குறைவதோடு... நீங்களும் ரிலாக்ஸ் ஆவீர்கள்.
வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுகூட ஒருவித ரிலாக்ஸேஷன்தான். அதோடு கடைகளில் கிடைக்கும் ஒரு ரூபாய் வாட்டர் பாக்கெட்டை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, உடல் முழுக்க ஒத்தடம் தரலாம்.
இவையெல்லாவற்றையும் மீறியும் வலி ஏற்படலாம். அது சிறிது நேரமே நீடிக்கும். அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி உங்களுக்கு முழு ஆறுதல் தரும். இதுவும் நாம் ஏற்கெனவே செய்த பயிற்சிதான். ஆனால், இப்போது மூச்சு விடுவதில் சிறிது சிரமம் இருக்கும் என்பதால் மூச்சை அதிகமாக உள்ளிழுக்கவோ, வெளியே விடவோ வேண்டாம். எனவே, முதலில் சாதாரணமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடுங்கள் போதும்.
அப்படியும் மூச்சிரைப்பு அதிகமாக இருப்பதாகத் தோன்றினால் சற்று கூடுதலாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம். தயவுசெய்து எந்த நேரத்திலும் மூச்சை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டாம். உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதும் சாதாரணமாகவே இருக்கட்டும்.
உங்கள் மூச்சை அதிகமாக உள்ளிழுத்து வெளியே விடும் நேரம் ஒன்றும் இருக்கிறது. அதைப் பற்றி... அடுத்த இதழில் சொல்கிறேன்!
|