"என் அப்பா, கௌரவமான அரசு உயர் பதவியில் 36 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இது நாள் வரை உடல் நலப் பிரச்னைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர், இப்போது 'அது பண்ணுகிறது... இது படுத்துகிறது' என்று களேபரம் செய்கிறார். ஏராளமான டெஸ்டுகளுக்குப் பிறகு, 'உடல்நல பாதிப்பு ஒன்றுமில்லை' என்று தெரிந்தபோதும், நம்ப மறுக்கிறார். என்ன பிரச்னை அவருக்கு?"
டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை
"வருடக்கணக்கில் பதவி, அந்தஸ்து, மரியாதை என்றே வளைய வந்தவர்கள், அதை இழக்கும்போது ஏற்படும் இயல்பான மனநல பாதிப்புதான் இது. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression) எனப்படும் இந்த வயதானோரின் மனக்கவலை, அவர்களை பீடித்த அல்லது அப்படி அவர்களாக கற்பித்துக் கொள்ளும் வெறுமையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களால் உணரப்படுகிறது.
இதுவே... மத்திம வயதுடையவர்கள் தங்களது உடல் அவயங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பீதியைக் கிளப்பி, அவற்றைத் தீர்மானமாக நம்பும் மனநல பாதிப்பை, சொமோட்டோபோஃர்ம் டிஸ்ஆர்டர் (Somatoform Disorder) என்கிறோம்.
நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள். அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு 'சைக்கோ தெரபி' எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.
மரபுசார் காரணங்கள், தனிப்பட்ட ஆளுமை சார்புள்ள காரணங்கள், மூளையில் உள்ள முக்கிய ரசாயனங்களில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் என பல அடிப்படையான விஷயங்களோடு சம்மந்தப்பட்டவரின் குடும்பச் சூழல், உண்மையான உடல்நிலை இவற்றையும் பரிசீலித்து மனநல மருத்துவர் சிகிச்சை அளிப்பார். நான்கு முதல் எட்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். இதற்கு குடும்பத்தாரின் பொறுமையான அணுகுமுறை அவசியம்.
|