Published:Updated:

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

Published:Updated:

ஆட்கள் தேவை!
'கெம்பா'கார்த்திகேயன்
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன் வாழ்க்கை உன் கையில்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

'முதல் வேலை' என்பது பெரிய பரவசமாக இருக்கும். வேலையில் முதல் நாள் என்பது மிகமிக முக்கிய அனுபவமாக இருக்கும். இதை பயனுள்ளதாகவும், நிறைவுள்ளதாகவும் ஆக்க வேண்டியது புத்திசாலித்தனம். உங்களைப் பற்றிய முதல் பதிவுகளை (First Impression), சக பணியாளர்களிடம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் அலுவலக உறவுகளின் நாற்றங்கால் நடப்படுவதும் இந்த முதல் நாளில்தான்.

இன்று பெரும்பான்மையான பன்னாட்டு நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு சேரும் பணியாளர்களை, நிறுவன இயக்கத்துடன் இசைந்து பணியாற்ற 'இண்டக்ஷன் புரோகிராம்ஸ்' (Induction Programs) நடத்தப்படுகின்றன. பணியில் சேர்தலுக்கு தேவையான 'ஜாய்னிங் ஃபார்மாலிட்டீஸ்'கள் (Joining Formalities) முடிந்தவுடன், இந்தப் பயிற்சி வகுப்புக்கு அனுப்புவது இயல்பு.

இதில், 'ஜாய்னிங் ஃபார்மலிட்டீஸ்' என்பது, உங்களுக்கான அடையாள அட்டை, கணினியின் பதிவு எண், கடவுச் சொல், அனைத்துத் துறை சார்ந்த ஆவணங்கள், முக்கிய தொலைபேசி எண்கள், இ-மெயில் ஐ.டி-க்கள் போன்றவற்றை பெறுதல். 'இண்டக்ஷன் புரோகிராம்ஸ்' என்பது, நிறுவனக் கலாசாரம், கொள்கைகள், செய்ய வேண்டியவை/செய்யக் கூடாதவை போன்றவற்றை போதிப்பது.

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர் செய்ய வேண்டியவை இவை...

1. உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆஃபர் லெட்டரில் உள்ள பதவி, சம்பளம், பணி ஒப்பந்தங்கள் எல்லா படிவங்களிலும் சரியாக உள்ளதா என்று சரிபாருங்கள்.

2. நேர்காணலில் சொல்லியதற்கோ, முதல் கடிதத்தில் குறிப்பிட்டதற்கோ மாறாக தகவல்கள் இருப்பது கண்டால், உடனே சம்பந்தபட்டவரிடம் இதமான வார்த்தைகளில் சுட்டிக்காட்டிக் கேளுங்கள்.

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

3. எல்லா படிவத்தையும் படித்து, புரிந்து, சந்தேகம் கேட்டு, சரிபார்த்து கையெழுத்திடுங்கள்.

4. 'இண்டக்ஷன் புரோகிராம்ஸ்' இல்லாத பட்சத்தில், நீங்கள் வேலைக்கு சேரும் துறைத் தலைவர் உங்களைச் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள எல்லா கேள்விகளையும் கேட்டு பதில் வாங்குங்கள்.

5. நீங்கள் நேரடியாக 'ரிப்போர்ட்' செய்ய வேண்டிய உடனடி பாஸ் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவரிடம் நல்ல உறவு வைத்துக் கொள்வதும், அவருக்கு உங்களை நன்கு தெரிவதும் மிக அவசியம்.

6. கம்பெனி சம்பந்தப்பட்ட வீடியோக்கள், மேனுவல்கள், வலைதளங்கள் அனைத்தையும் பாருங்கள். உங்கள் வேலைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

7. சக பணியாளர்களிடம் சிநேகமாக பழகுங்கள். கம்பெனியின் கலாசார கூறுகளை, டூ'ஸ் அண்ட் டோண்ட்'ஸ்களை நாசூக்காக தெரிந்து கொள்ளுங்கள். பேசுவதைவிட கேட்பதில் குறியாக இருங்கள்.

8. யாரிடமும் வீண் அரட்டை, வம்பு பேச்சு, தனிப்பட்ட நபர்கள் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். எதிராளி பேசினாலும் அதை ரசிக்காதீர்கள். வம்பு பேச்சினால், வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகளைத் தொலைத்தவர்கள் உண்டு (பார்க்க பெட்டிச் செய்தி).

9. எவ்வளவு விரைவில் நீங்கள் தன்னிச்சையாக, திறமையாக செயலாற்றப் போகிறீர்கள் என்பதுதான் சவால். பயிற்சி காலமாக இருந்தாலும், எவ்வளவு விரைவில் நீங்கள் பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றுதான் நிறுவனம் உங்களை உற்று நோக்கும். அதனால் முதல் நாளே அதை குறிவைத்து செயல்பட ஆரம்பியுங்கள்.

புதிய முகங்களை நோக்கும் பழைய முகங்களுக்கு இந்த முதல் பதிவுகள்தான் முகவரி. உங்கள் முதல் நாளை, வாழ்க்கையின் முக்கிய மைல் கல் ஆக்கப்போவது அந்த முதல் பதிவுகள்தான்!

இந்தியாவில் சி.ஈ.ஓ-களில் (CEO) பெண்கள் வெறும் 5%தான்! கம்பெனியை நிர்வகிக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு கிட்டுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.

தலை மேலே வானம் தெரியும் அளவு சுதந்திரமும் சமவாய்ப்பும் தெரியும். ஆனால், உயரும்போது கண்ணுக்குத் தெரியாத, ஆனால் கனமான கண்ணாடி கூரை முட்டும். மேலே போக முடியாமல் தடுக்கும். இதை 'கிளாஸ் சீலிங்' (Glass Ceiling) என்பர். எல்லோருக்கும் சமவாய்ப்பு, வானமே எல்லை என்று பேச்சு இருக்கும். ஆனால் பெண்கள் வளராமல் தடுக்கும் கண்ணாடிக் கூரைகள் எங்கும் உண்டு!

கண்ணாடிக் கூரையை உடைப்பது (அல்லது கழற்றி வைப்பது) எப்படி என்று பார்ப்பதற்கு முன் அதை மீறி உயர்ந்து 5% சி.இ.ஓ இடங்களைக் கைப்பற்றியிருப்போரின் அனுபவங்களை மனதில் கொள்வது நன்று. இன்னொருபுறம், இது இட ஒதுக்கீடு விஷயம் அல்ல. உங்கள் இருக்கையை நோக்கிய பயணத்தில் வீழ்த்த வேண்டியவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான் விஷயம்!

சில பாலபாடங்கள் இதோ...

1. அலுவலக அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அது உங்களை காத்துக் கொள்ள... தேர்ச்சி பெற்று விளையாட அல்ல!

2. மேலதிகாரியுடன் நல்லுறவு முக்கியம். ஆனால், அவரைத் தவிர்த்தும் உங்கள் திறமையை உணரும் ஆட்கள் அலுவலகத்தில் தேவை.

3. சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள் எங்குமே. ஆனால், வரும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4. மிகப் பெரிய ஆதரவு, குடும்ப ஆதரவுதான். உங்கள் கணவர்/குடும்பத்தின் பரிபூரண ஆதரவு பெறுவது உங்களை வேலையில் சிறப்புடன் ஈடுபடச் செய்யும்.

5. புதிய வாய்ப்புகளைப் புறந்தள்ளாதீர்கள். பிரச்னைகளைவிட பலன்களைப் பட்டியலிடுங்கள்.

6. கற்றலை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்.

7. உங்கள் இலக்குகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருங்கள்.

8. சம்பளம் போல பதவி உயர்வும், தலைமை பொறுப்பும் மிக அவசியம் எனச் சொல்லிக் கொள்ளுங்கள்.

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

9. முக்கியமாக, "என்னால் முடியும்!" என்பதை தினம் தினம் உங்களுக்கு சொல்லிக் கொள்ளுங்கள்!

உலகின் மிக இளமையான நாடு நம்முடையது என்பதாலும், சர்வீஸ் செக்டார் பெருக்கத்தில் புதிய தொழில்கள் பெண்களை அதிகம் வேலைக்கு அமர்த்துவதாலும் இன்றைய இளம் பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன!

இந்த ஜென் கதையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குருவிடம் ஒரு சின்ன குறும்பு செய்தான் சிஷ்யன். ஒரு பட்டாம்பூச்சியை கைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, "என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா?" என்று கேட்க திட்டம்.

'உயிருடன் இருக்கிறது' என்று குரு சொன்னால், நசுக்கி கொன்று இறந்த பூச்சியைக் காண்பிக்கலாம். 'இறந்துவிட்டது' என்றால், முஷ்டியைத் திறந்து பறக்கவிட்டு 'உயிருடன் இருக்கிறது' என்று சொல்லி ஏமாற்றலாம். இதுதான் திட்டம்.

அதேபோல கேட்டான்... "உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா?"

அந்த குரு சொன்ன பதில்... "முடிவு உன் கையில்!"

வேலை என்கிற பட்டாம்பூச்சி உங்கள் கையில். நல்ல முடிவு உங்கள் கையில்.

வாழ்த்துக்கள்!

கூச்சம் தரும் சோகம்!

அந்த பெரிய கட்டமைப்பு நிறுவனத்தில் சேர்ந்த சேகருக்கு (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன), முதல் நாள் நிறுவனத்தின் ஆடம்பரமும் செயல்பாடுகளும் பயமுறுத்துவதாக இருந்தன. கூடவே, எம்.ஐ.எஸ். (MIS - Management Information System) சம்பந்தப்பட்ட அந்தப் பணி, சேகரின் படிப்புக்கு நேரடியாக சம்பந்தப்பட்டது அல்ல. சந்தேகங்களை மேலதிகாரியிடம் கேட்க கூச்சப்பட்டு, எல்லாவற்றுக்கும் தலையாட்டினான் சேகர்.

மதிய உணவுக்கு வெளியே போன சேகருடன் நட்பாக பேசினான் சுதிர். பேச்சின்போதுதான் புரிந்தது... அவன் இதே துறையில் பணியாற்றி, தற்சமயம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, தன் கடைசி வார பணியை செய்து கொண்டிருக்கிறான் என்ற விஷயம்!

"வேலை கஷ்டம். தப்பா போனா ரிவீட் அடிப்பாங்க. சும்மாவா 20,000 ரூபாய் சம்பளம்? நமக்கு செட் ஆகல. அதான் பேப்பர் போட்டுட்டேன்!" என்றிருக்கிறான்.

எம்.ஐ.எஸ். பற்றி அதிகம் தெரியாத மேனேஜ்மென்ட் மாணவனான சேகரிடம், ''ஏதாவது தப்பா போனா, உன்னால யாருக்கும் ஒண்ணாம் தேதி சம்பளம் போகாது... ஜாக்கிரதை'' என்றும் சொல்லியிருக்கிறான் சுதிர்.

பயம் தலைக்கேற, மறுநாளிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு விட்டான் சேகர். வீட்டுக்கும் சொல்ல பயந்து 'கல்யாண பரிசு' தங்கவேலு போல தினம் பார்க்கில் படுத்தெழுந்து, ஒரு வாரம் ஓட்டினான்.

போனில் அழைத்துப் பார்த்து சலித்து, 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் உள்ள அடுத்த ஆளை வேலைக்கு அமர்த்தியது அந்த நிறுவனம்.

நடந்தது என்ன?

தற்காலிக பணியாளரான சுதிர், தன் பதவி சேகருக்கு போகிறதே என்று கம்பெனி பற்றி தாறுமாறாகப் பேசியிருக்கிறான். சுதிரின் பணி திருப்தியில்லாததால்தான் சேகரைத் தேர்ந்தெடுத்தது அந்நிறுவனம். ஆனால், சேகர் வராததால், அடுத்த இடத்தில் இருந்த மாணவனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது நிறுவனம்.

கேளாதோர் சொல் கேட்டு, வேலையைத் தொலைத்த சேகர், இன்று அதே நிறுவனத்தின் அவுட்சோர்ஸ் பணியில் குறைந்த சம்பளத்தில், அதே வளாகத்தைச் சுற்றி வருவதுதான் சோகம்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
-நிறைவடைந்தது
தொகுப்பு நாச்சியாள்
படங்கள் வி.செந்தில்குமார்
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism