Published:Updated:

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

Published:Updated:

நீ நதி போல ஓடிக்கொண்டிரு!
பாரதி பாஸ்கர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரியாத நட்பென்னும் பெரு வரம் வாய்க்குமோ?!

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர் (14)

மீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். மதுரையின் வெயில் போலவே... மழையும் உக்கிரம்தான். அடித்துக் கொட்டிய மழையில்... வடக்குக் கோபுர வாசலில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். பின்னால் தொங்கும் சேலைத் தலைப்பும், கணுக்கால் புடவையும் நனையாமல் தூக்கிப் பிடித்து, கவனமாக ஒவ்வொரு அடியாக வைத்தேன். அப்போதுதான் அவர்களைப் பார்த்தேன்.

இரு சிறு பெண்கள். பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். 'உடைகள் நனையுமே' என்றோ... 'தலை ஈரமாகிவிடுமே' என்றோ... கவலையே இன்றி, 'சளப் சளப்' என்று தண்ணீர் காலில் படும் இன்பத்தை முழுவதும் அனுபவித்த படி, ஒருவர் கையை இன் னொருவர் பிடித்து, சிரிப்பில் குலுங்கியபடி நடந்தனர். அந்தத் தோழிகள் பற்றிக் கொண்ட கைகளில் என்ன சுவாதீனம், எத்தனை சுதந்திரம், எத்தனை சந்தோஷம்! அந்த மழைக் குளிரை விரட்டிய கதகதப்பு அவர்களின் தோழமை தந்த கதகதப்பல்லவா? பார்த்துக் கொண்டே நின்றேன்... கையிலும் மனதிலும் கனக்கும் சுமைகளுடன்!

கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா? நம் தோழிகளை எங்கே இழந்தோம் நாம்? பத்தாம் வகுப்பில் நான், அனிதா, சுதா, முத்துலஷ்மி எல்லோரும் ஒரே பெஞ்ச். வகுப்பில் எங்கள் ரகளை ரொம்ப பிரபலம். ஃபிசிக்ஸ் மிஸ் எங்களின் குறும்பு பொறுக்காமல், ஒரே பெஞ்ச்சில் இருப்பதால்தான் தொல்லை என்று வேறு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றிவிட்டார்.

நான்கு பேரும் உடனே வாழ்வை வெறுத்தோம். மையிட்டெழுதவில்லை. மலரிட்டு முடியவில்லை. உணவையும் உலக இன்பங்களையும் துறந்து மூன்று நாள் அழுது களைத்தோம். என் அழுகை பொறுக்காமல், என் அம்மா மிஸ்ஸிடம் வந்து வேண்டுகோள் வைக்க, 'இனி சேட்டை கூடாது' என்ற உத்தரவுடன் திரும்பவும் ஒரே பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டோம்.

அவர்கள் மூவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் பெண்ணின் வாழ்க்கை.

ஒரு நிலத்தில் முளைக்கும் நாற்றைப் பிடுங்கி எடுத்து, வேறு ஒரு நிலத்தில் நடுவது போல்... பெண்ணும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குள் திருமணத்துக்குப் பின் நடப்படுகிறாள். இதில், அவள் இழந்து போனவை, போனவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது, அவளின் நட்பும், தோழிகளும்தான்.

'' 'பசங்க' படத்துல வர்றது மாதிரி, 'இந்த அடிய நாளைக்கு வரைக்கும் மறக்காத...'னு தினமும் ஸ்கூல் விட்டுப் போகும்போது அடிச்சுட்டு ஓடுற விஜயாவோட கல்யாணப் பத்திரிகை வந்ததே... அப்போ பார்த்து மாமியார் காலை ஒடிச்சுக்கிட்டாங்க; போக முடியல. காலேஜ்ல எதுக்கெடுத்தாலும் சிரிப்பாளே சாந்தி... எங்கேன்னே தெரியலப்பா. எப்படியோ தீபாவோட போன் நம்பர் கிடைச்சுது. ஆனா, இன்னும் பேச நேரம் வாய்க்கல..."

- இப்படி நழுவிப் போனவர்கள், தொலைந்து போனவர்கள், மறந்து போனவர்கள் பட்டியல் பெரிது, ரொம்ப ரொம்ப பெரிது.

சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' நாவலில் வரும் கதாநாயகன் மாதிரியோ, 'ஆட்டோகிராஃப்' படத்தின் சேரன் மாதிரியோ... பழைய நட்பைத் தேடிப் போய் புதுப்பிக்கும் பெண்கள் யாராவது இருக்க முடியுமா? (அது சரி... பள்ளிக்கால நண்பன், கல்லூரி நண்பன் என்று தேடித் தேடி பெண் ஒருத்தி தன் கல்யாணத்துக்குப் பத்திரிகை வைக்கும் கதையை யாராவது சினிமா எடுக்க முடியுமா என்ன?) நேரத்தை விழுங்கும் வேலைச் சங்கிலியா, 'தான், தன் குடும்பம்' என்று பெண் மீது கவியும் தன்னலப் போர்வையா... எது காரணம் என்று தெரியவில்லை. ஆனால், திருமணத்துக்குப் பின் பெண்ணின் தோழமை தொலைந்து போய்விடுவது என்னவோ நிஜம்.

கிராமத்துச் சிறுமிகள் இருவரின் நட்புப் பற்றி வைரமுத்துவின் கவிதை நினைவில் கண் சிமிட்டுகிறது. புழுதியில் விளையாடி, பிரியாமல் இருக்க 'ஒரே புருஷனுக்கு இருவரும் வாக்கப்பட' கனவு கண்ட குழந்தைப் பருவ நட்பு சிதறிப் போகிறது...

'எப்படியோ பிரிவானோம் இடி விழுந்த ஓடானோம்
தண்ணியில்லா காட்டுக்கு தாலி கட்டி நான் போக...
வரட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நீ போக...
உன் புருசன் உன் பிள்ளை உன் பொழப்பு உன்னோட...
என் புருசன் என் பிள்ளை என் பொழப்பு என்னோட...'

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், ராமன் - குகன், கிரேக்க புராணத்தில் வரும் டேமன் - பிதியஸ் என்று இலக்கியங்கள், புராணங்கள் தோறும் போற்றப்படும் நட்பெல்லாம் ஆண்களுக்குரியது. மருந்துக்குக்கூட பெண்ணும் பெண்ணும் கொள்ளும் நட்பென்னும் பெருநேசம் பேசப்படவில்லை. நம் சங்க இலக்கியங்களில் வரும் தோழியர், தலைவியின் காதலுக்குத் துணை போன அல்லது தலைவன் வருவான் என உறுதி கூறிய தன்னம்பிக்கை முனைகள் மட்டுமே.

மிஞ்சிப்போனால்... 'இதோ இதோ என் நெஞ்சிலே... ஒரே பாடல்' என்று 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் வரும் தோழிகள் சுமித்ரா - லதா, 'உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் எந்நாளுமே!' என்றபடி கண் முன்னே வந்து போவார்கள்.

நிஜத்தில்... அத்தி பூத்தது மாதிரி காட்சிக்குத் தெரியும் சில நட்புகள். போலீஸ் அதிகாரி ரத்தோர் போன்ற கொடூரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான டெல்லி டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா, தற்கொலை செய்துகொண்டாள். ரத்தோரின் முகத்திரையை உலகுக்குக் கிழித்துக் காட்டிய ஒரே சாட்சி, ருச்சிகாவின் தோழி ஆராதனா. 'என் தோழிக்கு நீதி வேண்டும்' என்று பதினெட்டு ஆண்டுகளாக வழக்கு நடக்கும்போதெல்லாம் இந்தியா வந்து போகிறாள்... தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருக்கும் ஆராதனா.

'எதிர் நீச்சல்' படத்தில் நாகேஷ் ஒரு வசனம் சொல்லுவார். 'நண்பனின் மரணத்தைவிட நட்பின் மரணம் கொடியது' என்று. தோழியின் மரணத்துக்குப் பின்னும், தோழமையை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆராதனா மாதிரி எத்தனை பேருக்கு நட்பு வாய்க்கும்?!

என் மகளிடம் பள்ளியில் அவள் சிநேகிதிகள் யார் யார் என்று கேட்டேன். இரண்டு, மூன்று பேர்களைச் சொன்னாள்.

"எப்பவும் முதல் மார்க் வாங்கும் அர்ச்சனா இல்லையா?"

"அவளோடயும் பேசுவேன். ஆனா, ஃப்ரெண்டு இல்ல."

"அட பைத்தியமே, முதல் ரேங்க் வர்ற பெண்ணை ஃப்ரெண்டு பிடிச்சுக்கோ. அதுதான் உனக்கு நல்லது..."

அவளது பெரிய கண்கள் என்னைப் பார்க்கின்றன. தீவிர யோசனையில் முகம் குவிய, கொஞ்ச நேரம் கழித்துச் சொல்கிறாள்...

"முதல் ரேங்க் வர்றான்னு ஃபிரெண்டை மாத்த முடியாது. என் பழைய ஃபிரெண்டு வருத்தப்படுவா இல்ல..? ஃபிரெண்ட்ஷிப், தானே வரணும்."

நான் என் பெண்ணைப் பார்க்கிறேன். மூன்றரை அடியா அவள்?! எத்தனை விஸ்வரூபம் எடுத்துவிட்டாள். 'நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன்' என்று சொல்லாமல் சொல்லி விட்டாள் என் குட்டித் தேவதை. வளர்ந்துவிட்ட நம் உலகத்தில் நட்பு என்பதே ஏதோ லாபம் கருதி. ஆனால், குழந்தைகள் எத்தனை புனிதமான இடத்தை நட்புக்குத் தருகிறார்கள்!

பெருநதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்வு. நதியில் பயணத்தை ஒன்றாகவே தொடங்கிய பல மரங்களில் ஒவ்வொன்றின் பயணமும் வேறு வேறாகிப் போவது போல, தோழிகளின் சிரிப்பொலியோடு தொடங்கும் வாழ்வின் ஓட்டத்தில் ஒவ்வொருவராகப் பிரிவதும், ஒவ்வொரு நட்பையும் இழப்பதுமே இயல்பாகிறது.

'எதற்காகவும் என் சிநேகிதியைப் பிரிய மாட்டேன்' என்று நிற்கும் என் மகளைப் பார்க்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் தேங்கிய மழைநீரில் கை பிடித்து நடந்த இரு சிறு பெண்களை நினைக்கிறேன். பிரியாத நட்பென்னும் பெரு வரம் இவர்களுக்காவது வாய்க்கட்டும்!

- நதி ஓடும்...

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
-
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism