'டீ பிரேக்' முடிந்ததும்... 'டயட்டீஷியன்' செல்வராணி மேடையேறி, ''டயட்டீஷியன்னா 'அத சாப்பிடாதீங்க, இத சாப்பிடாதீங்க'னுதான் சொல்லணுமா..? நான் சொல்றேன்... சாப்பிடுங்க சாப்பிடுங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க. ஆனா, தரமான, ஆரோக்கியமான உணவு வகைகளா சாப்பிடுங்க...'' என்றவர், அவற்றையெல்லாம் பட்டியலிட, மனதில் பதிந்துகொண்டார்கள் வாசகிகள்.
''அவள் விகடனுக்கு 13-ம் வருட பிறந்த நாள் வாழ்த்துப்பா பாடப் போறேன்...'' என்று மேடையேறி கவி சொன்ன காவ்யஸ்ரீக்கு, வயது 12! அடுத்ததாக, ''ஓ.கே... இது டான்சுக்கான நேரம்...'' என்று சுமதி ராஜகோபால் அழைக்க... தோழிகள், அம்மா-மகள், மாமியார்-மருமகள் என்று ஜோடி ஜோடியாக மேடையேறிய வாசகிகள் போட்ட ஆட்டம், செம கொண்டாட்டம்.
''இந்த ஒரு வாரமா எனக்கும் அம்மாவுக்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். பேசிக்கவே இல்ல. 'அசத்தல் பெண்கள்' நிகழ்ச்சிக்குக் கிளம்பினப்போகூட, ஸ்கூட்டியில கொஞ்சம் பின்னுக்கு தள்ளி உட்கார்ந்துதான் வந்தாங்க. ஆனா, நாங்க ரெண்டு பேரும் இப்போ இங்க உற்சாகம் பொங்க விரல்கள் பற்றி ஆடினப்போ, எங்க ஈகோ எந்த நிமிஷம் உடைஞ்சதுனு எங்களுக்கே தெரியல. தேங்க்ஸ் டு அவள்!'' என்று சிவசங்கரி நெகிழ, கண்களுக்குள் ஈரம் வைத்துச் சிரித்தார் அவருடைய அம்மா மலர்க்கொடி!
மேடை இப்போது யோகா மாஸ்டர் வதனா வசம். 'அந்த' மூன்று நாட்களுக்கான மூச்சுப் பயிற்சி, உடல்நலனுக்கான மூச்சுப் பயிற்சி, மனநலனுக்கான மூச்சுப் பயிற்சி என்று வதனா சொன்னதையெல்லாம் கவனத்துடன் கற்றுக் கொண்டனர் வாசகிகள்.
அதே உற்சாகத்துடன் 'பக்கெட் பால்' போட்டியில் கலக்க இறங்கியவர்களில், சரியாக(!) பக்கெட்டுக்கு வெளியே பந்தைப் போட்டு, 'பல்பு' வாங்கிக் கொண்டவர்கள்தான் அதிகம்!
''பரிசா முக்கியம்?! இந்த சந்தோஷம்தான் முக்கியம். அதுக்காகத்தான் சேலத்துல இருந்து இங்க வந்திருக்கேன். இந்த ஒரு நாள் ஆட்டம் பாட்டம் போதும்... என் இறுதி நாள் வரை தாங்கும்!'' என்றார் அறுபது வயது ஜமுனா பாட்டி!
போட்டிகளில் வென்றவர்களுக்கு மிக்ஸி உட்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
''நிகழ்ச்சிக்கு வந்த எல்லோருக்கும் நினைவுப் பரிசு மட்டுமில்ல, நீங்க நினைக்காத பரிசும் உண்டு!'' என்று அறிவித்து, அவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அந்த குதூகல தருணங்களை 'க்ளிக்' செய்து, உடனுக்குடன் ப்ரின்ட் போட்டு சன்ஃபீஸ்ட் நிறுவனத்தினரின் அழகான 'ஃப்ரேம்'மில் வைத்துத் தர, 'சூப்பர்ப்!' என்று பரவசப்பட்டனர் வாசகிகள்!
|