கரூர், அரசுப் பள்ளியில பதினோராம் வகுப்பு மாணவியா இருக்கற இந்த பாரதி, வார இறுதி நாட்கள்ல, பதினஞ்சு குழந்தைங்களுக்கு பரத கிளாஸ் எடுக்கற நாட்டிய குரு! இதுவரைக்கும் 350 மேடைகளுக்கும் மேல அரங்கேற்றம் நடத்தியிருக்கற பாரதிக்கு, தமிழக அரசோட 'கலை இளமணி விருது', 'கலை இசைவாணி', 'யுவகலா பாரதி', 'நவரச நாட்டிய திலகம்'னு விருதுகள் குவிஞ்சுட்டே இருக்கு.
''எங்க வீட்டுக்கும் பரதத்துக்கும் சம்பந்தமே இல்ல. அப்பா ஜவுளிக்கடை வெச்சுருக்கார். அம்மா இல்லத்தரசி. எனக்கு ஆறு வயசு இருக்கும்போது, டி.வி-யில வர்ற பரதநாட்டிய பாட்டு, அந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் பார்த்துட்டு ஆசையாகி, 'பரதநாட்டிய கிளாஸ் போறேன்'னு நான் சொன்னப்போ, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஆச்சர்யம், சந்தோஷம். சுஜாதானு ஒரு குருகிட்ட சேர்த்து விட்டாங்க. வர்ணத்துல இருந்து தில்லானா வரை எல்லா கிரேடுகளையும் பதிமூணு வயசுலயே முடிச்சுட்டேன். 'குரு'வாகற தகுதியை எட்டிட்டேன்''னு சொல்ற பாரதி, நடனத்தை தன்னோட திறமையா மட்டும் நினைக்காம, மத்தவங்கள மகிழ்விக்கற கலையாவும் கொண்டாடறது, சிறப்பு!
''எங்க ஊர்ல இருக்கற குழந்தைகள் காப்பகத்துக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவங்களோட காப்பகத்துக்கும் அடிக்கடி போய் பரதம் ஆடுவேன். பெரிய மேடைகள்ல, கலைஞர்கள் முன்னாடி ஆடும்போதும் பெருமையா... சந்தோஷமா இருக்கும். சுனாமி வந்தப்போ, அந்த வருஷம் முழுக்க என் கச்சேரிகள்ல எனக்கு கிடைச்ச அன்பளிப்புத் தொகையை, சுனாமியால பாதிக்கப்பட்டவங்களுக்கு அனுப்பி வெச்சேன்.
|