பொது வாழ்க்கைக்கு தைரியமா வரவெச்சதும் அவர்தான். 'நீ கம்பீரமானவ. உன்னால இது முடியும்'னு வார்த்தைகளுக்குள்ள தன்னம்பிக்கையைத் திணிச்சு திணிச்சு என்னை உயரச் செய்தவர். என் சிறகுகள சுதந்திரமா அகல விரிச்சுப் பறக்க வெச்சவர். என் காதல் கணவர், என் குழந்தைகளுக்கு பாசமான அப்பாங்கற உயிரான உறவு மட்டுமில்ல... எப்பவும் என் கூடவே இருக்கற குருவும் அவர்தான்!
எங்க அண்ணன் குமாரசாமி, எனக்கு கண்டிப்பான பிரம்பு. நாம உயரமா வளர்ற நேரம், எல்லாரும் நம்மை வானளாவ புகழ்வாங்க. ஆனா, அதுல பெரும்பாலும் உண்மை இருக்காது. அந்த புகழ்ச்சிக்கு மத்தியிலயும் ரொம்ப சத்தமா ஒரு குரல் வரும்... 'நீ சரியான பாதையில போகல, இந்த விஷயத்த நீ இப்படி செஞ்சுருக்கணும்'னு நம்ம முகத்துக்கு நேரா கண்டிப்போட சொல்லப் படற அந்த விமர்சனம்... அந்த நிமிஷம் நம்மள ரொம்ப கஷ்டப்படுத்தும், காயப்படுத்தும். ஆனா யோசிச்சுப் பார்த்தா, அதுதான் நம்ம வாழ்க்கையை நேரான பாதையில, நிறைய கற்களையும் முட்களையும் அதிக வலியில்லாம தாண்டி வர வெச்சிருக்கும். எனக்கு அப்படி ஒரு நேர்மையான விமர்சகர் என் அண்ணன். எனக்கு கிடைச்ச பொக்கிஷமான க்ரிடிக் அவர்தான்.
என் அரசியல் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானவர், நான் மதிக்கறவர்... சந்திரபாபு நாயுடு. சித்தூர்ல ஒரு சின்ன ஊர்ல பிறந்து, ஆந்திர அரசியல் எல்லைகளை விஸ்தரிச்சவர். தேசிய அரசியலிலும் முக்கிய நபரா இருக்கிறவர். அரசியல் ஆர்வம் ஏற்பட்டு நான் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்தப்போ, அவர்கிட்ட நான் கத்துக்கிட்ட ஆரோக்கியமான அரசியல் அரிச்சுவடிகள் நிறைய. எப்பவும் ஒரு தெளிவான 'விஷனோட' இருப்பார். 'ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்ன ஆயிரம் தடவ யோசிக்கணும், அந்த விஷயத்துல இறங்கிட்டா, அப்புறம் யோசிக்காம, தொடர்ந்து போய்கிட்டே இருக்கணும்'னு செயல்படற அவரோட அரசியல் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்.
|