'' 'வயிறு நெரம்பிடுது, வேற என்ன வேணும்'னு உட்கார்ந்துடாம, ஒரு சின்ன கிரைண்டரு வாங்கி கூலிக்கு இட்லி மாவு அரைச்சுக் கொடுக்க ஆரம்பிச்-சேன். அந்தச் சமயத்துல மகளிர் சுயஉதவிக் குழுவில உறுப்பினரானேன். அப்போதான் வெளிய நாலு மனுஷ மக்களோட பழக முடிஞ்சுது... முன்னேற என்னவெல்லாம் வாய்ப்புங்க இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
இராசிங்காபுரம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்ல, ஆடு வளர்க்க குழுவுக்கு கடன் கொடுத்தாக. துணிஞ்சு 34,000 ரூவா கடன் வாங்கி, பதினோரு ஆடுகள வாங்கினேன். ஆட்டுப் புழுக்கைய வித்து அந்தக் காசுல ஆடுகளுக்கு அகத்திக் கீரை வாங்கிப் போட்டேன். தட்டைப்பயறு சீஸனுல 'தட்டாம் பொட்டு' வாங்கி சாக்குல போட்டு பரணியில சேகரிச்சு வெச்சு, தீவனம் குறையறப்போ அதை மாற்றுத் தீவனமா கொடுத்தேன்'' என்று புழுக்கைகளை சேகரித்தபடியே அவர் சொல்லிக் கொண்டிருக்க... அவருடைய செல்போன் 'பீப்...' என அழைக்க... கை கழுவி வந்து எடுக் கிறார்.
'' 'விடியல்'ங்கற தொண்டு நிறுவனத்துல இருந்து எங்களுக்கு செல்போன் வாங்க பணமும், ஒரு இலவச சிம் கார்டும் கொடுத்தாக. தெனமும் அஞ்சு தடவ அதுல 'வாய்ஸ் மெயில்'ல வெவசாய டிப்ஸ் வரும். ஆடு வளர்ப்பு, எளியமுறை ஆடு வைத்தியக் குறிப்புகள் எல்லாம் கேட்டுக்குவேன்...'' என்று தகவல் சொல்லிவிட்டு, 'இன் பாக்ஸ்'-ல் அவர் 'வாய்ஸ் மெயில்' ஓபன் செய்து கேட்டபோது, விழிகள் விரிந்தது நமக்கு.
ஐ.ஓ.பி-யின் மூலம் வளர்மதிக்கு கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு, 'வர்த்தக வசதி சேவை மையம்'. சுற்று வட்டாரப் பகுதிகளில் வங்கிகளே இல்லாத கிராமங்களுக்கு, இந்த மையம் கை கொடுக்கிறது. குறிப்பிட்ட இந்த மையத்துக்கு வளர்மதிதான் பொறுப்பாளர். வளர்மதி வீட்டி-லேயே கையடக்கமாக ஒரு மெஷின் இருக்கிறது, ஏ.டி.எம். போல. மையத்தில் கணக்கு வைத்திருப்-பவர்கள், இந்த மெஷினில் தங்களின் கை ரேகையை பதிந்துவிட்டு, பணம் எடுக்கலாம், செலுத்தலாம். ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் ரசீது வரும். பேங்குக்கு செல்லும்போது பாஸ் புக்கில் என்ட்ரி போட்டுக் கொள்ளலாம். இதை கண்காணிக்கும் வளர்மதிக்கு மாத ஊதியம் ரூபாய் 1,000. நூறு வாடிக்கையாளர் சேர்ந்துவிட்டால் சிறப்பு ஊதியம் ரூபாய் 3,000, ஆக நான்காயிரம் தனி வருமானம்!
இப்படி ஐந்து விதமான தொழில் செய்யும் வளர்மதியின் இன்றைய மாத வருமானம் சுமார் பத்தாயிரம் ரூபாய்! தன் மூன்று குழந்தைகளுடன் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் நிற்கிறார்.
|