உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கீதா, 2000-ம் ஆண்டில் வரதட்சணைக்காக கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கு அது. பல கட்டங்கள் தாண்டி, கீதாவின் கணவருக்கும் மாமியாருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் முறையிட்டபோது, ஆயுள் தண்டனையை உறுதிசெய்த நீதிபதிகள், 'மரண தண்டனை' என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளனர். இப்படி...
'இந்த வழக்கு 304 பி (வரதட்சணை சாவு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302-ன் (கொலை) கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய வழக்கு. இதுபோன்ற குற்றத்துக்கு மரண தண்டனை விதிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 302-வது பிரிவின் கீழ் இது பதிவு செய்யப்படாததால், எங்களால் அப்படி தண்டனை தரமுடியவில்லை'.
தீர்ப்பு பற்றி ஆதங்கத்தோடு பேசும் ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, ''வரதட்சணை வழக்குகளில் பெரும்பாலும் தாமதிக்கப்பட்ட நீதியே வழங்கப்படுகிறது. கீதா விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது. இந்த பத்து ஆண்டுகளாக கீதாவின் பெற்றோர், நீதிமன்ற வாசலில் துயரங்கள் சுமந்து தவம் கிடக்க வேண்டியிருந்ததே... அதற்கு என்ன பரிகாரம்? இந்த வழக்குதான் என்றில்லை... 2008-ல் 8,172 வரதட்சணை சாவு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் வெறும் 33.4 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில், பொருளாதாரத்தில், கலாசாரத்தில், நாகரிகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் நம் நாட்டில்தான், கடந்த பத்து வருடங்களில் வரதட்சணை சாவுகள் 14.4 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
|