ஆப்பிளைத் துண்டுகளாக்கி எனது பேத்திகள் கீர்த்தி வர்ஷினி (5), விஷாலினி (3) இருவருக்கும் கொடுத்தேன். விஷாலினியோ "எனக்கு ஆப்பிள் வேண்டாம்... மாம்பழம்தான் வேணும்" என அடம் பிடித்தாள். "இது மாம்பழ சீஸன் இல்ல... அடுத்த வருஷம்தான் மாம்பழம் கிடைக்கும்!" எனச் சொல்லியும் தொடர்ந்து அடம் பிடிக்கவே, "இப்பதான் சீஸன் இல்லேங்கிறாங்களே... சொன்னா புரியாதா?" என்று சத்தம்போட்டு தன் தங்கையை அடக்கினாள் கீர்த்தி.
பிறகு, ஒரு நாள் கிளி ஜோதிடக்காரர் வைத்திருந்த கிளியைப் பார்த்துவிட்டு, "நாமளும் கிளி வளர்க்கலாம்மா... ப்ளீஸ் ப்ளீஸ்!" என்றாள் கீர்த்தி, தன் அம்மாவிடம். உடனே விஷாலினி, "இப்ப கிளி சீஸன் இல்ல... அடுத்த வருஷம்தான் கிளி கிடைக்கும்... சும்மா தொந்தரவு பண்ணாதே!" என்று பெரிய மனுஷி தோரணையில் சொல்ல... காத்திருந்து தன் அக்காவை பழிக்குப் பழி வாங்கிய அந்த குட்டி நம்பியாரை அள்ளி அணைத்துக் கொண்டோம்!
- சுப்புலட்சுமி சம்பத், மல்லசமுத்திரம்
|