“பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறேன். மேற்படிப்பை வெளிநாட்டு (யு.எஸ் அல்லது யு.கே) பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதற்கான தயாரிப்புகளில் முக்கியமானதாக டோஃபல், ஜி.ஆர்.இ. போன்ற தேர்வுகளை முடித்திருக்க வேண்டும் என்கிறார்களே... அவை பற்றிய விவரங்கள் கிடைக்குமா..?" என்று கோரியிருக்கும் திருவனந்தபுரம் மாணவி ஆர்.நிகிலாவுக்காக விளக்கம் தருகிறார்... திருச்சி 'யு 2 கேன்' என்ற சர்வதேச கல்வி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் சாவித்ரி சிவகுமார்.
“மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று தங்களின் நாடுகளுக்கு வருபவர்களுக்கு அடிப்படை தகுதியாக சில டெஸ்ட்டுகளை சில நாடுகள் கட்டாயமாக்கியிருக்கின்றன. தங்கள் நாட்டு மொழியில், சூழலில் பொருந்திப்போக பிற நாட்டினரைத் தயார்படுத்த உதவும் முன் தயாரிப்புதான் இந்தத் தேர்வு. இவை நாட்டுக்கு நாடு வேறுபடும்.
உதாரணமாக... TOEFL (Test Of English as a Foreign Language), IELTS (International English Language Testing System)எனப்படும் இரண்டுமே மொழித்திறன் தேர்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவை.
TOEFL தேர்வு என்பது அமெரிக்காவுக்கு மட்டுமேயானது. இங்கிலாந்தின் ஆங்கிலம் அடிப்படையிலான ÔIELTS’ தேர்வு... இங்கிலாந்து மட்டுமன்றி கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது.
SAT (Scholastic Aptitude Test) என்பது, பள்ளி முடித்து கல்லூரிப் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கானது. கணிதம் மற்றும் மொழி திறன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தேர்வை, வெளிநாட்டினருக்கு மட்டுமல்லாமல், பள்ளிப் படிப்பை முடிக்கும் தன்னுடைய பிரஜைகளுக்கும் அவசியமாக்கியுள்ளது அமெரிக்கா.
GMAT (Graduate Management Admission Test) என்பது, பட்டமேற்படிப்பு தகுதியோடு அமெரிக்காவுக்கு எம்.பி.ஏ. படிக்க செல்பவர்களுக்கானது. GRE (Graduate Record Examination) தேர்வு, எம்.பி.ஏ., தவிர்த்த பிற மேற்படிப்புக்களுக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கானது. ஆக, பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படிக்க அமெரிக்கா செல்பவர்களுக்கு... TOEFL, GMAT இரண்டும் அவசியம். எம்.பி.ஏ. அல்லாத பிற மேற்படிப்புகளுக்கு அமெரிக்கா செல்பவர்களுக்கு TOEFL, GRE இரண்டும் அவசியம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ETS என்ற நிறுவனம் அந்நாட்டுக்கு அவசியமான TOEFL, SAT, GMAT, GRE தேர்வுகளை நடத்துகிறது. இங்கிலாந்தின் British council மற்றும் ஆஸ்திரேலியாவின் IDP நிறுவனத்தால் நடத்தப்படுவது IELTS தேர்வு. ஆங்கிலம் வழியாக (இங்கிலீஷ் மீடியம்) பள்ளிப்படிப்பை முடிக்காத மாணவர்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு தயார் செய்ய அந்தந்த நாடுகளால் தகுதி தேர்வாகவும் IELTS உள்ளது.
மேற்கொண்டு முழுமையான விவரங்களுக்கு... IELTS - www.ielts.org, TOEFL & GRE - www.ets.org, GMAT - www.mba.com, SAT - sat.learnhub.com, Education Abroad - www.educationtimes.com, www.foreign-study.comபோன்ற இணையதளங்களை நாடலாம்.
ஆக, இந்த தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்வதோடு முடிந்துவிடவில்லை முன்தயாரிப்பு, அடுத்ததாக, அருகிலிருக்கும் Education Abroad and Immigration Consultancies மையங்கள் எவற்றையேனும் அணுகினால்... பயிற்சிகள், நடைமுறைகள், விண்ணப்பங்கள், யுனிவர்சிட்டி ஆஃபர் லெட்டர், கல்விக் கடன், விசா, இன்டர்வியூ என வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான ஏ டு இஸட் ஏற்பாடுகளை இந்த கன்சல்டன்ஸி நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும்.
பயிற்சி வழங்கும் நிறுவனத்தை சரியானதாக தேர்ந்தெடுக்க கீழ்கண்ட வசதிகளை அவை அளிக்கின்றனவா என்று ஆரம்பத்திலேயே விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான கோச்சிங், யுனிவர்சிட்டி செலக்ஷன், ஜெனரல் மற்றும் விசா கவுன்சலிங், டாக்குமென்டேஷன், யுனிவர்சிட்டி ஃபாலோ&அப் (பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகும் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர் ஆலோசனை) போன்றவை இவற்றில் அடங்கும்.
|