வயல்வெளிகளில் வெள்ளாடுகளைப் பார்த்ததுண்டா? முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு ஒன்றின் மீது ஒன்று விழுந்து விளை யாடும். ஏதாவது ஒரு ஆட்டுக்குட்டி ஓரமாக ஒதுங்கி நின்றால், அதையும் மற்ற ஆடுகள் விளையாட அழைக்கும். நம்முடைய பாண்டியாட்டம், கல்லா - மண்ணா விளையாட்டுகள் போல... இவை ஆடுகளின் விளையாட்டுகள்!
விலகி நின்று பார்க்கும்போது விலங்குகள் அனைத்தும் சாப்பிடுவது, அசைபோடுவது, தூங்குவது என்று மட்டுமே பொழுதைக் கழிப்பது போன்று தோன்றும். ஆனால், விலங்குகளின் வாழ்க்கையை இந்த அளவுக்கு எளிமைப்படுத்திவிட முடியாது. விலங்குகளுக்கு என்று அவற்றின் உலகில் ஒரு தனி சமூகம், ஊருக்கே பெரிய ஆள், குடும்பத்துக்கு பெரியவர் என்று சமுதாயத்தில் பல அடுக்குகள், ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல்பாடுகள், ஏற்கமுடியாத செயல்பாடுகள், மகிழ்ச்சி, காதல், விருப்பு, வெறுப்பு, பயம், மன அழுத்தம் என்று எல்லாமும் உண்டு. விலங்குகளின் உலகம் ஓர் அதிசய அரங்கம்!
|