அவருடைய வீட்டையே சிறைச்சாலையாக்கி, சுமார் பதினைந்து ஆண்டு காலமாக அங்கே அடைக்கப்பட்டிருந்த மியான்மார் நாட்டின் புரட்சிப் பெண் ஆங் சான் சூ கி, இப்போது விடுதலையாகியிருக்கிறார்!
ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்று, ஐ.நா. சபையில் பணியாற்றிக் கொண்டிருந்த சூ கி, நோயின் பிடியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தன் அம்மாவை பார்க்க, 88-ம் ஆண்டில் பர்மா (மியான்மாரின் அப்போதைய பெயர்) வந்தார். அந்த நேரத்தில் அங்கே நடந்து கொண்டுஇருந்தது ராணுவ சர்வாதிகார ஆட்சி. அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள், 'ஜனநாயகம் வேண்டும்' என்று போராடிக் கொண்டிருக்க... அதை நசுக்கிக் கொண்டிருந்தனர் சர்வாதிகார ஆட்சியாளர்கள்.
இதைக் கண்ட சூ கி, 'வெளியே கலவரமாக இருக்கிறது...' என்று தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ளாமல், வீதிக்கு வந்து பொதுமக்களோடு சேர்ந்து போராட்டத்தில் குதித்தார். இவருடைய அப்பாதான், பிரிட்டிஷா ரிடமிருந்து நாடு விடுதலையடைய போராடியவர் என்பதால், ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து மகள் விடுதலை வாங்கித் தருவார் என்று நம்பிய மக்கள், சூ கி-யின் பின்னால் திரண்டார்கள். இதனைப் பொறுக்க முடியாத ராணுவம், சூ கி-யை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. பிறகு, சர்வதேச நெருக்கடியை தாங்க முடியாமல் அவரை விடுதலையும் செய்தது. அதன்பிறகு கடந்த இருபத்தியோரு ஆண்டுகளில் போராட்டம் நடத்துவதும், கைதாவதும் விடுதலையாவதும் சூ கி-யின் வாழ்க்கையில் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த பதினைந்து ஆண்டுகள் அவருக்கு மிக நீண்ட சிறைவாசமாக அமைந்துவிட்டது, பெருந்துயரம்!
தன் குடும்பத்தின் எந்த நல்லது கெட்டதிலும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. சிறை தண்டனையைவிட இதுதான் இவருக்கு பல மடங்கு கொடுமையானதாக இருந்தது. குறிப்பாக, கேன்ஸர் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கணவர், இங்கிலாந்திலிருந்து மியான்மர் வந்து சூ கி-யைப் பார்க்க நினைத்தார். ஆனால், நாட்டுக்குள் அவரை அனுமதிக்கவே இல்லை ராணுவ ஆட்சியாளர்கள். போப் ஜான் பால் துவங்கி ஐ.நா. சபை வரை எத்தனையோ பேர் சொல்லியும்கூட எடுபடவில்லை. 'வேண்டுமென்றால், நீ இங்கிலாந்து போய் உன் கணவரைப் பார்' என்று எகத்தாளமாக சொன்னது ராணுவ அரசு. ஆனால், 'மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டோம்' என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொண்ட சூ கி, கணவரைக் காட்டிலும் நாட்டு மக்களே முக்கியம் என்று தங்கிவிட்டார்.
|