Published:Updated:

தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !

தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !

தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !

தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !

Published:Updated:

 
கு.ராமகிருஷ்ணன்
தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !
தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !"

உங்களுக்கும் ஒரு தொழில் தொடங்கும் கனவு இருந்திருக்கக் கூடும். ஆனால், அதற்கான வழிகாட்டல்கள் இல்லாத சூழ்நிலையால்... கனவாகவே அது கரைந்திருக்கக் கூடும். இந்தக் குறையைப் போக்கவே, 'அவள் விகடன்' வாசகிகளுக்கு தொழில்துறையில் நம்பிக்கையூட்டவும், வழிகாட்டவும், தஞ்சாவூர் அருகே வல்லத்தில் இருக்கும் 'பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகம்' என்ற அமைப்புடன் இணைந்து ‘நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

பச்சைப்பசேல் இயற்கைச் சூழல் நிறைந்த பெரியார்- மணியம்மை பல்கலைக்கழக வளாகம்... நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களும் 'அவள் விகடன்' வாசகிகளால் களைகட்டியது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில்இருந்து மட்டுமல்லாமல்... ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வாசகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், "பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என தந்தை பெரியார் சொல்வார். தொழில் துறையிலும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை இங்கு வந்திருக்கும் தொழில் முனைப்புக் கொண்ட பெண்களால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்..." என்று உற்சாகப்படுத்த...

ஹைதராபத்திலிருந்து வந்திருந்த தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் இயக்குநர் ராணி கடியாலா, "ஹைதராபாத்தில் சுமார் 150 நிறுவனங்கள் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருமே எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள்" என நம்பிக்கையூட்ட...

இனிதே துவங்கியது பயிற்சி முகாம்.

முதல் நிகழ்ச்சியாக, பழச்சாறு மற்றும் குளிர்பான தொழிற்கூடம் தொடங்க மோகனா என்ற பெண்ணுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், முறுக்கும் பிழியும் அதிநவீன இயந்திரம் வாங்க சவுதா பேகம் என்ற பெண்ணுக்கு 70 ஆயிரம் ரூபாய் என கடன் ஆணைகள் மேடையிலேயே வழங்கப்பட்டது... அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

எப்படி ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்தெந்த தொழிலுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம், எங்கு பயிற்சி பெறலாம், முதலீட்டுக்கு என்ன செய்யலாம், வங்கிகளை எப்படி அணுக வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் என்னென்ன, இயந்திரங்கள் எங்கு கிடைக்கும், மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும், உற்பத்திப் பொருட்களை எங்கு விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மண்டல மேலாளர் வி.ஆர். சங்கர், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் கந்தசாமி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்தின் துணை இயக்குநர் சினிவாசலு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை மேலாளர் ஏகாம்பரம், தேசிய சிறு தொழில் ஆணையத்தின் துணை மேலாளர் கார்த்திகேயன், ‘சிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர் சின்னையன், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மையத்தின் அலுவலர் மணிமேகலை, திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் துணை தலைவர் கனகசபாபதி என அக்கறையுடன் வழிகாட்டிய அனைவரின் வார்த்தைகளையும் எழுத்து விடாமல் குறித்துக் கொண்டனர் வாசகிகள்.

பேப்பர் கப், கவரிங் செயின் டிசைனிங், கார்மென்ட்ஸ், லெதர் கிளவுஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் இயந்திரங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீராவி அயர் னிங் இயந்திரம் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டு, செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

"தொழில் துவங்க முதலில் எது தேவை" என பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் கேள்வி எழுப்பியபோது, "பணம்’' என ஒருமித்தக் குரல் எழுப்பினர் வாசகிகள்.

"தவறு! பணம் பற்றிய கவலை மற்றும் தேடல் வந்துவிட்டால், அடுத்த வேலைகள் எதுவுமே ஆக்கபூர்வமாக நடக்காது'' என்று சொல்லி, எல்லோரையும் நிமர்ந்து உட்கார வைத்த தேசாய்,

''எந்த ஒரு தொழிலுக்கும் முதலில் தேவைப்படுவது சந்தையை உறுதிப்படுத்திக் கொள்வது. இரண்டாவதாக, எவ்வளவு லாபம் கிடைக்கும் எனத் தெரிந்து கொள்வது. மூன்றாவது... தொழில்நுட்பம் குறித்து தெளிவடைவது. நான்காவது... நமது தொழிலுக்கு ஏற்ற தொழிலாளிகள் இருக்கிறார்களா எனப் பார்ப்பது. ஐந்தாவது... எந்த இடத்தில் தொழிற்கூடத்தை துவங்கப் போகிறோம் என முடிவு செய்வது. ஆறாவது... மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா, எங்கு குறைவாக கிடைக்கும் என தெரிந்து கொள்வது. ஏழாவது... நியாயமான விலையில் தரமான இயந்திரம் எங்கு கிடைக்கும் என்பதை அறிவது. எட்டாவதாக, மேற்சொன்ன அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய தெளிவான திட்ட அறிக்கை தயார் செய்வது. கடைசியாக... தெளிவான திட்ட அறிக்கையோடு வங்கியை அணுகினால் கண்டிப்பாக கடன் கிடைக்கும். அதன் பிறகு தொழிலைத் தொடங்கினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்!" என்று தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து... "நான் அதிகம் படிக்கல. சொத்தும் இல்ல. எனக்கெல்லாம் பேங்க்ல கடன் கொடுப்பாங்களா?" எனக் கேள்வி எழுப்பினார் சேலம் வாசகி மகாலட்சுமி.

"பாரத பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கலாம். படிப்போ, சொத்துப் பத்திரமோ, தனிநபர் ஜாமீனோ தேவையில்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்க எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். ‘கிரெடிட் கேரண்டி ஃபண்ட்’ மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம். கல்வித் தகுதி, சொத்துப் பிணையம், தனிநபர் ஜாமீன் எதுவுமே கிடையாது!" என தெரிவித்த தேசாய், வங்கிகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

நிறைவு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் வி.கே.என்.கண்ணப்பன், பல்கலைக்கழக கூடுதல் இயகுநர் ராஜசேகரன், பதிவாளர் அய்யாவு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

'பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜிய'த்துக்கு எப்படி வந்தோம் என வளரும் தொழிலதிபர்களான ஆண்டாள், கோமதி, திவ்யா, மும்தாஜ்பேகம், ரகிலா பானு, கிருஷ்ணவேணி, இந்திரா ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

"உணவு, தங்குமிடமெல்லாம் நேர்த்தியாக ஏற்பாடு பண்ணிக் கொடுத்ததுக்கு முதல் நன்றி. ரெண்டு வருச எம்.பி.ஏ. படிப்புல தெரிஞ்சுக்க முடியாத பிராக்டிகலான பல விஷயங்கள, இந்த ரெண்டு நாள் பயிற்சி முகாம்ல கத்துக்கிட்டோம்" என்று ஒட்டுமொத்த வாசகிகளின் குரலாக நெகிழ்ச்சியோடு சொன்னார்... தஞ்சாவூர் வாசகி சங்கீதா.

முழுமையாக இரண்டு நாட்களை செலவிட்ட வாசகிகள்.. பயிற்சி முகாம் நிறைவடைந்தும் கூட அரங்கை விட்டு கலைய மனமில்லாமலே கலைந்ததைப் பார்க்கும்போது... வெகுவிரைவில் வெற்றிச் செய்திகள் வந்து சேரும் என்றே தெரிகிறது!

படங்கள் கே.குணசீலன், மு.ராமசாமி

 

"ஆண்களிடம் பணம் கேட்காதீர்கள்!"

பெரியார் வணிக காப்பகத்தின் தலைமை செயல் அலுவலர் அருணா, தன்னுடைய வரவேற்புரையில், ‘‘நீங்கள் செய்யப்போகும் தொழில் தொடர்பாக, உங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் கலந்து பேசுங்கள். ஆனால், பணம் உள்ளிட்ட வேறு எந்த ஒரு உதவியை யும் எதிர்பார்க்காதீர்கள். குறிப்பாக எந்த ஒரு வேலையையும் அவர்களிடம் சொல்லாதீர்கள். அவர்களது பணிச் சுமையாலோ, அலட்சியத்தாலோ அவர்கள் அதை மறந்துவிடுவார்கள். அல்லது, தாமதமாகலாம். இதனால் உங்களது தொழில் பின்னடைவை சந்திக்க நேரும்’’ எனச் சொன்னபோது, அத்தனை வாசகிகளும் ஆமோதித்து தலையசைத்தனர்.

 

 

தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !
-
தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !
தொழில் தொடங்க முதலில் பணம் தேவையில்லை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism