மறுபடியும் சென்னை... உறவுகள், நண்பர்கள் அடைக்கலப்படுத்த, மீண்டும் ஆதியிலிருந்து தொடங்க முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.
''அதே கேட்டரிங் பிஸினஸ்தான். என் கணவோரட சகோதரர், நண்பர்கள் கொடுத்து உதவின பணம்தான் மளிகை வாங்க மூலதனம். 'எப்படியெல்லாம் இருந்தோம்'ங்கற சுயபச்சாதாபத்தை தூக்கிப் போட்டுட்டு, 'எப்படியும் எழுந்துடுவோம்'ங்கற நம்பிக்கையோட உழைச்சோம். முதல்ல டிபன் மட்டும்தான் போட்டோம். ஒரே மாசத்துக்குள்ள 50 ரெகுலர் கஸ்டர்மர்ஸ் கிடைக்க, மூணுவேளை சாப்பாடுனு முன்னேறினோம். ஒரு நிமிஷம்கூட நாங்க ரெண்டு பேரும் 'ஹப்பா'னு அலுப்பா உட்கார மாட்டோம். நண்பர் ஒருத்தர் எங்களுக்காக லோக்கல் சேனல்ல விளம்பரம் செஞ்சார். இப்படி எங்கள சுத்தி இருந்த நல்ல உள்ளங்கள் கை கொடுக்க, நாலஞ்சு வருஷத்துல பிஸினஸ் ஸ்திரமாகியிருந்தது'' எனும் சுப்புலட்சுமிக்கு, அடுத்து காத்திருந்திருக்கிறது ஒரு ஸ்பீட் பிரேக்கர்.
''யூட்ரஸ் பிரச்னையால எனக்கு உடம்புக்கு சரியில்லாமப் போக, முன்ன மாதிரி வேலைகள் பார்க்க முடியாமப் போயிடுச்சு. என்னோட கைப் பக்குவமும், அவரோட கூட்டு உழைப்பும்தான் எங்க வெற்றிக்கு காரணங்கறதால, அவரால தனியா சமையலை கவனிக்க முடியாம, ரொம்பச் சிரமப்பட்டார். 'இனி இந்த பிஸினஸ் சரிப்பட்டு வராது'ங்கற நிலமை வந்தப்போ, 'டெய்லரிங் யூனிட் வைக்கலாம்'னு முடிவு பண்ணினோம். ஆனா, எங்க ரெண்டு பேருக்குமே தையல் தெரியாது'' என்ற சுப்புலட்சுமியை நாம் ஆச்சர்யமாகப் பார்த்தோம். கமலேஷ் பேசினார்...
''நான் ஒரு பஞ்சாபி லேடிகிட்ட டெய்லரிங் கத்துக்கிட்டேன். குஜராத், பாம்பேனு போய் வெரைட்டியா, சீப்பா மெட்டீரியல் வாங்கிட்டு வந்து தைக்க ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு டிரெண்டியா, அளவு கச்சிதமா இருந்த அந்த ஆடைகளுக்கு பெண்கள்கிட்ட ரொம்பவே வரவேற்பு. கஸ்டமர்கள் குவிஞ்சாங்க. சுப்புலட்சுமி கடையையும் கஸ்டமர்களையும் பார்த்துக்கிட்டாங்க. நான் டெய்லரிங் யூனிட்டை கவனிச்சுட்டேன். நம்பிக்கை தர்ற மாதிரி வருமானம் வர, பேங்க்ல 5 லட்சம் லோன் வாங்கி, 5 டெய்லர்களை வெச்சு கடையை விரிவுபடுத்தினோம்.
என் மனைவி புதுப் புது ஐடியா சொல்ல, நானும் அதைக் கிரியேட்டிவ்வா தைச்சேன். இப்ப 1,500 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க எங்ககிட்ட!'' என்று சந்தோஷப்படும் கமலேஷின் மகன் தற்போது பி.டெக் படிக்க, மகள் எட்டாவது படிக்கிறார்.
''கீழ விழுந்தப்போவெல்லாம்... 'இதுவும் கடந்து போகும்'னு நாங்க எழுந்தது, அயராது உழைப்பு, நல்ல நட்புகள்ங்கற காரணங்களோட... ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போனா இவரும், இவர் துவண்டு போறப்போ நானும் ஆத்மார்த்த ஆறுதலா இருந்ததும் முக்கிய காரணம்!''
- தொழிலிலும் அவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறது சுப்புலட்சுமி சொன்ன இந்த இல்லற சூத்திரம்!
படங்கள் சு.குமரேசன்
|