Published:Updated:

என் மனைவி !

என் மனைவி !

என் மனைவி !

என் மனைவி !

Published:Updated:

 
சத்யராஜ்
என் மனைவி !
என் மனைவி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் மனைவி

"மகேஸ்வரி... என் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய என் மனைவி!"

சத்யராஜின் வார்த்தைகள் முழுக்க நேசத்தின் வாசம்!

"என் மனைவி மகேஸ்வரியும், நானும் நெருங்கிய உறவினர்கள்தான். என் மனைவி பிறந்த அன்று என் பெற்றோருடன் சேர்ந்து நானும் மருத்துவமனையில் போய் அவரைப் பார்த்தேன். சின்னக் கண்களோடு, மின்னும் சிவப்பில், துளித்துளி புன்னகையில் இருந்த அந்த பாப்பா... இன்னும் என் கண்களில் உறங்குகிறது. என் மாமாவும் அத்தையும்... 'இதப்பாருடா, இப்பவே பொண்ணு பார்க்க வந்துட்டான் மாப்பிள்ளை' என்று கேலி செய்ய, வெட்கத்தால் என் முகம் இன்னும் சிவந்ததும் இனிமையான நினைவுகளாக இன்றும் நிற்கின்றன.

'வருஷம் 16' படம் போல, நிறைந்த கூட்டத்தைக் கொண்டது எங்கள் குடும்பம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு சேர வளர்ந்தோம். பாண்டி விளையாடினோம். சேர்ந்து பள்ளி சென்றோம். விடுமுறைகளில் ஊட்டி, குன்னூருக்கு உறவினர்கள் வீடுகளுக்குப் பறந்தோம். ஆனால், அந்த குழந்தைப் பருவத்தை... 'நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்' என்ற நினைப்பால் பாழாக்காமல், பால்ய நண்பர்களாக, நல்ல நண்பர்களாகவே இருந்தோம்.

காலங்கள் உருள, என் குடும்பத்தில் யாருமே எதிர்பார்க்காத விதமாக நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். முட்டி மோதி நான் திரையில் முகம் காட்டி, நாலாவது படம் செய்து கொண்டிருக்கும்போது, திருமணப் பேச்சு வந்துவிட்டது. அண்ணன் சிவகுமார், தான் பெண் தேடி அலைந்த கதையை, Ôஅவள் விகடன்Õ இதழில் Ôநான் வியக்கும் பெண்மை' கட்டுரையில் சொல்லியிருந்தது நினைவிருக்கும். அப்படி... சினிமாக்காரர்களுக்கு ஊர்ப்பக்கம் பெண் கிடைக்க தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், மகேஸ்வரி புண்ணியத்தால் இந்த சினிமாக்காரன் சிரமமில்லாமல் 'கணவன்' ஆனான்!

கல்யாணம் முடித்த கையோடு சென்னையில் வாழ்க்கை யைத் தொடங்கினோம். ஊர்ப்பக்கம் மகேஸ்வரி வீட்டை 'பண்ணையார் வீடு' என்பார்கள். எங்கள் வீட்டை 'ஜமீன்தார் வீடு' என்பார்கள். அந்தக் காலத்திலேயே என் அம்மாவும், மாமியாரும் கான்வென்டில் படித்தவர்கள். எங்கள் வட்டாரத்திலேயே ஸ்பென்ஸர் துரைக்கு அடுத்தபடியாக, எங்கள் தாத்தா நடராஜ காளிங்கராயருக்குத்தான் கார் இருந்தது. இப்படியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், எளிமைதான் என் அடையாளம். தானும் பழகிக்கொண்டார் மகேஸ்வரி.

புதுப்பெண், மாப்பிள்ளையாக இருந்தபோது அவ்வப்போது மாங்காடு அம்மன் கோயிலுக்கு நானும் மகேஸ்வரியும் பைக்கில் போவோம். 'எப்படியாவது சினிமாவில் முன்னுக்கு வரணும். அப்படி வந்தா உனக்கு வேண்டியதைச் செய்றேன்' என்று கடவுளிடம் டீலிங் பேசுவேன். ஒருகட்டத்தில் நாத்திகனாக மாறியபின்னாலும், என்னைப் புரிந்துகொண்டார் மகேஸ்வரி. 'உங்கள் இஷ்டம்...' என்று பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

இன்றுவரைக்கும் எங்கள் வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளுக்குகூட பஞ்சாங்கம், நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் பார்ப்பது கிடையாது. அதேசமயம், அவர் கோயிலுக்குச் செல்வார். சமயங்களில் தேவாலயங்களுக்குக்கூட செல்வார். அவரின் நம்பிக்கைகளை நான் புரிந்துகொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும், எதிர்ப்பதில்லை.

நான் ஒரு மிகச்சிறந்த சோம்பேறி. என் நிரந்தர வருமானம் என்பது ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற தென்னந்தோப்பு, வீட்டு வாடகை என்று சில விஷயங்கள் இருக்கின்றன. பணம் வரும் வேளைகளிலும்கூட அதை முதலீடாக, வருமானத்தை பெருக்கும் வழியாகவெல்லாம் எனக்குத் திட்டமிடத் துளியும் தெரியாது. அவருக்கு முடிகிற மட்டும் அதைப் பெருக்க முயற்சி செய்வார். 'ஊர் உலகத்தப் பாருங்க... எப்படியெல்லாம் சுதாரிக்கறாங்க. நீங்களும்தான் இருக்கீங்களே...' என்ற வசனங்களை எல்லாம் இதுவரை நான் கேளாதது, என் பாக்கியம். முக்கியக் காரணம், நாங்கள் இரண்டு பேரும் எதற்கும் பெரிதாக ஆசைப்பட்டது கிடையாது.

சினிமாவில் ஹீரோக்கள் ஒரே ஜம்ப்பில் முன்னுக்கு வந்து விடலாம். ஆனால், நம்மோடு சேர்ந்து ரேஸில் ஓடிய மற்ற கலைஞர்களுக்கு வெற்றி கொஞ்சம் தாமதமாகவே வரும். உடல்நலக் குறைவு, குழந்தைகளின் கல்விச் செலவுக்கு என்று அந்த நண்பர்கள் விழி பிதுங்கும்போது, அவசரமான நல்லது கெட்டதுகளுக்கு பணம் தேவைப்படும். என்னாலான சின்ன, பெரிய உதவிகளைச் செய்வேன். தானும் அதில் மகிழ்வார் மகேஸ்வரி.

பிள்ளைகளின் படிப்பு, அவர்கள் எதிர்காலம் போன்ற முக்கிய முடிவுகளில் எங்கள் வீட்டில் நான் வெறும் ஜனாதிபதிதான். அவர்தான் பிரைம் மினிஸ்டர். எல்லாவற்றையும் அழகாகத் தீர்மானிக்கிற, தீர்க்கிற சக்தி அவருக்குத்தான் உண்டு. சின்ன வயதில் அம்மாவிடம் நான் புதுச் சட்டை கேட்கும்போதுகூட, 'சுமதி என் சுந்தரிÕ படத்துல சிவாஜி போட்ட மாதிரி கட்டம் போட்ட சட்டை, 'நில் கவனி காதலி'ல ஜெய்சங்கர் போட்ட சட்டை... என்றுதான் கேட்பேன். இப்படி என்னுடைய விருப்பங்கள் எல்லாமே சினிமாவை சுற்றித்தான் இருக்கின்றன இப்போதும். இதில் வீட்டை நிர்வகிப்பது எப்படி முடியும்? அதனால்தான் பொறுப்பு அவர் கையில். வீடு கட்டும்போதுகூட, 'எனக்கு மொட்டை மாடி வேணும், பாத்ரூம்ல 'ஷவர்' வேணும்' என்று இரண்டை மட்டும் என் மனைவியிடம் கேட்டு வாங்க மட்டுமே தெரிந்தது எனக்கு.

ஒருநாள் இரவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சிபி தன் காதலைச் சொன்னான். நான், 'அந்த ரசத்தை எங்கிட்டே தள்ளி விடு' என்றேன் சகஜமாக. 'ஆயிரம் தடவை யோசி. அப்புறம் வா. கல்யாணம் செய்து வைக்கிறோம்' என்றார் என் மனைவி. வழிமொழிந்தேன் நான்.

'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிறார்கள். எப்பத்தான் அவன் மனுஷன்?' என்று கேட்டார் பெரியார். நான் கணவனாக இருப்பதைவிட, தன் துணையை மதிக்கிற நல்ல மனிதனாக இருப்பது முக்கியம் என்று விரும்புகிறவன். பெண் அடிமைத்தனத்துக்கு எதிரானவன். என் மனைவி ஒரு முறை, 'நான் ஸ்விம்மிங் பழகிக்கட்டுமா..?' என அனுமதி கேட்டார். 'என்னம்மா இது... இனிமே உங்களோட விருப்பங்கள் பற்றி எனக்கு தகவல் மட்டும் சொன்னா போதும். அனுமதி கேட்காதீங்க...' என்றேன். பெண்ணை மதிக்காத, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சமூகம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

நான் என் மனைவியிடம் கோபித்துக் கொள்ளும் ஒரே விஷயம், உடற்பயிற்சி செய்யாதது பற்றி மட்டும்தான். பெண்கள் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில், அவர்களின் உடல் நலத்தை தொலைக்கிறார்கள். எனவே, என் இந்தக் கண்டிப்பை மட்டும் அவர் புரிந்து கொள்வார்.

என் மனைவிதான் என் சிநேகிதி. எந்தத் தயக்கமும், மறைவும் இல்லாமல் அவரிடம் என்னால் இருக்க முடிகிறது. இப்போது இருக்கிற 'நான்', என் மனைவி இல்லாமல் இல்லை. பெண்களுக்கு வேண்டிய அன்பும், உரிமையும், மதிப்பும், சுய மரியாதையும் கிடைக்கும்போது, அவர்கள் நமக்காக மட்டுமே வாழ்கிறார்கள். என் மனைவி வாழ்கிறார் எனக்காக!"

படங்கள் கே.ராஜசேகரன்
சந்திப்பு நா.கதிர்வேலன்

என் மனைவி !
 
என் மனைவி !
என் மனைவி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism