Published:Updated:

மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !

மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !

மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !

மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !

Published:Updated:

 
ம.பிரியதர்ஷினி
மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !
மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனைவியை ஐ.பி.எஸ். ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன்!

"பள்ளிக்கூட படிப்பையே தாண்ட முடியாம தடுமாறிக் கிடந்த நான், இன்னிக்கு ஐ.பி.எஸ். அத்தனைக்கும் காரணம்... என் கணவர்!"

- பேரன்பும், பெருநன்றியும் வழிகின்றன அம்பிகா ஐ.பி.எஸ். வார்த்தைகளில்!

அம்பிகா, திண்டுக்கல்லில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த அறிவுப் பெண். வறுமை, அவருடைய படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடாமல் அவரை நிறைய படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காகவே அவரைத் திருமணம் செய்து கொண்டவர்தான் திருப்பதி. அவருடைய அக்கறைக்கு இன்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. 'இப்படியும் ஒரு கணவர்..!' என்று வியக்க வைக்கிறது இந்த வெற்றிக் கதை!

தற்போது ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். டிரெயினிங்கில் இருக்கும் அம்பிகா, தீபாவளிக்காக ஊருக்கு வந்திருந்தார்.

"திண்டுக்கல், செயின்ட் ஜோசப் கான்வென்ட்லதான் படிச்சேன். எங்கப்பாவுக்கு வொர்க்ஷாப்ல டிங்கர் வேலை. ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. ஏழ்மையான குடும்பம். ஆனாலும், படிப்புல நான் ரொம்பவே கெட்டி. டென்த்ல 477 மார்க்... டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட். எல்லா பேப்பர்லயும் என் போட்டோ வந்தது. அதுதான் என் வாழ்க்கைக்கு வெளிச்சமாகப் போகுதுனு அப்போ எனக்குத் தெரியாது..." என்று அம்பிகா சஸ்பென்ஸ் வைக்க, தொடர்ந்தார் கணவர் திருப்பதி.

"நானும் திண்டுக்கல்காரன்தான். பி.ஏ. முடிச்சுட்டு டெல்லி, திகார் ஜெயில்ல போலீஸ் கான்ஸ்டபிளா வேலை பார்த்துட்டு இருந்தேன். தமிழ்நாட்டுல இருந்து நிறைய பேரு ஐ.ஏ.எஸ். கோச்சிங் எடுக்க டெல்லிக்கு வருவாங்க. எஸ்.பி-யோட கார் டிரைவரா இருந்ததால, அப்படி கோச்சிங்க்குக்கு வர்ற, அவருக்கு வேண்டப்பட்டவங்க நிறைய பேரை அடிக்கடி சந்திக்கற வாய்ப்பு கிடைச்சுது. அப்போதான், 'நாம பெருசா ஒண்ணும் படிக்கல. நமக்கு வரப் போற மனைவியாச்சும் நல்லா படிச்சிருக்கணும். இல்லாட்டி நாமளே படிக்க வைக்கணும்'னு மனசுக்குள்ள ஒரு உறுதி வந்துச்சு.

அந்த சமயத்துலதான் அம்பிகாவோட போட்டோவை பேப்பர்ல பார்த்தேன். அவங்க எனக்கு சொந்தக்காரப் பொண்ணுதாங்கறதால, அவங்க வீட்டோட நிலமையும் எனக்குத் தெரியும். 'நல்லா படிக்கற பொண்ணு வறுமையால அடுப்பங்கரையில சுருங்கிடக் கூடாதே'னு மனசு பதறுச்சு. ஒரு கட்டத்துல, 'நாமளே அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, படிக்க வைப்போம்'னு முடிவெடுத்தேன். சொல்லப்போனா, அவங்களை படிக்க வைக்கறதுக்கு எனக்கு கிடைச்ச ஒரு வழிதான், கல்யாணம். ஒரு பொம்பளப் புள்ளைக்கு மூணாவது மனுஷனா நின்னு என்னதான் நாம நல்லது செய்யணும்னு நினைச்சாலும், அதை ஊரு நல்லதா பார்க்காது. 'என் பொண்டாட்டிய படிக்க வைக்கறேன்'னு சொன்னா, கேள்வி, கேலிக்கு இடமிருக்காது பாருங்க" என்றபோது, ஆச்சர்யம் எழுந்தது நமக்கு.

"தன் விருப்பத்தை எங்க வீடு தேடி வந்து அவர் சொன்னப்போ, முழுசா நம்பிக்கை வரல. என்கிட்ட தனியாவும் பேசினாரு. 'நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்'னு எல்லாம் சொல்லாம, டெல்லியில இருக்கற ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர், இந்தியா முழுக்க இருந்து அங்க படிக்க வர்ற பசங்க, அவங்களோட விடா முயற்சி, வெற்றினு எல்லாத்தையும் எங்கிட்ட விளக்கமா சொன்னார்.

'கல்யாணம்'ங்கற வார்த்தையெல்லாம் மறைஞ்சு, அப்போ அவர் எனக்கு ஒரு குருவாதான் தெரிஞ்சார். இறுதியா, 'உன் திறமையெல்லாம் வீணாயிடாம, உன்னை அப்படி ஒரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போக எனக்கு ஒரு வாய்ப்பு கொடு'னு முடிச்சுட்டு, டெல்லிக்குப் போயிட்டார். நானும் படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்" என்றவர் தொடர்ந்து படித்து, பிளஸ் டூ-வில் எடுத்தது 1,083 மதிப்பெண்கள். ஆனால், திருப்பதி கணித்தது போலவே அதற்கு மேல் படிக்க வைக்க வழியில்லாமல் தடுமாறியிருக்கிறது அம்பிகாவின் குடும்பம்.

"பிளஸ் டூ-வுக்கு அப்புறம்னு ஒரு பெரிய கேள்விக்குறியோட நின்னுட்டிருந்த என்னை கல்யாணம் செய்துக்கிட்டாரு. கல்யாணத்துக்காக சேர்த்து வெச்சிருந்த தொகையை அப்படியே என் படிப்புக்கு ஒதுக்கிட்டு, எளிமையா நடத்தினார் கல்யாணத்தை. உடனடியா, என்னை திண்டுக்கல், எம்.வி.எம். காலேஜ்ல பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் சேர்த்து விட்டார். ஸ்போக்கன் இங்கிலீஷ், ஐ.ஏ.எஸ். கோச்சிங்கான புக்ஸ§னு மெனக்கெட்டார். இதுக்காகவே திண்டுக்கல்லுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்ததோட, தினமும் காலையில நான் ஸ்பெஷல் கிளாஸ் போக, அவரே சமைச்சு, எனக்கும் லஞ்ச் கட்டிக் கொடுப்பாரு. இதுக்கு இடையில எங்க பொண்ணு மிருணாளினி பிறக்க, குழந்தை பிறந்த மூணாவது நாள் நான் பரீட்சை எழுத போனப்போ, அவர் தாயா இருந்து குழந்தையைப் பார்த்துக்கிட்டாரு. அந்த பேப்பர்ல நான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!" என்ற அம்பிகா வார்த்தைகளில் அன்பும், பெருமிதமும்.

"குழந்தைக்கு ஒண்ணரை வயசானப்போ, 'கோச்சிங் சென்டர்ல சேரணும்... டெல்லிக்கு கிளம்பு...'னு அவர் சொல்ல, 'குழந்தை..?'னு நான் பின் வாங்கப் பார்த்தேன். அவர் விடல. 'பாப்பாவை உங்க வீட்டுலயும், எங்க வீட்டுலயும் பத்திரமா பார்த்துக்குவாங்க... நீ படிப்பை மட்டும் மனசுல வெச்சுப் படி'னு டெல்லிக்கு கூட்டிட்டுப் போய், பிரைவேட் கோச்சிங் சென்டர்ல ஒரு பேப்பருக்கு 50 ஆயிரம் ரூபாய்னு கட்டி சேர்த்துவிட்டார். கிட்டத்தட்ட அவரோட அத்தனை வருஷ உழைப்போட சேமிப்பும், என் படிப்புக்காக கரைஞ்சிட்டு இருந்தது. ரொம்ப கவனத்தோட படிச்சேன். ஆனாலும், நாலு தடவை ஃபெயில். கணவரை ஏமாத்திட்ட குற்ற உணர்வு, என் குழந்தையைப் பிரிஞ்சு இருக்கற துயரம்னு எல்லாம் என்னை அழுத்த, விரக்தியோட ஊருக்கே திரும்பிட்டேன்" என்பவருக்கு... அதன்பின்தான் கிடைத்திருக்கிறது ஏணி!

"அப்பவும் துளி கோபமில்லாம, வருத்தமில்லாம ஆரம்பத்துல இருந்த அதே அக்கறை, அன்போட அவர் எனக்குக் கொடுத்த ஆறுதலும், ஊக்கமும் ரொம்ப பெருசு. என்னை படிக்க வெச்சு கடனாளியாகி நின்ன அவருக்காக கண்டிப்பா நாம சாதிச்சே ஆகணும்னு முடிவு பண்ணினேன். டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம் எழுதினேன். டி.எஸ்.பி. போஸ்ட்டிங் கிடைச்சது. கூடவே, சென்னையில இருக்கற சைதை துரைசாமி இன்ஸ்டிடியூட்ல கோச்சிங் சேர்ந்தேன். 'நம்ம திறமை, அவரோட அக்கறை... கண்டிப்பா ஜெயிக்கும்!'னு எனக்கு நானே உறுதியா சொல்லிட்டு, ஐந்தாவது முறையா சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினேன். பாஸ் பண்ணிட்டேன்!" எனும்போது அம்பிகாவின் கண்களில் ஈரம்.

"நான் ஜெயிச்சுட்டேங்கறதைவிட, என் கணவர் ஜெயிச்சுட்டார். ரிசல்ட் வந்தப்போ, 'என் வாக்கை காப்பாத்திட்டேன்! நிம்மதியா, சந்தோஷமா இருக்கு...'னு கலங்கின கண்களோட அவர் சொன்ன வார்த்தைகளை என் ஆயுளுக்கும் என்னால மறக்க முடியாது. இந்த டிரெயினிங் ஆகஸ்ட் மாசம் முடியுது. அதுக்கு அப்புறம் மகாராஷ்டிராவுல போஸ்டிங் போட்டிருக்காங்க. இடையில, எங்க ரெண்டாவது குழந்தை ஆர்யன் பிறந்திருக்கான். இப்போ அவர் ஹெட்கான்ஸ்டபிளா இருக்கார். 'குழந்தைங்கள நான் பார்த்துக்கறேன்... நீ கிளம்பு...'னு வழக்கம் போல வழியனுப்பறார். 'ஒவ்வொரு பெண்ணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு ஆண் இருப்பார்...'னு நான் சொன்னா, அது நூறு சதவிகிதம் பொருந்தும்ல..?!" என்றபடியே கணவரின் கண்களில் தேங்கும் கூச்சத்தை ரசிக்கிறார் அம்பிகா ஐ.பி.எஸ்!

நமக்கோ... வறுமைச் சூழலிலும் மனைவியை ஐ.ஏ.எஸ். ஆக்கி அழகு பார்க்கும் 'சூர்யவம்சம்' படத்தில் வரும் தேவயானி-சரத்குமார் ஜோடியை நிஜத்தில் பார்த்த திகைப்பு!

 

மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !
-படங்கள் வீ.சிவக்குமார்
மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !
மனைவியை ஐ.பி.எஸ்.ஆக்கிய கான்ஸ்டபிள் கணவன் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism