"நான் 32 வயதாகும் இல்லத்தரசி. பகலில் நன்றாக இருக்கும் பார்வை, இரவில் தடுமாறுகிறது. பார்க்கும் பொருள், உருவம், அசைவு எல்லாமே புலப்பட்டாலும், எதை உற்றுப் பார்க்கிறோமோ... அது மட்டும் தெளிவாக இல்லை. அடிக்கடி கண் வறண்டும் விடுகிறது. கண்மருத்துவரோ, 'பெரிதாக பிரச்னையில்லைÕ என்று கூறி சத்து மாத்திரைகளையும், டயட்டில் சில மாற்றங்களையும் பரிந்துரைக்கிறார். ஆனால், ஏதேனும் விபரீத பார்வைக் கோளாறாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. தெளிவுபடுத்துவீர்களா..?"
டாக்டர் ஆர்.வெங்கடேஷ்வர், சிறப்பு கண் மருத்துவர், துறையூர்
"நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு 'ரெட்னைட்டிஸ் பிக்மென்டோசா (Retinitis pigmentosa)' பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருபதுகளில் மாலைக்கண் சாயலில் ஆரம்பித்து, அதற்கான சிகிச்சைக்குக் கட்டுப்படாது முப்பதுகளின் இறுதியில் முக்கால்வாசிப் பார்வையை பறித்துவிடும் அபாயமுள்ள கண் பிரச்னை இது. முழுக்கவும் மரபு சார்ந்து வரக்கூடியது. இப்பிரச்னை இருப்பவர்கள் நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்தால், வாரிசுகளுக்கும் அது வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிடும். இந்தியாவில் இதற்கான நிவாரண சிகிச்சை முறைகள் குறைவு. வளர்ந்த நாடு களில் 'ரெட்டினல் சிப் இம்பிளான்ட் (Retinal Chip Implant)' என்ற நவீன சிகிச்சை பிரபலமாக இருக் கிறது.
அடுத்ததாக, 'ஆக்ஸிபிடல் கார்டெக்ஸ் (Occipital cortex)' என்ற பிரச்னையாகவும் இருக்கலாம். மூளையில், பார்வை செயல்களை கட்டுப்படுத்து வதற்காக இருக்கும் பாகத்தில் அடிபடுதல், கட்டி ஏற்படுதல், உயர் ரத்த அழுத்தத்தால் ரத்த ஓட்டம் குறைதல் போன்றவற்றால் கண் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். இதனால், எதை உற்று கவனிக்கிறோமோ... அது மட்டும் மங்கிவிடுவது உள்ளிட்ட பார்வைக் கோளாறுகள் வரலாம். ஸ்கேன் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டால், ஆபரேஷன் அல்லது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்றவை மூலம் நிவாரணம் பெறலாம்.
|